நீரிழிவு நோயைப் பயணத்தின்போது நிர்வகிப்பது எப்படி?
பயணம் மேற்கொள்வது என்பது அனைவருக்கும் பிடித்தமான விஷயம் ஆகும். பயணம் நம்மை உற்சாகமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைக்கிறது. மேலும், உலகின் கலாச்சாரங்கள், உணவு வகைகள் மற்றும் புதிய தகவல்களை அறிய உதவுகிறது.
குறிப்பிட்ட மருந்துகள், உணவு வகைகளைச் சாப்பிட்டு வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு, பயண நிகழ்வு என்பது மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. சரியான திட்டமிடலை மேற்கொண்டு, பயண நிகழ்வுகளைத் திறம்பட நிர்வகிப்பதன் மூலம், பாதுகாப்பான மற்றும் மன அழுத்தம் இல்லாத சுகமான பயணங்களை மேற்கொள்வது சாத்தியம் என வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.
மருத்துவர் / ஊட்டச்சத்து நிபுணரைக் கலந்தாலோசியுங்கள்
நீரிழிவு நோயாளிகள், பயணத்தைத் துவக்குவதற்கு முன்னர், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரைத் தொடர்பு கொள்வது அவசியம். ஏனெனில், அவர்ப் பயண நிகழ்வின்போது, உங்கள் உடலில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப, மருந்துகளின் அளவு, உணவுப் பழக்கத்தைச் சரிசெய்யும் நடவடிக்கைகளை மருத்துவர் மேற்கொள்வார்.
அனைத்து ஆவணங்களையும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் என்ன வகையான நோய்ப்பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அதிலும் குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் தங்களது மருத்துவ கையேட்டை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். இதில் உடல்நலம் மற்றும் மருந்து விவரங்கள் இருக்க வேண்டும்.உணவு ஒவ்வாமைப் பாதிப்பும் இருப்பின், அந்தப் பாதிப்பு குறித்து மருத்துவரிடம் தெரிவிக்க மறக்காதீர்கள்.
முக்கியமான மருந்துகள் மற்றும் உபகரணங்களை எப்போதும் கைவசம் இருக்கவும்.
பயணத்தின் போது பொருட்கள் காணாமல் போகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதால், எனவே முக்கியமான மருந்து வகைகளை இரண்டு செட்களாகப் பிரித்துக் கொண்டு அதனை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு இடங்களில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். குளுக்கோமீட்டர், தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்புச் சாதனம், இன்சுலின் பம்ப், சர்க்கரை அளவைக் கண்டறிய உதவும் ஊசிகள், பேட்டரிகள் போன்ற உபகரணங்களையும் கூடுதலான அளவில் வைத்துக் கொள்வது நல்லது.
இன்சுலின் செயல்திறன், அதன் வெப்பநிலையைப் பொறுத்தது ஆகும். எனவே அதை அதிக வெப்பம் அல்லது குளிரில் இருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியம் ஆகும்.
உடலில் நீர்ச்சத்தைப் பராமரிக்கவும்
நீரிழப்பு நிகழ்வானது, உடலின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை வெகுவாகப் பாதிக்கின்றன. விமானம், அதிக உயரத்தில் சொல்லும்போது, காற்றழுத்தம் குறைவதால், உடலில் நீரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம் உள்ளது. காபி, தேநீர் உள்ளிட்ட சர்க்கரைப் பானங்களைக் கூடுமானவரைத் தவிர்க்கவும்.
நடைப்பயிற்சி
உடல் செயல்பாடுகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்வகிக்கப் பேருதவி புரிகின்றன. அடிக்கடி நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள், நீண்ட நேரமாக ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதைத் தவிர்க்கவும். அதிக நேரம் உட்கார நேர்ந்தால், பாத சுழற்சி மேற்கொள்ளுங்கள். இறுக்கமான சாக்ஸை அணிவதன் மூலம், பாத சுழற்சியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, சிரை அடைப்பு எனப்படும் ஆழமான நரம்பு த்ராம்போசிஸ் பாதிப்பையும் தடுக்கிறது.
