தொலைமருத்துவத்தில் அணியக்கூடிய சாதனங்களின் பங்கு
மருத்துவத் துறையில் நிகழும் அபரிமிதமான மாற்றங்களைக் கண்டு உலகமே வியந்து நிற்கிறது. முன்னொரு காலத்தில் அதிசயமாகப் பார்க்கப்பட்ட தொழில்நுட்பமானது, தற்போதைய நிலையில், நவீன மருத்துவத்தின் அடிப்படையாக மாறி உள்ளது. தொலைமருத்துவம் மற்றும் தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறைகளில், அணியக்கூடிய சாதனங்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது.
தற்போதைய நவீனயுகத்தில், இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட கைக்கடிகாரம் நேரம், இதயத்துடிப்பு, நடைகளின் எண்ணிக்கை மற்றும் உறக்கத்தின் அளவை மதிப்பிடுகிறது.இத்தகைய தொழில்நுட்பம் சார்ந்த சாதனங்கள், சரியான நேரத்தில் நோயைக் கண்டறிகின்றன. இதன்மூலம் சரியான சிகிச்சை உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படுவதால் வாழ்க்கைத்தரமும் மேம்படுகிறது.
மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் விளைவாக வந்துள்ள புதுவரவுகளான தொலைநிலை நோயாளி கண்காணிப்பு (RPM) மற்றும் டெலிஹெல்த் எனப்படும் தொலைமருத்துவ முறையானது, மக்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்று உள்ளன.
நோயாளி, இருக்கும் இடத்தில் இருந்தே, அவரின் உடல்நலத் தரவுகள் சேகரிக்கப்பட்டு, அதை, வேறு இடத்தில் உள்ள மருத்துவ நிபுணர்களுக்கு, எலெக்ட்ரானிக் முறையில் அனுப்பப்படும் நுட்பமே, RPM அல்லது தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறை என்றழைக்கப்படுகிறது.
எலெக்ட்ரானிக் மற்றும் தொலைதொடர்பு நுட்பங்களின் மூலம் மருத்துவச் சேவைகள் மற்றும் தகவல்களைப் பங்கீடு செய்வதை, டெலிஹெல்த் அல்லது தொலைமருத்துவம் என்கிறோம்.
அணியக்கூடிய தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி
அணியக்கூடிய தொழில்நுட்பம் சமீபத்திய வளர்ச்சி அல்ல. இது பல நூற்றாண்டுகள் பழமையான வரலாறு கொண்டது.17ஆம் நூற்றாண்டிலேயே, பாக்கெட் கடிகாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. 1980ஆம் ஆண்டுகளில், கால்குலேட்டரின் பயன்பாடு இருந்தது.
2002ஆம் ஆண்டில் புளூடூத் ஹெட்செட்
2004ஆம் ஆண்டில் கோப்ரோ எனப்படும் அணியும் வகையிலான கேமரா
2009 – உடல் ஆரோக்கியத்தை மேம்படித்தும் Fitpit. இதன்மூலம் உடலின் செயல்பாடுகள், இழந்த கலோரிகளை அளவிட்டது.
இந்த நவீனயுகத்தில், மினியேச்சரையேசன், அதிகரித்த செயலாக்கச் சக்தி, மேம்பட்ட பேட்டரி திறன் உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்த சாதனங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. இன்றைய நிலையில் அணியக்கூடிய தொழில்நுட்பம் பலவகைப்பட்டது. இதயத்துடிப்பு மற்றும் உறக்க முறைகளைக் கண்காணிக்கவல்ல ஃபிட்னஸ் டிராக்கர்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஸ்மார்ட் கண்ணாடிகள், ECG மானிட்டர்கள் போன்றவை இதில் அடங்கும்.
தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறை (RPM)
தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறை என்பது, மருத்துவச் சேவை நிகழ்வில், உருமாறும் அணுகுமுறையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நோயாளி இருக்கும் இடத்தில் இருந்தே உடல்நலத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இத்தரவுகள் எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வேறொரு இடத்தில் உள்ள மருத்துவ நிபுணருக்கு அனுப்பப்படுகின்றன. நிபுணர் இத்தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, உரிய சிகிச்சை முறையினை நோயாளிக்குப் பரிந்துரைச் செய்வார்.இந்த முறையானது, நோயாளிக்கு, மருத்துவ நிபுணருக்குமான புவியியல் சார்ந்த இடைவெளியைக் குறைக்கிறது. இது மூன்று முக்கிய படிநிலைகளைத் தன்னகத்தே கொண்டு உள்ளது.
