வைட்டமின் மற்றும் மினரல்கள் பற்றாக்குறை அறிகுறிகள்
உங்கள் நகங்கள் சமீபகாலமாக எளிதில் உடைந்து விடுகிறதா அல்லது முடி உதிர்தல் நிகழ்வு அதிகமாக உள்ளதா? இத்தகைய அறிகுறிகள் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளின் (மினரல்கள்) பற்றாக்குறையைக் காட்டுகின்றன.
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள், நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில் இருந்து, நம் உடல் உறிஞ்சிக் கொள்கின்றன. மோசமான உணவுத்தேர்வுகள், ஊட்டச்சத்து உறிஞ்சும் திறன் குறைபாடு, மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றால் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் குறைபாடு ஏற்படுகிறது.
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள்
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் என்பவை உடலின் இயல்பான செயல்பாடுகளுக்குத் தேவையான நுண்ணூட்ட சத்துகள் ஆகும்.இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. ஆனால், நம் உடலால் இவற்றை உற்பத்தி செய்ய முடிவதில்லை. 13 வகையான வைட்டமின்கள் ஒவ்வொன்றும் அதற்கான பணிகளைச் சிறப்பாகச் செய்கின்றன. இந்த வைட்டமின்களில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால், நமது உடல் பாதிப்பிற்கு உள்ளாகி, ஆரோக்கியம் கேள்விக்குரியதாக மாறிவிடுகிறது.
இரும்பு, தாமிரம், அயோடின், துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட கனிம ஊட்டச்சத்துகள், மிகச்சிறிய அளவிலேயே தேவைப்படுகின்றன. உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உறுதுணைப் புரியவல்ல இந்தத் தாது உப்புகள், நமது உடலில் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதால், நாம் சாப்பிடும் உணவில் இருந்தே இதனைப் பெற்று வருகிறோம். இந்த ஊட்டச்சத்துக்கள் பல உணவுகளில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக: பழங்கள், கொட்டைகள், காய்கறிகள், விதைகள், முட்டைகள் மற்றும் இறைச்சி.ஒரே உணவில், அனைத்து வகையான ஊட்டச்சத்துகளும் இல்லாதகாரணத்தினால், அனைத்து வகையான உணவுகளையும் நாம் சாப்பிடுவது என்பது அவசியமானதாக உள்ளது.
வைட்டமின் மற்றும் மினரல் பற்றாக்குறையின் அறிகுறிகள்
வைட்டமின் மற்றும் மினரல்கள் பற்றாக்குறையானது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், தவறான உணவுத்தேர்வுகள், மருத்துவ நிலைமைகள், ஒவ்வாமை மற்றும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட வாழ்க்கைமுறைக் காரணிகளால் இந்தப் பற்றாக்குறை நிகழ்வானது ஏற்படுகிறது.
முடி உதிர்தல் மற்றும் எளிதில் உடையும் தன்மையிலான நகங்கள்
வைட்டமின் குறைபாடு, முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. வைட்டமின் B7 அல்லது பயோட்டின் குறைபாடானது, முடியில் பிளவு மற்றும் பலவீனமான, உடையக்கூடிய நகங்களாக மாற்றுகிறது. நீங்கள் உட்கொள்ளும் உணவை, ஆற்றலாக மாற்றுவதில் இந்த வைட்டமின்கள் அவசியமாகின்றன.
வைட்டமின் B7 குறைபாடு பாதிப்பு உள்ள நபர்கள் சோர்வு, தசைப்பிடிப்பு, ஃபைப்ரோமியால்ஜியா, கை, கால்களில் கூச்ச உணர்வினால் அவதிப்படுவர். பயோட்டின் குறைபாட்டைத் தவிர்க்க மீன், இறைச்சி, முட்டை, கீரை, கொட்டைகள், விதைகள், புரோக்கோலி, முழு தானியங்கள், வாழைப்பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 50 வயதிற்கு உள்ளான பெரியவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், முடி உதிர்தல் பிரச்சினைக்கு உள்ளாகின்றனர். முடி உதிர்தல் நிகழ்விற்குப் பின்னால், மினரல்களின் குறைபாடுகளும் உள்ளன. உடலில் போதிய இரும்புச்சத்து இல்லாதநிலையானது, முடி உதிர்தலை ஊக்குவிக்கிறது.
