முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனைகள் நல்லதா?
நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் போது, நோய் குறித்த சிந்தனை எழ வாய்ப்பில்லை. நோய்க்கான அறிகுறி தென்படாவிட்டால், அதுகுறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. இந்த நவீன யுகத்தில், வயது மற்றும் பாலினம் வேறுபாடின்றி எல்லாவித நோய்களும் அனைவரையும் பாதிக்கின்றன. இந்த நோய்கள் வருவதைத் தடுக்க, தடுப்புமுறைகளே உகந்ததாக உள்ளன.
நோய்களைக் கண்டறிய உதவும் சோதனைகள், என்ன வகையான முடிவுகளைக் காட்டும் என்ற பய உணர்வு இருக்கலாம். இந்தப் பயத்தால் மருத்துவப் பரிசோதனைகளைத் தவிர்ப்பது சரியான நடைமுறையாக இருக்காது.மருத்துவப் பரிசோதனை முறைகள், உங்கள் உடலில் உள்ள குறைபாடுகள் குறித்த எச்சரிக்கையை, உங்களுக்கு முன்கூட்டியே வழங்கிவிடும். உதாரணமாகப் பெண்களை அச்சுறுத்தி வரும் மார்பகப் புற்றுநோயின் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய உதவும் மேமோகிராபி சோதனையின் மூலம், கடந்த 10 ஆண்டுகளில், இறப்பு விகிதம் 41 சதவீதம் குறைந்து உள்ளது. மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பது இப்போது தெரிகிறதா?
மருத்துவப் பரிசோதனையானது, நோயை முன்கூட்டியே கண்டறிவதால், சிகிச்சையை விரைந்து வழங்கும் வகையிலான சூழலை உருவாக்குவதோடு மட்டுமல்லாது, நோய் தீவிரம் அடைவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றது.
ஒருவர் எந்த வகையான நோயின் பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பதை, அதன் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு முன்பாகவே, கண்டறிய உதவும் சோதனையையே, ஸ்கீரினிங் சோதனை என்கிறோம். இது நோயின் எந்தக் கட்டத்தில் உள்ளோம் என்பதைக் கண்டறியும் நோக்கத்துடன் இந்தச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
நோய்ப்பாதிப்பு இருக்கின்றதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய இந்தச் சோதனைகள் பயன்படுவதில்லை. இருப்பினும், நீங்கள் நோய்ப்பாதிப்பின் எந்தக் கட்டத்தில் இருக்கின்றீர்கள்? உங்களுக்குக் கூடுதல் சோதனைகள் ஏதும் தேவைப்படுகின்றதா என்பதைக் கண்டறிய இந்தச் சோதனை, பேருதவி புரிகிறது.
உங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே பொதுவாகக் காணப்படும் உடல்நலக் குறைபாடுகள்
உடல்நலக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் வாழ்க்கைமுறையை மேற்கொள்வோர் ஆகியவற்றை முன்கூட்டியே கண்டறிய, இந்த ஸ்கிரீனிங் சோதனைகள் உதவுகின்றன.
வகைகள்
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மேமோகிராபி சோதனைகளைப் போன்று, ஸ்கிரினீங் சோதனைகள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைக்கும் ஸ்கிரீனிங் சோதனைகள்:
நீரிழிவுப் பாதிப்பு
உயர் ரத்த அழுத்தம்
அதிக அளவிலான கொழுப்பு
மார்பகப் புற்றுநோய் பாதிப்பு
பெருங்குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
உடற்பருமன்
ஆண்களுக்கு ஏற்படும் புராஸ்டேட் புற்றுநோய்
நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உறுப்புகளின் ஆரோக்கியம்
ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு உள்ளிட்டவைகளை, ஸ்கிரீனிங் சோதனையின் மூலம் முன்கூட்டியே கண்டறிய முடியும்.
ஏன் தேவை?
ஸ்கிரீனிங் சோதனைகள், உடல்நலக் குறைபாட்டிற்கான சிசிச்சைக்கான வழிகாட்டியாகச் செயல்படுகின்றன. இந்தச் சோதனையின் நன்மைகள் கீழே தொகுக்கப்பட்டு உள்ளன.
சிக்கல்களை அடையாளம் காண உதவுகிறது
உடல்நலக் குறைபாட்டின் அறிகுறிகள் வெளிப்படாத நிலையிலும், குறைபாட்டின் சிக்கல் குறித்த அறிவைப் பெற உதவுகிறது. நீங்கள் ஆரோக்கியமாக உணரும்போதிலும், உங்கள் உடலில் ஏதாவது ஒரு குறைபாடு வெளிப்படாத நிலையில் இருக்கலாம் என்பதே மறுக்கமுடியாத உண்மை.
முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது
உடல்நலப் பாதிப்புகளை அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய உதவுகிறது. இதனால் சிகிச்சைகளை விரைவாகத் துவங்கி, சீக்கிரமாக நிவாரணம் பெற முடிகிறது.இது இறப்பு மற்றும் நோயுற்ற விகிதங்களைக் கணிசமாகக் குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
கவலைகளைத் தடுக்கிறது
பரம்பரை நோய்கள் விவகாரத்தில், உங்களுக்கும் இந்த நோய்ப் பாதிப்பு ஏற்படுமா என்பதை அறிவதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். இது இயல்பானதே.நோய்ப்பாதிப்பு ஏற்படுவது குறித்த கவலை, மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். இதுபோன்றச் சூழ்நிலைகளில், ஸ்கிரீனிங் சோதனையின் முக்கியத்துவத்தை நீங்கள் உணரலாம். நோய்ப் பதிப்பு இல்லை என்பதை நீங்கள் முன்கூட்டியே கண்டறிய இந்தச் சோதனை உதவுவதால், மன அழுத்தம் இல்லாத, ஆரோக்கியமான வாழ்க்கையை நீங்கள் வாழ உதவுகிறது.
தேவையற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவிர்க்க உதவுகிறது
ஒரு குறிப்பிட்ட நோய்ப்பாதிப்பைக் கேள்விப்படும்போது, அந்தப் பாதிப்பு, உங்களுக்கு வருவதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். இது உங்களது நடப்பு வாழ்க்கைக்குக் கூட பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமையலாம். ஸ்கிரீனிங் சோதனையின் மூலம், அந்தப் பாதிப்பு வருமா என்பதை அறிந்து, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபட்டாலே போதுமானது.
கட்டுப்பாட்டில் வைக்கின்றது
நோய்ப்பாதிப்பின் வசம் நீங்கள் சிக்கும் போது, அதைஎதிர்த்துப் போரடுவதற்கு மருத்துவ உதவி அவசியமாகிறது. இந்த நோய்ப் பாதிப்பை, நீங்கள் துவக்க நிலையிலேயே கண்டறிந்தால், சிகிச்சையைச் சரியான நேரத்தில் அளிக்க வழிவகுப்பதோடு மட்டுமல்லாது, விரைவாகக் குணம் பெறவும் உதவுகிறது. இது உடல்நலன் விவகாரத்தில், உடல் ஆரோக்கியம் மீது சிறந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது.
முக்கியப் பகுதிகளில் கவனம்
உங்களது உடல்நலத்தில் ஏற்பட்டு உள்ள ஆபத்துகளை, முன்கூட்டியே கண்டறிய ஸ்கிரீனிங் சோதனை உதவுகிறது. அந்த ஆபத்தான பகுதிகளின் மீது மருத்துவர்க் கூடுதல் கவனம் செலுத்தினாலே, அந்த ஆபத்துகளில் இருந்து விரைவில் நிவாரணம் பெற இயலும்.
பாதிப்புகளின் அறிகுறிகளை முன்கூட்டியே அறிதல்
உடல்நலப் பாதிப்புகளுக்கு அவசரச் சிகிச்சைத் தேவைப்படுவதற்கு முன்னதாகவே, அதன் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கேற்ப துரிதமாகச் செயல்படுவதன் மூலம், கடைசிநேர இன்னல்களிலிருந்து நீங்கள் உங்களைத் தற்காத்துக் கொள்ள இயலும்.
மேலும் வாசிக்க : உறக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் உத்திகள்
துவக்கநிலைச் செயல்பாடு
உடல்நலக் குறைபாடுகள் எளிமையானதாக இருப்பினும் அல்லது பெருங்குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் ஆக இருந்தாலும், இதைத் துவக்க நிலையிலேயே கண்டறிந்தால், குறைந்த அளவிலான சிகிச்சை முறையிலேயே இதற்குத் தீர்வு கண்டுவிட முடியும்.
தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவுகிறது
உங்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, உடலின் பாதுகாப்பு அம்சங்களும் குறைந்து கொண்டே வருகின்றன. இத்தகைய காலகட்டத்தில், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களிலிருந்து உங்களைக் காக்க ஸ்கிரீனிங் சோதனைகள் உதவுகின்றன.உடலில் கொழுப்பு அதிகளவில் உள்ளதைக் கண்டறிந்தால், உணவுமுறை உள்ளிட்டவைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள இயலும்.
உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதே, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான திறவுகோல் என்பதை நாம் அனைவரும் அறிவோம். உடல்நலப் பாதிப்புகளை முன்கூட்டியே அறிய உதவும் ஸ்கிரீனிங் சோதனையானது, நீங்கள் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழப் பேருதவி புரிகிறது.