முதலில் நோயாளியின் உடல்நலத் தரவுகளைச் சேகரிக்க வேண்டும். இதில் அணியக்கூடிய தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது.அணியக்கூடிய சாதனங்களின் மூலம் நோயாளியின் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஆக்சிஜன் செறிவு போன்றவற்றைக் கணக்கிடுகின்றன. இதன்மூலம், நோயாளியின் ஆரோக்கியம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சேகரிக்கப்பட்ட இந்தத் தரவுகள், சுகாதாரச் சேவை வழங்குநருக்கு அனுப்பப்படுகின்றன. அணியக்கூடிய சாதனங்களால் அளவிடப்பட்ட தரவுகள் வயர்லெஸ் மூலம் உடனடியாகப் பகுப்பாய்விற்கு அனுப்பப்படுகின்றன.ஸ்மார்ட்போன் வழியாகவே பெரும்பாலும், இந்தத் தரவு போக்குவரத்து நிகழ்கின்றது.
பெறப்பட்ட தரவுகள், அதற்கென உள்ள பிரத்யேக மென்பொருளின் உதவியுடன், பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் நோயாளியின் உடல்நலத்தில் ஏதேனும் அசாதாரணமான மாற்றங்கள் உள்ளனவா, உடனடி சிகிச்சை ஏதேனும் தேவைப்படுகின்றதா என்பதைக் கண்டறிய முடியும். சில தருணங்களின், உடல்நலப் பாதிப்புகளைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
தொலைநிலை நோயாளிக் கண்காணிப்பு முறையை, அதிகச் செயல்திறனுடனும், மேற்கொள்வதற்கு எளிதாகவும், நோயாளிக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையினதாக மாற்றியதற்கு, அணியக்கூடிய தொழில்நுட்பத்தின் பங்கு அளப்பரியது எனலாம். இது நோயாளிகளின் உடல்நலம் குறித்த தரவுகளை, குறித்த நேரத்தில் ஆராய்ந்து, உரிய சிகிச்சையைத் தக்கநேரத்தில் மேற்கொள்ள ஆவனச் செய்கிறது.
தொலைமருத்துவம்
தொலைமருத்துவம் என்பது, விர்ச்சுவல் எனப்படும் மெய்நிகர் மருத்துவர் நுட்பம், தொலைநிலை நோயாளி கண்காணிப்பு, எலெக்ட்ரானிக் முறையிலான உடல்நலம் சார்ந்த பதிவுகள், டிஜிட்டல் சுகாதார நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியது ஆகும்.
மருத்துவத் துறையில் உள்ள பாரம்பரியத் தடைகளை, சமாளிக்கும் வகையில், தொலைமருத்துவம் உள்ளது. மருத்துவச் சேவை வழங்கும் மையங்களில் இருந்து தொலைதூரத்தில் உள்ளவர்கள், மலைப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு மருத்துவச் சேவைகளைப் பெற இது பேருதவி புரிகிறது.
தொலைமருத்துவம் மற்றும் அணியக்கூடிய தொழில்நுட்பமானது, ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளாக உள்ளன. அணியக்கூடிய சாதனங்கள், நோயாளியின் உடல்நலம் குறித்தான தரவுகளைச் சேகரிப்பது மட்டுமல்லாது, தொலைமருத்துவத்தின் உயிர்நாடியாக விளங்குகின்றன. நோயாளியிடமிருந்து அணியக்கூடிய சாதனங்களின் உதவியால் பெறப்பட்ட தரவுகளை, மருத்துவ நிபுணர்கள், மற்றவர்களுடன் உடனடியாகப் பகிர்ந்து கொள்ள முடியும். மெய்நிகர் முறையிலான ஆலோசனைகளின் மூலம், சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தி, கவனிப்பை மேலும் மெருகேற்றிக் கொள்ள இயலும்.
அணியக்கூடிய தொழில்நுட்பத்தின் நன்மைகள்
சுய மேலாண்மையை மேம்படுத்துகிறது
அணியக்கூடிய தொழில்நுட்பமானது, நோயாளியின் உடல்நலம் சார்ந்த நிகழ்நேரக் கருத்துகளைக் கண்டறிய உதவுகிறது. இதன்மூலம், நோயாளியும், மருத்துவம் சார்ந்த நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஆரோக்கியமான சிகிச்சை முறைகளைத் தேர்வு செய்யவும், மருந்து மற்றும் மருத்துவத் திட்டங்களைப் பின்பற்றும் பொருட்டு, மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க உதவுகிறது.
