AI – வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்கள்!
AI என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சமானது, நம் தினசரி வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். கற்றல், பகுத்தறிவு, சிக்கலைத் தீர்த்தல், முடிவெடுப்பது போன்ற மனித அறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பணிகளை, கணினி உதவியுடன் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப் பயன்படுகிறது. சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, நிதி உள்ளிட்ட பயன்பாடுகள் அனைத்திலும், இதன் செயல்பாடு வியாபித்துவிட்டன.
மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு
நோயறிதல் மற்றும் மருத்துவச் சிகிச்சை
மருத்துவத் துறையில் நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சைப் பரிந்துரைகளில் துல்லியம் உள்ளிட்டவைகளை மேம்படுத்துவதில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள், பேருதவி புரிகின்றன. மருத்துவ நிபுணர்கள் நோய்ப் பாதிப்புகளை அடையாளம் காண, இமேஜிங் ஸ்கேன் மற்றும் மரபணுத் தகவல்கள் உதவுகின்றன.
கதிரியக்கவியல் மற்றும் நோயியல் பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகள், நோய்ப்பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய உதவுகின்றன. இது நோயாளியின் கவனிப்பை அதிகரிப்பது மட்டுமல்லாது. நோய்க்கண்டறிதலில் தவறு நேரும் வாய்ப்பையும் குறைக்கிறது.
உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் சாதனங்கள்
இதயத் துடிப்பு, உறக்க நிலைகள் உள்ளிட்ட உடலின் ஆரோக்கியத்திற்குக் காரணமான முக்கியச் செயல்பாடுகளை, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகளின் உதவியுடன் துல்லியமாகக் கண்காணிக்க உதவுகின்றன. சேகரிக்கப்பட்ட தரவுகளை, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வழிமுறைகள், பகுப்பாய்வு செய்து மருத்துவ சிக்கல்களை அடையாளம் காண உதவுகிறது. இதன்மூலம், தனிப்பட்ட பரிந்துரைகளை, மருத்துவர் வழங்குவது எளிதாக அமைகிறது.
மருந்துகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு
புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு தொடர்பான செயல்முறையை, செயற்கை நுண்ணறிவு முறையானது துரிதப்படுத்துகிறது. நோயாளிகளை அடையாளம் காண்பதோடு மட்டுமல்லாது, புதிய சிகிச்சைகளின் வளர்ச்சியை விரிவுபடுத்தவும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. இதன்மூலம், உயிர்க் காக்கும் மருந்துகள் விலைக் குறைவாகக் கிடைக்க வழிவகை ஏற்பட்டு உள்ளது.
தகவல்தொடர்பில் செயற்கை நுண்ணறிவு
சாட்பாட்கள் மற்றும் விர்ச்சுவல் உதவியாளர்கள்
நவீனத் தொலைதொடர்பு சாதனமுறையில், சாட்பாட்கள் மற்றும் விர்ச்சுவல் எனப்படும் மெய்நிகர் உதவியாளர்கள், ஒருங்கிணைந்த பகுதிகளாக உள்ளன. செயற்கை நுண்ணறிவு உபகரணங்கள் மனிதர்களின் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கின்றன.பயனர்களின் நோக்கங்களைப் புரிந்து கொள்வதற்கும், மேலும் அதுதொடர்பான தகவல் கட்டமைப்பை உருவாக்குவதற்கும், அவை National Language Processing எனப்படும் இயற்கை மொழிச் செயலாக்க வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன.
இணையதளங்கள், செய்தித் தளங்கள் அல்லது மொபைல் செயலிகள் என எதுவாக இருந்தாலும், சாட்பாட்கள், அதன் தொடர்பை நெறிப்படுத்துகின்றன, மேலும் வாடிக்கையாளர்ச் சேவை அனுபவங்களை மேம்படுத்த உதவுகின்றன. SIRI, ALEXA, Google assistant போன்ற மெய்நிகர் உதவியாளர்களின் செயல்பாடுகளுக்கு, செயற்கை நுண்ணறிவே, பிரதானமாக உள்ளது.இத்தகைய மெய்நிகர் உதவியாளர்கள், பயனர்களின் பணிகளை மேற்கொள்ளவும், அவர்களின் தகவல்களை மீட்டு எடுக்கவும், voice commandகளின் மூலம், வீட்டில் இயங்கும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இயக்கவும் உதவுகின்றன.
AI அடிப்படையிலான மொழிபெயர்ப்பு
மொழிகளுக்கு இடையிலான துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதன் மூலம், செயற்கை நுண்ணறிவானது, மொழிபெயர்ப்புத் துறையில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தி உள்ளது எனலாம். Machine learning எனப்படும் இயந்திரக் கற்றல் மாதிரிகளான வழிமுறைகளின் உதவியால், மொழிபெயர்ப்புகளின் துல்லியம் மேலும் அதிகரித்து உள்ளது.
போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவு
தன்னிச்சையாக இயங்கும் வாகனங்கள், போக்குவரத்துத் துறையில், செயற்கை நுண்ணறிவின் வாயிலாகக் கிடைக்கப் பெற்றவை ஆகும். இந்த வாகனங்களில் சென்சார்கள், கேமராக்கள், லிடார்கள் மற்றும் மேம்பட்ட நேவிகேசன் அமைப்புகள் உள்ளன.இதன்மூலம் அந்த வாகனங்களின் செயல்திறன் அதிகரிப்பதோடு, விபத்துகளும் குறைவாகவே ஏற்படுகின்றன.
