• Home/
  • Blog/
  • பார்கின்சன் நோய்க்கான உறக்க வழிமுறைகள் அறிவோமா?
An elderly man in bed experiencing sleep disturbances caused by Parkinson’s disease.

பார்கின்சன் நோய்க்கான உறக்க வழிமுறைகள் அறிவோமா?

உறக்கம் என்றால் என்ன என்று நீங்கள் யாரைக் கேட்டாலும், ஒரு பொதுவான பதிலையே அவர்கள் அளித்திருப்பர். அவர்களது பதில் என்னவாக இருக்கும் என்றால், மயக்க நிலைக்குச் சென்று, உடல் தளர்வாக இருக்கும் நிலை என்பதாகவே இருக்கும்.

ஆனால், விஞ்ஞான கோட்பாட்டின்படி, இது மனம் மற்றும் உடல் சார்ந்த நிலை ஆகும். உடல் தளர்வு மற்றும் மாற்றப்பட்ட நினைவுகளின் அடிப்படையில் உறக்கத்தில் உள்ள நபர்க் குறிப்பிடப்படுகிறார். உறக்க நிகழ்வின்போது, உணர்ச்சிகள், தசைகளின் செயல்பாடுகள் கணிசமான அளவிற்குக் குறைக்கின்றன. இந்தச் சூழலில், சுற்றுப்புறங்களுடனான தொடர்பு குறைகிறது. உறக்க நிலையின் போது வெளிப்புறத் தூண்டுதல்களுக்கான எதிர்வினைகள், குறிப்பிட்ட நபர் விழித்திருக்கும் நிலையுடன் ஒப்பிடும்போது குறைவாகக் காணப்படுகின்றன.

உறக்கப் பாதிப்பை ஏற்படுத்தும் பார்கின்சன் நோய்

பார்கின்சன் நோய்ப்பாதிப்பிற்கு உள்ளானவர்கள், போதிய உறக்கம் இன்றி அவதிப்படுவர். பார்கின்சன் நோயாளிகளுக்குப் போதிய அளவிலான உறக்கம் இல்லாத நிலை அல்லது உறக்க நிகழ்வில் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு இருப்பர்.

பார்கின்சன் நோயாளிகளுக்கு எதனால் உறக்கக் குறைபாடு பாதிப்பு ஏற்படுகிறது?

பகல் நேரத்தில் உறங்குதல், REM உறக்க நடத்தைக் குறைபாடுகள், இரவில் அடிக்கடி சிறுநீர்க் கழித்தல், கால்களின் இயக்கங்களில் சுணக்கங்கள் உள்ளிட்டவை உறக்க நிகழ்வில் பாதிப்பினை ஏற்படுத்தவல்லப் பொதுவான காரணிகள் ஆகும்.

பார்கின்சன் நோயாளிகள் உறக்கப் பாதிப்புகளைக் குறைக்கும் வழிமுறைகள்

தியான பயிற்சி

தியான பயிற்சியானது, மிகவும் பழமையான அதேசமயம் மிக முக்கியமான வழிமுறையாக உள்ளது. இது பார்கின்சன் நோயாளிகள் படும் அவஸ்தைகளைக் குறைப்பது மட்டுமல்லாது, அமைதியான மற்றும் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற வழிவகுக்கிறது. கவலை, மன அழுத்தம், மனச்சோர்வு, உறக்கக் கலக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் உரிய நிவாரணம் அளிக்கிறது.

பார்கின்சன் நோயாளிகள், தினமும் சிறிது நேரம் தியான பயிற்சியை மேற்கொண்டு வந்தால், அவர்கள் உடலாலும், மனதாலும் நிம்மதியாகவும், மன அழுத்தம் குறைவதையும் உணர்வார்கள். இதன்காரணமாக, அவர்களின் மன ஆற்றலும் மேம்படும்.