நோய்ப்பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிகிறது
நோயாளியின் உடல்நலம் சார்ந்த தரவுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதன் மூலம், அசாதாரண மாற்றங்கள் ஏதும் இருந்தால், அதனை உடனடியாகக் கண்டறியலாம். இதன்மூலம், நோய்ப்பாதிப்பு முற்றுவதற்கு முன்பே, சரியான சிகிச்சைகளை மேற்கொண்டு, நோயாளியின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகின்றது. இதன்காரணமாக, அதிகளவிலான செலவினமும் தவிர்க்கப்படுகிறது.
சுகாதார அணுகுமுறையை மேம்படுத்துகிறது
அணியக்கூடிய தொழில்நுட்பமானது, தொலைமருத்துவத்துடன் கைகோர்த்து, மருத்துவச் சேவைகளை, நோயாளியின் வீட்டிற்கே கொண்டுவந்து சேர்த்துவிடுகிறது. தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு, இந்த அணுகுமுறையானது மிகுந்த பயனளிப்பவையாக உள்ளன. இது நோயாளிகள், அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லும் வாய்ப்பைக் குறைக்கிறது.
மருத்துவச் செலவினங்களைக் குறைக்கிறது
நோய்ப்பாதிப்புகளை, முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, நோய்ப்பாதிப்புகள் முளையிலேயே தடுக்கப்படுவதால், மேம்பட்ட சிகிச்சைகள் தவிர்க்கப்படுகின்றன. இதன்காரணமாக, அதுதொடர்பான செலவினங்களும் குறைகின்றன.
தரவுகளின் துல்லியத்தன்மை
அணியக்கூடிய சாதனங்களானது, நோயாளியின் உடல்நலம் சார்ந்த தரவுகளைத் தொடர்ச்சியாக எடுப்பது மட்டுமல்லாது, அதன் துல்லியத்தன்மையையும் பேணிக் காக்கின்றன. இந்தத் துல்லியமான தரவுகளானது, நோயாளிக்கு என்ன வகையான சிகிச்சைத் தேவைப்படுகின்றது என்பதை மருத்துவர்கள் அறிந்துகொள்ள உதவுவது மட்டுமல்லாது, கவனிப்பின் செயல்திறனையும் அதிகரிக்கிறது.
சவால்கள்
தரவுகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு
அணியக்கூடிய சாதனங்கள், நோயாளிகளின் உடல்நலம் சார்ந்த மற்றும் அவர்களின் தனிப்பட்ட தரவுகளைச் சேகரிக்கின்றன.இந்தத் தரவுகள் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்வி எழுகின்றது. இந்தத் தரவுகளைப் பாதுகாப்பாகவும், அதன் தனியுரிமைக் காக்கப்பட வேண்டியது கடும் சவாலானதாக உள்ளது.
மேலும் வாசிக்க : நேர மேலாண்மைத் திறன்களை மேம்படுத்தும் வழிமுறைகள்
தரவுகளின் துல்லியம்
எல்லாவகையான அணியக்கூடிய சாதனங்களும், துல்லியமான தரவுகளைக் கணக்கிடும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. இது தவறான முடிவுகளுக்கும் வழிவகுத்துவிடும்.
பயனர்களின் இணக்கம்
தொலைநிலை நோயாளி கண்காணிப்பு மற்றும் தொலைமருத்துவ நிகழ்வுகளில், அணியக்கூடிய சாதனங்கள், அளப்பரிய பங்கினை வழங்கி வருகின்றன. இதன்காரணமாக, நோயாளிகள் இதனை முற்றிலும் சார்ந்து இருக்கும் சூழல் ஏற்படுகின்றது. இது இல்லாத நிலை ஏற்படும் போது, நோயாளிகளுக்குக் கவலை உள்ளிட்ட விரும்பத்தகாத உணர்வுகள் ஏற்படுகின்றன.
தொலைநிலை நோயாளி கண்காணிப்பு மற்றும் தொலைமருத்துவ முறைகளில், அணியக்கூடிய தொழில்நுட்பமானது பல்வேறு வகைகளில் துணைநிற்கின்றன. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உடல்நலப் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…