PET – CT ஸ்கேன் – பக்கவிளைவுகள், அபாயங்கள்
பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி – கம்ப்யூட்டட் டோமோகிராபி (PET – CT ) ஸ்கேன் என்பது, நமது உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களை ஸ்கேன் முறையில் படம் பிடிக்கும் சோதனை ஆகும். இந்தச் சோதனையில், ரேடியோடிரேசர் ஆக புளோரோ டியாக்ஸி குளுக்கோஸ் எனும் கதிரியக்க வேதியியல் பொருள் பயன்படுத்தப்படுகிறது.
பக்க விளைவுகள்:
PET – CT ஸ்கேன் சோதனை, பாதுகாப்பான சோதனைத் தான் என்றபோதிலும், இதிலும் பக்க விளைவுகள் மற்றும் அபாயங்கள் இருக்கின்றன. அந்த அபாயங்கள் மற்றும் பக்கவிளைவுகள் குறித்து, இந்தச் செய்தியில் விரிவாகக் காண்போம்…
ஒவ்வாமை :
PET – CT ஸ்கேன் சோதனையில் பயன்படுத்தப்படும் ரேடியோடிரேசர், சிலருக்கு ஒவ்வாமைப் பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. தோலில் அரிப்பு, படை நோய், சுவாசித்தலில் பிரச்சினை உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் ஆகும். சிலருக்கு அரிதாக அனாபைலாக்சிஸ் நிகழ்வு ஏற்பட்டு, அவர்களது மரணத்திற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
கதிரியக்க வீச்சு பாதிப்பு
PET – CT ஸ்கேன் சோதனையில் கதிரியக்க வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட நேரம்,கதிரியக்கத் தாக்குதலுக்கு உள்ளாகும் போது, அது புற்றுநோய் போன்ற இன்னபிற உடல்நலக் குறைபாடுகளுக்கு வழிவகுப்பதாக அமைந்து விடுகின்றன. PET – CT ஸ்கேன் சோதனை முறையில், மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்காத அளவிற்கே, கதிரியக்கம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
குமட்டல் :
PET – CT ஸ்கேன் சோதனை மட்டுமல்லாது, எந்தவொரு சோதனை மேற்கொண்டாலும், வாந்தி, குமட்டல், மயக்கம் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுவது சாதாரணமான ஒன்று தான். இத்தகைய பக்கவிளைவுகள், சிறிது நேரத்தில் சரியாகி விடும் என்பதால், அச்சப்படத் தேவையில்லை.
தலைவலி :
PET – CT ஸ்கேன் சோதனையின் போது தலைவலி ஏற்படுவது சாதாரண நிகழ்வு தான். தலைவலி உணர்வு, சில மணி நேரங்களில் சரியாகி விடும்.
தலைச்சுற்றல் :
PET – CT ஸ்கேன் சோதனைக்குப் பிறகு, சிலருக்குத் தலைச்சுற்றல் உணர்வு ஏற்படுவது இயல்பானது தான். சில மணிநேரங்களில். இந்த உணர்வு சரியாகி விடும்.
வலி அல்லது அசவுகரியம்
PET – CT ஸ்கேன் சோதனையின் போது, ரேடியோடிரேசர் ஊசி மூலம் உடலில் செலுத்தப்பட்ட பிறகு, அந்த இடத்திலோ அல்லது, உடலின் மற்ற பகுதிகளிலோ, வலி அல்லது அசவுகரியம் ஏற்படலாம்.
இத்தகைய பக்கவிளைவுகள் சாதாரணமானது என்றபோதிலும் , அது தீவிரமாக இருக்கும்பட்சத்தில், மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.
அபாயங்கள்
PET – CT ஸ்கேன், வலி இல்லாத சோதனை முறை என்றாலும், இதிலும் சில அபாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தச் சோதனையில் பயன்படுத்தப்படும் ஸ்கேனர், கதிரியக்கத்தை வெளியிடவில்லை என்றாலும், அணுக்கதிரியக்கப் பொருளான புளோரோ டியாக்ஸி குளுக்கோஸ், ரேடியோடிரேசர் ஆக செயல்படுவதால், கதிரியக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் ஆகும்.
PET – CT ஸ்கேன் சோதனையின் போது, நமது உடலில் வைக்கப்படும் குழாய் போன்ற கருவி, நடுக்க உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. சில நோயாளிகளுக்கு, கிளாஸ்ட்ரோபோபியா நிகழ்வையும் உண்டாக்குகிறது. இதுகுறித்து, உரிய மருத்துவரிடம் கலந்தாலோசித்து, தேவைப்படின் குறைந்த அளவில் வேலியம் (டயாஜிபம்) அல்லது அட்டிவன் (லோராஜ்பம்) பயன்படுத்தலாம்.
உடல்பருமன்
அதிக உடல்பருமன் கொண்டவர்களால், PET – CT ஸ்கேன் இயந்திரத்தில் சரியாகப் படுக்க வைக்க முடியாத நிலை உருவாகும் பட்சத்தில், அதில் உள்ள ஸ்கேனரால் துல்லியமாகப் படம் பிடிக்க இயலாமல் போகும். PET – CT ஸ்கேனர்ப் படுக்கைகள், 450 பவுண்டு எடையைத் தாங்கும் வகையிலும், அதன் டயாமீட்டர் 27.5 அங்குலம் (70 சென்டிமீட்டர்) வரை இருக்கும். இதன் அளவு, எல்லையைவிட அதிகரிக்கும் போது, தெளிவான, துல்லிய படங்கள் எடுக்க இயலாத சூழல் உருவாகும்.
மேலும் வாசிக்க : CT ஸ்கேன் சோதனைக்குத் தயாராவது எப்படி?
தாய்மைக் காலம்
குழந்தைப் பிரசவித்த பெண்கள், PET – CT ஸ்கேன் சோதனைக்கு 24 மணிநேரத்திற்கு முன்பாகவே, குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்திவிட வேண்டும். தேவைப்பட்டால், தாய்ப்பாலை, பாட்டில்களில் சேகரித்து வைத்து குழந்தைக்குக் கொடுக்கலாம்.
பெண்கள் கர்ப்பிணிகளாக இருக்கும் சமயத்தில் அவர்களுக்கு எவ்வாறு CT ஸ்கேன் செய்வதில்லையோ, அதுபோன்று, PET – CT ஸ்கேன் சோதனையையும் அந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது.
நீரிழிவு பாதிப்பு
PET – CT ஸ்கேன் சோதனையைச் செய்வதற்கு முன்னதாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 200 mg/dL என்ற அளவிற்குள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதைவிட அதிகமாக இருக்கும்பட்சத்தில், ரேடியோடிரேசரால், செல்களைத் துல்லியமாகக் கண்டறிய இயலாத நிலை ஏற்படும்.
அதேபோல், உங்கள் உடலில் இன்சுலின் ஹார்மோன் அளவும் அதிகமாக இருக்கும் போது, அதிகளவில் ரேடியோடிரேசர்ப் பயன்படுத்தப்படுவதால், சோதனை முடிவுகள் சரியான அளவு கொண்டதாக இருக்கும் வாய்ப்பு குறைவு.
உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் மருத்துவரைக் கலந்தாலோசித்து அதற்கேற்ற உணவு முறைகள் மருத்துவ முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இத்தகைய அபாயங்கள் மற்றும் பக்கவிளைவுகளை நன்கு புரிந்து கொள்ளும் பட்சத்தில், தவறான சோதனை முடிவுகள் வரும் வாய்ப்பு குறையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.