சிறந்த உறக்கத்தைப் பெறுவதற்கான பயனுள்ள வழிமுறைகள்

அறையின் சூழலில் மாற்றம் மேற்கொள்ளவும்

அமைதியான மற்றும் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற, உங்கள் படுக்கை அறையின் சூழலை மாற்ற வேண்டும். மனதிற்குப் பிடித்த இயற்கைக் காட்சிகள், குழந்தைகளின் படங்கள் உள்ளிட்டவற்றை, அங்கு ஒட்டுவதன் மூலம், மன அமைதியைப் பெறலாம். இந்த நடைமுறையானது, உங்களுக்கு நல்ல உறக்கத்தை வரவழைக்கும்.

அறையைச் சுத்தம் செய்யவும்

உங்கள் படுக்கையறை உங்களுடையது. அவை நீங்கள் வசிக்கும் அறை அல்லது படிப்பு அறைப் போல் அல்லாமல், படுக்கை அறையைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம் ஆகும். உறங்குவதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், உங்கள் படுக்கை அறையை, சரியான உறக்கச் சூழலுக்குத் தகுதியானதாக மாற்றுவது சிறந்ததாகும்.

எல்லா ஒழுங்கீனங்களையும் அகற்றவும்

உங்கள் படுக்கை அறையில் உள்ள அனைத்து ஒழுங்கீனங்களையும் அகற்றிச் சிறப்பாக ஒளிபடும்படி, வண்ணத்திலான படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தவும். ஒரு நல்ல மென்மையான தலையணை, போர்வை எடுத்து எல்லாவற்றையும் ஒழுங்காக ஏற்பாடு செய்ய வேண்டும்.

படுக்கையறையில் மின்னணுச் சாதனங்களின் பயன்பாட்டைத் தவிர்க்கவும்

மனித மூளை, மிகவும் புத்திசாலித்தனமானது. எனவே நீங்கள் உறங்கச் செல்லும்போது, மொபைல், லேப்டாப், ரேடியோ போன்ற மின்னணுச் சாதனங்களைப் படுக்கை அறையில் இருந்து ஒதுக்கி வைக்கவும். இவற்றின் அதிர்வுகள் அல்லது ஒலிகளால் கவனம் சிதறும் வாய்ப்புகள் அதிகம்.

இருட்டு அறை

இருள், நல்ல உறக்கத்திற்கு முக்கியப்பங்கு அளிப்பனவையாக உள்ளது. எனவே உறங்கும் போது, உங்கள் படுக்கை அறையை, இருட்டாக வைத்திருக்க வேண்டும்.

அமைதியான சூழல்

உங்கள் படுக்கையறையை அமைதியான சூழலில் வைத்திருப்பதன் மூலம், நிம்மதியான உறக்கத்தை எதிர்பார்க்க இயலும்.

Wooden diffuser and glowing candles symbolize aromatherapy for better sleep in Parkinson's patients.

அரோமாதெரபி

சில நல்ல நறுமணங்கள், சிறந்த உறக்கத்தை வரவழைப்பனவாக உள்ளதாக, ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்து உள்ளது.

சிறந்த உறக்கப் பழக்கத்தைப் பராமரிப்பதற்கான வழிமுறைகள்

போதிய அளவிலான உறக்கத்தைப் பெற ஒவ்வொரு நாளும் சிறந்த மற்றும் சுகாதாரமான வழக்கத்தைப் பராமரிப்பது அவசியமாகும். உறங்கச் செல்வதற்கு முன் பிடித்த புத்தகங்களைப் படித்தல், இசையைக் கேட்டல், வெதுவெதுப்பான நீரில் குளித்தல் போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுவதன் மூலம், ஆழ்நத உறக்கத்தைப் பெற இயலும்.

தொந்தரவு செய்வதற்கான விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்

நல்ல உறக்கத்தைப் பெற விரும்புபவர்கள், உறங்கச் செல்வதற்கு முன் காஃபின், தேநீர், காபி, புகையிலை உள்ளிட்ட விஷயங்களைத் தவிர்த்தல் சாலச் சிறந்தது.

உடற்பயிற்சிப் பழக்கம்

நல்ல உறக்கத்தைப் பெற, உடற்பயிற்சி சிறந்த வழிமுறை ஆகும். காலை வேளையில் சிற்சில உடற்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம், இரவுநேரத்தில் அசத்தலான உறக்கம் வரும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வாசிக்க : பார்கின்சன் நோயின் அறிகுறி, சிகிச்சையை அறிவோமா?