வாய்ப்புண்கள் மற்றும் ஈறுகளில் ரத்தம்
வாய்ப்புண்கள் மிகுந்த வலி உணர்வுடன் இருப்பதால், உங்களுக்குப் பிடித்தமான உணவைச் சாப்பிடுவது என்பது சவாலான நிகழ்வாக இருக்கும். வைட்டமின் B மற்றும் இரும்புச்சத்துக் குறைபாட்டால் வாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோன்றும் புண்களை, கீரை, பருப்பு வகைகள், கொட்டைகள், முழு தானியங்கள், கோழி, உள்ளிட்டவற்றைச் சாப்பிடுவதால் அதன் பரவலைத் தடுக்கலாம்.
ஈறுகளில் ரத்தம் கசியும் நிகழ்வானது, வைட்டமின் C குறைபாட்டால் நிகழ்கின்றது. வைட்டமின் C சத்தானது, எலும்புகள், தசைகளை வலிமையடைய செய்வது மட்டுமல்லாது, சோர்வு, பலவீன உணர்வைத் தடுக்கிறது. சிட்ரஸ் பழங்களில், வைட்டமின் C அதிகம் உள்ளது.
இரத்தசோகை
வைட்டமின் B12, இரும்புச்சத்துக் குறைபாட்டினால், இரத்தசோகைப் பாதிப்பானது ஏற்படுகிறது. ரத்த சிவப்பணுக்கள் உடலின் பல பகுதிகளுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்கின்றன. இவற்றின் அளவு குறையும்போது, தலைச்சுற்றல், தோல் வெளிறிப்போதல், சோர்வு மற்றும் பலவீனம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மாலைக்கண் நோய்
நாம் இரவில் தெளிவாகப் பார்ப்பதற்கு, ரோடாப்டின் என்ற நிறமி பேருதவி புரிகிறது. இது விழித்திரைச் செல்களில் காணப்படுகின்றன. வைட்டமின் A சத்தானது, இந்த நிறமியின் சரியான தொகுப்புக்கு உதவுகிறது. வைட்டமின் A குறைபாடு ஏற்படும்பட்சத்தில் மங்கலான பார்வை அல்லது முழுமையான மாலைக்கண் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் பாதிப்பு தீவிரமடையும்போது, கண்ணின் கார்னியா பகுதியைச் சேதப்படுத்தி, குருட்டுத்தன்மைக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.
கெரடோமலாசியா என்பது கண்ணின் கார்னியா பகுதியில் நிகழும் மேகமூட்டம், புண்கள், பாக்டீரியல் தொற்று ஆகும். கீரை வகைகள், கேரட், பால், பீட்ரூட், முட்டை, மீன் உள்ளிட்டவற்றை, உணவுமுறையில் இணைத்துக் கொண்டால், இப்பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் வாசிக்க : கார்ப்பரேட் ஆரோக்கிய திட்டத்தின் நன்மைகள்
தேவையற்ற மனநிலை மாற்றங்கள்
வைட்டமின் குறைபாடு நிகழ்வானது, மனநிலை ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்துகின்றன. வைட்டமின் B9 (போஃலேட்), மெக்னீசியம் குறைபாட்டினால், கவலை, மனச்சோர்வு, மனநிலை மாற்றங்கள் உள்ளிட்ட மனநல பாதிப்புகளுடன் தொடர்புடையவை ஆகும். கீரை, பருப்பு வகைகள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்டவை, மனச்சோர்வின் அபாயத்தைக் குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
சிறுநீரகக் கற்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தம், சிறுநீரில் ரத்தம் வருதல், அடிக்கடி அடிவயிற்றுவலி ஏற்படுதல் உள்ளிட்டவை, பொட்டாசியம் குறைபாட்டிற்கான அறிகுறிகள் ஆகும். பொட்டாசியம் குறைபாடானது, உடலில் அதிகத் திரவ இழப்பிற்குக் காரணமாக அமைகின்றன. இதன்காரணமாக, எலும்பு, தசைகள் பலவீனம் அடைகின்றன. இதனால்,பக்கவாதம் ஏற்படுவதற்கான பாதிப்பு அதிகம் உள்ளது வாழைப்பழங்கள். கொய்யா, பால், பீன்ஸ் உள்ளிட்டவற்றை, உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம், இந்தக் குறைபாட்டைத் தவிர்க்கலாம்.
சரியான சரிவிகித உணவுமுறையை மேற்கொண்டு வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் பற்றாக்குறையைத் தவிர்த்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நல்வாழ்வு வாழ்வோமாக…