பயணக் காப்பீடு அவசியம்
நீரிழிவு தொடர்பான அவசர நிலைகளுக்கான பயணக் காப்பீடு எடுப்பது அவசியம். மருத்துவத் தேவைகளை உள்ளடக்கிய விரிவான காப்பீட்டை உறுதி செய்யுங்கள்.நீங்கள் பயணம் செய்யும் இடத்தில், மருத்துவ வசதிக்கான அணுகலை, உங்கள் காப்பீடு வழங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
நீங்கள் விமான பயணம் மேற்கொள்வதாக இருந்தால்
பயணத்திற்கு 2 முதல் 3 மணிநேரங்களுக்கு முன்பாகவே, விமானநிலையத்திற்குச் சென்றுவிட வேண்டும்
மருந்துகள் அனைத்தும் பாதுகாப்பாக, சீலிடப்பட்ட கவர்களில் வைக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். சோதனையின் போது, அவைகள் புறக்கணிக்கப்பட்டால், உங்கள் நிலையை உரியமுறையில் எடுத்துக் கூறவும்.
குளுக்கோஸ் மீட்டர்கள், லான்செட்டுகள் உள்ளிட்டவை அதன் தயாரிப்பு நிறுவனப் பெயருடன் இருப்பது அவசியம் ஆகும்.
நீங்கள் குளுக்கான் டேப்லெட் மருந்துகளை எடுத்துச் செல்வதாக இருப்பின், அதன் ஒரிஜினல் கண்டெய்னர்களிலேயே எடுத்துச் செல்வது நல்லது.
இன்சுலின் மருந்துகளை, லக்கேஜ்களில் போடாமல், கைப்பையிலேயே வைத்துக் கொள்வது நல்லது. லக்கேஜ்களில் போடும்போது மாறும் வெப்பநிலையால், அதன் செயல்திறன் பாதிக்கப்படக் கூடும்.
விமான பயணத்தின் போது, உடலில் போதுமான நீரேற்றம் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
நீங்கள் உணவு சாப்பிடுவதற்கு முன் இன்சுலின் மருந்து எடுத்துக் கொள்பவராக இருந்தால், வழக்கமான நேரத்தில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். ஏனெனில், விமான பயணத்தின் போது, தாமதம் ஏற்படுவது வழக்கமான நடவடிக்கை என்பதால், அவர்கள் உணவு அளிக்கும் நேரம் மாறுபடும். எனவே, உணவு உங்களுக்கு வழங்கப்படுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னர், இன்சுலின் மருந்தை எடுத்துக் கொள்வது நல்லது.
மேலும் வாசிக்க : நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு வகைகள்
கூடுதல் குறிப்புகள்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். புதிய இடங்களில் காலநிலைக்கு ஏற்ற உணவு வகைகளை உட்கொள்ளும்போது, சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம்.அவ்வப்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதிப்பதன் மூலம், சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க இயலும்.
எப்போதும் செருப்புடனேயே இருக்க வேண்டும். ஏனெனில், காலில் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
மருத்துவ நிலைகளை முன்கூட்டியே எச்சரிக்கைச் செய்யும் பிரேஸ்லெட்களை எப்போதும் அணிந்து இருக்க வேண்டும்.
புதிய இடங்களைச் சுற்றிப்பார்க்கச் செல்லும்போது, கூடுமானவரை, ஸ்னாக்ஸ் எனப்படும் நொறுக்குத்தீனிகளை நீங்களே கொண்டு செல்வது நல்லது. வெளியில் விற்கப்படும் ஸ்னாக்ஸ் வகைகளைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது.
புதிய நிகழ்வுகளில் ஈடுபடும்போது அடிக்கடி கால்களைப் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது. கால்களில் ஏதாவது அரிப்பு, எரிச்சல் உணர்வு இருப்பின் உடனடியாக அதற்கேற்ற சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோய்ப் பாதிப்பின் முதன்மையான அறிகுறியே, கால்களில் ஏதாவது பாதிப்பு ஏற்படுவதுதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பயண நிகழ்வின்போது, மேற்கண்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, நீரிழிவுப் பாதிப்பைத் திறம்பட நிர்வகித்து, வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்வோமாக…