நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு வகைகள்
நீரிழிவு நோய்ப்பாதிப்பை நிர்வகிப்பதில், உணவுமுறையானது முக்கியப்பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோய்ப்பாதிப்பு அல்லது அதற்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் என அனைவருக்கும், ஆரோக்கியமான உணவுமுறை என்பது மிகவும் இன்றியமையாததாகும். குறைந்த கார்போஹைட்ரேட், கலோரிகள் மற்றும் கிளைசீமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவுகளே நீரிழிவு நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. கிளைசீமிக் இண்டெக்ஸ் என்பது உணவு இரத்த சர்க்கரையை உயர்த்தும் வேகத்தின் அளவீடு ஆகும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள், அனைவரும் அதற்கான சில உணவுமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. நீரிழிவு நோயைச் சிறந்த முறையில் நிர்வகிக்க விரும்புபவர்கள், கீழ்க்கண்ட உணவு வகைகளை, தங்களது உணவு அட்டவணையில் இணைத்துக் கொள்வது நன்மைபயக்கும்.
ஆரோக்கியமான உணவு வகைகள்
ஆளி விதைகள்
ஆளி விதைகளைத் தொடர்ந்து தங்களது உணவுமுறையில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு, நீரிழிவு நோயின் அபாயம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆளி விதைகளில் மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்டுள்ளன. ஆளி விதைகள், குறைந்த அளவிலான கிளைசீமிக் இண்டெக்ஸ் மதிப்பையே கொண்டு இருப்பதால், அவை, நீரிழிவு நோய் நிர்வாகத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. உடல் ஆரோக்கியம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை மேலாண்மைக்கு, தினமும் ஒரு தேக்கரண்டி ஆளி விதைகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
பீன்ஸ்
சத்தான உணவு வகைகளில் ஒன்றாக, பீன்ஸ் விளங்குகிறது என்பதை யாராலும் மறக்கவோ, மறுக்கவோ இயலாது. பீன்ஸ் வகைகளில், அதிகளவு புரதமும், நார்ச்சத்தும் உள்ளது. பீன்ஸ், சைவ உணவுப் பிரியர்களுக்கு, அசைவ உணவு சாப்பிடுவதன் பலனைத் தருவது மட்டுமல்லாது, நீரிழிவு நோயாளிகளுக்கும், நல்ல உணவாக விளங்குகிறது. மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்டவை, பீன்ஸில் அதிகம் உள்ளன. பீன்ஸ் உணவு வகைகள், இரண்டாம் நிலை நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளுக்குச் சிறந்தமுறையில் பயன்படுவதோடு மட்டுமல்லாது, கரோனரி இதய நோய் பாதிப்பின் தீவிரத்தையும் குறைக்கிறது.
பார்லே
பார்லி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த உணவு என்பது பலருக்கும் தெரியாத உண்மை.பார்லி என்பது, கரையக்கூடிய நார்ச்சத்துகளால் ஆன தானியம் என்று வரையறுக்கப்படுகிறது. பார்லி உணவானது, வயிற்றில் உள்ள திரவங்களுடன் இணைந்து ஜெல் போன்ற திரவத்தை உருவாக்குகிறது. இந்த ஜெல் பொருளானது, வயிறு காலியாவதைத் தடுக்கிறது. இதன்மூலம் கார்போஹைட்ரேட்டுகள் உடலில் வேகமாக உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க : மன ஆரோக்கியத்தில் அதிர்ச்சி நிகழ்வின் தாக்கம்
புரோக்கோலி
புரோக்கோலி என்பவை, மாவுச்சத்து இல்லாத காய்கறி வகை ஆகும். இதில் கார்போஹைட்ரேட் குறைந்த அளவிலேயே உள்ளன. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்குச் சிறந்த தேர்வாக, புரோக்கோலி விளங்கி வருகிறது. கார்போஹைட்ரேட், கலோரிகள், கிளைசீமிக் இண்டெக்ஸ் மதிப்பு உள்ளிட்டவை, புரோக்கோலியில் குறைவாக உள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இது விளங்குகிறது. இது நீண்ட நேரத்திற்குப் பசி உணர்வைக் கட்டுப்படுத்தி வைக்கிறது. இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சாலமோன் மீன்
சால்மோன் மீனில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டும், அதிகப் புரதமும் உள்ளன. இதன்காரணமாக, இந்த மீனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது இல்லை. நீரிழிவு நோயாளிகளின் சிறந்த தேர்வாக, இது விளங்குகிறது. இதில் உள்ள ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள், இதய நோய்ப் பாதிப்பை வெகுவாகக் குறைக்க உதவுகின்றன.
நீரிழிவு பாதிப்பு நோயாளிகள், உணவுமுறைகளில் மட்டுமல்லாது, வழக்கமான நீரிழிவு பரிசோதனைகளிலும், கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். உங்கள் சர்க்கரை அளவை, தவறாமல் கண்காணிப்பதன் மூலம், உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவகையிலான உணவுமுறையைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.
நீரிழிவு பாதிப்பு நோயாளிகள், மேற்குறிப்பிட்ட உணவுமுறையைக் கவனமுடன் கடைப்பிடித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நல்வாழ்க்கை வாழ்வோமாக…