உடலைப் பகல் வெளிச்சத்திற்கு உட்படுத்துங்கள்

பகல் வேளையில் உங்கள் உடலை அதிக வெளிச்சத்திற்கு உட்படுத்தி வர வேண்டும். பகல் நேரத்தில் நிலவும் பிரகாசமான ஒளியின் வெளிப்பாடு, இரவு நேரத்தை, இனங்கண்டறிய உடலுக்கு உதவுகிறது. இதனால், இருட்டாக இருக்கும் போது உறங்க வேண்டும் என்ற உத்தரவு, மூளைக்குள் உருவாகிறது. இதன்மூலம், இரவில் சிறந்த உறக்கம் சாத்தியமாகிறது.

வசதியான உறக்கச் சூழல்

சிறந்த உறக்கத்திற்கு, நல்ல மெத்தை, நல்ல தலையணை மிகவும் அவசியம் ஆகும். உறக்கத்தை மேம்படுத்த படுக்கை அறையைக் குளிர்ச்சியாகவும், வசதியாகவும், அமைதியாகவும் வைத்திருப்பது நல்லது.

படுக்கை அறையில் செல்லப்பிராணிகளைத் தவிர்க்க வேண்டும்

நீங்கள் செல்லப்பிராணி பிரியராக இருந்தாலோ, அதனுடன் சேர்ந்து உறங்கும் பழக்கம் இருப்பின் அதனைக் கைவிடுவது நல்லது. பார்கின்சன் நோய்ப்பாதிப்பிற்கு உள்ளானவர்கள், நிதானமான மற்றும் சிறந்த உறக்கத்தைப் பெறுவது அவசியம் ஆகும். சிறந்த உறக்கத்தைப் பெறுவதனால் மட்டுமே, நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் சீராகும். படுக்கையறையில், செல்லப்பிராணிகள் இருக்கும்போது அவைகள் எழுப்பும் ஒலிகளின் காரணமாக, உங்களின் உறக்கம் பாதிக்கப்படலாம் என்பதால், படுக்கையறையில் செல்லப்பிராணிகளைத் தவிர்த்தல் நலம்.

பகல்நேர உறக்கத்தைத் தவிர்க்கவும்

முடிந்தவரைப் பகல் நேர உறக்கத்தைத் தவிர்க்க வேண்டும் அல்லது உறக்கம் தேவைப்பட்டால், அதிகபட்சம் 30 நிமிடங்கள் கால அளவிற்கு மட்டுமே உறங்க வேண்டும்.

உறக்கம் வரவில்லை எனில் படுக்கையறையை விட்டு உடனே எழுந்துவிட வேண்டும்

உறக்கம் வரவில்லை எனில், உடனடியாகப் படுக்கையை விட்டு எழுந்துவிட வேண்டும். சிறிய நடைப்பயிற்சி அல்லது மெல்லிய இசையைக் கேட்பதன் மூலம், மீண்டும் உறக்கம் உங்களைத் தழுவும் சூழல் உருவாகும்.

இசைச் சிகிச்சை

பார்கின்சன் நோயாளிகள், இரவு உறங்கச் செல்வதற்கு முன், மெல்லிய இசையைக் கேட்பது நல்லது. இது சிறந்த உறக்கத்திற்கு உறுதுணைப் புரிவதோடு மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

குறைந்த அளவு நீர் அருந்தவும்

பார்கின்சன் பாதிப்பு நோயாளிகள், இரவில் அடிக்கடி சிறுநீர்க் கழிக்கும் பாதிப்பால் அவதிப்பட்டுக் கொண்டு இருப்பர். இவர்கள், உறங்கச் செல்வதற்கு முன் அதிக நீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இரவில் மருந்துகளை எடுத்துக் கொள்பவராக இருப்பின், குறைந்த அளவிலான நீரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, சிறந்த உறக்கத்தைப் பெற்று, பார்கின்சன் நோயாளிகளுக்கு இருக்கும் உறக்க நிகழ்வில் இருக்கும் பாதிப்பினை வேரறுத்து, அவர்களும் இனிய நல்வாழ்க்கை வாழ வழிவகுப்போமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.