Pet ஸ்கேன் vs CT ஸ்கேன் – இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
புற்றுநோய் செல்களில் நிகழும் அசாதாரண வளர்சிதை மாற்றங்களை வேறுபடுத்திக் காட்ட Pet ஸ்கேன் பயன்படுகிறது. புற்றுநோய் கட்டிகள் இருக்கும் இடத்தை அறிய CT ஸ்கேன் மேற்கொள்ளப்படுகிறது.
Pet ஸ்கேன்
புற்றுநோய் இதயம் தொடர்பான குறைபாடுகள், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், நாளமில்லா சுரப்பி தொடர்பான குறைபாடுகள் உள்ளிட்டவற்றை, அதன் துவக்க நிலையிலேயே, கண்டறியும் பொருட்டு, மிகக் குறைந்த அளவில் கதிரியக்கப் பொருளை, ரேடியோடிரேசர் என்ற வடிவத்தில் செலுத்தி, மேற்கொள்ளப்படும் சோதனையை, Pet அல்லது பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன் சோதனை என்கிறோம்.
நமது உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களில் நிகழும் சாதாரண மற்றும் வளர்சிதை மாற்ற நிகழ்வுகளை, கண்டறிய உதவும் Pet ஸ்கேன் முறையில், கதிரியக்கப் பொருளான புளோரோ டியாக்ஸி குளுக்கோஸ் (FDG) ரேடியோடிரேசராகப் பயன்படுத்தப்படுகிறது. CT ஸ்கேன் போன்ற சோதனைகளின் முடிவுகள் திருப்தி அளிக்காத பட்சத்தில், செல்களில் நிகழும் அசாதாரணமான செயல்பாடுகளைக் கண்டறிய, நாம் Pet ஸ்கேன் முறையை நாடுகின்றோம்.
Pet ஸ்கேன், நோய்ப் பாதிப்பை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுவதோடு மட்டுமல்லாது, அதற்குரிய சிகிச்சைகள் மேற்கொண்ட பிறகு, நோய்ப்பாதிப்பின் தன்மையைக் கண்டறிய உதவுகிறது.
CT ஸ்கேன்
இதுவும் ஒருவகை ஸ்கேன் முறை ஆகும். இந்த நிகழ்வில், எக்ஸ்ரே கதிர்களின் உதவியுடன், எலும்புகள், தசைகள், உறுப்புகள் மற்றும் தமனிகள் உள்ளிட்டவற்றைக் குறுக்கு வெட்டுப்படங்களாக எடுத்து, பின் அதில் உள்ள பாதிப்புகளை ஆராய்வர்.
சாதாரணமான எக்ஸ்ரே சோதனைகளில், எக்ஸ்ரே கதிர்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணித்துக் குறிப்பிட்ட இடத்தை மட்டுமே படம்பிடிக்கும். இரண்டு பரிமாண இப்படங்களில். அதிக அடர்த்தியான பகுதி வெண்மை நிறத்தில் காட்சியளிக்கும்.
CT ஸ்கேன் முறையில், எக்ஸ்ரே கதிர்கள், 360 டிகிரி கோணத்தில் முப்பரிமாண படங்களாக எடுத்து நமக்குத் தருகின்றன.
எந்தச் சோதனைச் சிறந்தது?
CT மற்றும் MRI ஸ்கேன்களை ஒப்பிடும் போது, PET ஸ்கேன் முறை, உறுப்புகள் மற்றும் திசுக்களின் செல் அளவில் நிகழும் மாற்றங்களைக் கண்டறியப் பயன்படுகிறது.
உங்கள் மருத்துவர் ஒரே நேரத்தில் PET மற்றும் CT ஸ்கேன்களை ஒருங்கே எடுத்து, கிடைக்கும் முப்பரிமாண படங்களைக் கொண்டு, நோய்ப் பாதிப்பின் தீவிரத்தை ஆராய்வார்.
தற்போதைய நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் ஹைபிரிட் PET/MRI ஸ்கேன்கள் சேர்ந்தே எடுக்கப்படுகின்றன. இந்தப் புதியத் தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்கப்படும் படங்கள், மூளை, கழுத்து, தலை, கல்லீரல் போன்ற நுண் உறுப்புகளில் பரவி உள்ள புற்றுநோய் பாதிப்புகளையும் கண்டறிய உதவுகின்றன.
மேலும் வாசிக்க : PET – CT ஸ்கேன் : அறிந்ததும்… அறியாததும்…
PET ஸ்கேன் CT ஸ்கேன் இடையே உள்ள வேறுபாடுகள்:
PET ஸ்கேன்
- புற்றுநோயின் பாதிப்பு, இதயம் மற்றும் மூளை உள்ளிட்டவற்றில் ஏற்படும்
- பாதிப்புகளை விரைந்து கண்டறிய உதவுகிறது. மூளை மற்றும் இதயம் பணிகளைக் கண்காணிக்கின்றது.
- இந்தச் சோதனையின் போது பயன்படுத்தப்படும் கதிரியக்கம், உடலிலேயே சிறிது தங்கி விடுகிறது.
- மற்ற சோதனைகளை ஒப்பிடும் போது, புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிகிறது.
இந்தச் சோதனை நீண்ட கால அளவு கொண்டது ஆகும்.- புற்றுநோய் பாதிப்பு, உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி உள்ளதா என்பதை அறிய மேற்கொள்ளப்படுகிறது.
- குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே, இந்த வசதி உள்ளது.
- அதிகச் செலவு கொண்டது
- வலி அல்லது அசவுகரியம் உள்ளது.
CT ஸ்கேன்
- உடல் திசுக்களில் நிகழும் மாற்றங்களைக் கண்டறிய மேற்கொள்ளப்படுகிறது
- கதிரியக்கம் உடலில் தங்குவது இல்லை
- செலுத்தப்படும் எக்ஸ்ரே கதிர்கள், உடலின் பாகங்களைப் படம் எடுக்கின்றன.
- ஸ்கேன் எடுக்க 2 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
- புற்றுநோய் பாதிப்பின் நிலைகளை அறிய உதவுகிறது.
- பெரும்பாலான மருத்துவமனைகளில் இந்தச் சேவை உள்ளது.
- குறைந்த செலவிலேயே முடித்து விடலாம்.
- வலி இல்லாத செயல்முறை
PET மற்றும் CT ஸ்கேன்களை ஒருங்கே எடுத்து அதை முப்பரிமாணப் படங்களாக மாற்றி நோயின் பாதிப்பைக் கண்டறிந்து விரைந்து சிகிச்சையைத் துவங்கலாம்…