நகரப் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்தைச் சீர்செய்யும் நடவடிக்கைகளுக்கு, செயற்கை நுண்ணறிவு முக்கியப்பங்கு வகிக்கிறது. ஸ்மார்ட் போக்குவரத்து விளக்குகளானது, சிக்னல் கால அளவினை மாற்றி அமைக்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், பயண அனுபவத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. AI வழிமுறைகளின் மூலம், விபத்து கண்டறிதல் மற்றும் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெறுகின்றன.
போக்குவரத்திற்கு உதவும் செயலிகளானUber, Lyft போன்றவைகளும், கூகுள் மேப்ஸ் போன்ற வசதியும், செயற்கை நுண்ணறிவையே அடிப்படையாகக் கொண்டு உள்ளன. AI வழிமுறைகள், ஓட்டுநர்களுக்கு எளிதான, போக்குவரத்து நெரிசல்களற்ற வழித்தடங்களை அறியவும், பயணத்தை விரைவாக மேற்கொள்ளவும் உதவுகிறது.
நிதிப்பிரிவில் செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு முறையானது, தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன.
செயற்கை நுண்ணறிவு நிதிவர்த்தகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த உத்திகள் துல்லியமாகவும் வேகமாகவும் வர்த்தக நடைமுறைகளைச் செயல்படுத்துகின்றன. இதன் விளைவாக, மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. வர்த்தகச் சந்தைகளின் செயல்திறன் மேம்பட்டு உள்ளது. செயல்பாடுகளுக்கான செலவுகள் குறைந்து உள்ளன. நிதி மோசடிகள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.
தனிநபர்கள், சிறந்த வகையிலான நிதிச் சார்ந்த முடிவுகளை எடுக்க, செயற்கை நுண்ணறிவு முறை உதவுகிறது. பயனர்களுக்கு நிதிநிலை அறிக்கை, செலவு கண்காணிப்பு, முதலீட்டுப் பரிந்துரைகள் மற்றும் சேமிப்பு உத்திகளை வழங்குகிறது.இதன்மூலம், பயனர்கள் நிதி இலக்குகளை எளிதில் அடைய வழி உருவாகிறது.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் சாட்பாட்கள் மற்றும் மெய்நிகர் உதவியாளர்கள், நிதித்துறையில், வாடிக்கையாளர்களின் புகார்களைக் கையாளுகின்றன. பரிவர்த்தனைகளைச் செயலாக்கம் செய்கின்றன மற்றும் சமீபத்திய பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை வழங்குகின்றன. கடன் பெறுதல், கடன் முடிவுகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட செயல்முறைகளையும் எளிதாக்குகின்றன.
கல்விப்பிரிவில் செயற்கை நுண்ணறிவின் பங்கு
கல்வித்துறையில், மாணவர்களுக்குத் தனிப்பட்ட கற்றல் அனுபவங்களை வழங்க தகவமைப்புக் கற்றல் தளங்கள் உதவுகின்றன. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இந்தத் தளங்கள், மாணவர்கள் பாடங்களின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ள உதவுவதோடு, அவர்கள் கல்வியில் மிகுந்த ஈடுபாட்டுடனும், உந்துதலுடனும் திகழ உதவுகிறது.
விர்ச்சுவல் வகுப்பறைகள்
ஆன்லைன் கல்வி முறைக்கு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான விர்ச்சுவல் வகுப்பறைகள் அவசியமானதாக உள்ளன. வீடியோ கான்பரன்சிங், மாணவர்களின் வருகைக் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் பேருதவி புரிகின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள், கற்றல் அனுபவங்களை எளிதாக்குகின்றன.
மாணவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து, அவர்களின் தனிப்பட்ட கற்றல் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலான பயிற்சிகளை வழங்குகின்றன. மாணவர்கள், தங்களது கல்வி இலக்குகளைத் திறம்பட அடைய உதவுகின்றன.
மேலும் வாசிக்க : தொலைமருத்துவத்தில் அணியக்கூடிய சாதனங்களின் பங்கு
பொழுதுபோக்குத் துறையில் செயற்கை நுண்ணறிவு
Netflix மற்றும் Spotify போன்ற OTT தளங்கள், பயனர்களின் ரசனைக்கேற்ப அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பங்களையே பயன்படுத்துகின்றன. இது பயனர்களுக்கு ஒட்டுமொத்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.
செயற்கை நுண்ணறிவு முறையானது, அதன் நுட்பத்தை, கலை மற்றும் இசைக்கும் விரிவுபடுத்தி உள்ளது. ஜெனரேட்டிவ் அட்வெர்சரியல் நெட்வொர்க் அம்சத்தின் மூலம் இசைத் தொகுப்புகளை, மனிதர்களின் உதவியின்றியே உருவாக்க முடியும். இதன்மூலம் இசைக்கும், மனித உழைப்பிற்குமான தொடர்பு சுருங்குகிறது.
செயற்கை நுண்ணறிவு முறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் எதிர்காலத்தில், மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் மாற்றி அமைக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. நமது வாழ்க்கையில், செயற்கை நுண்ணறிவு இரண்டறக் கலந்துவிட்ட நிலையில். அதன் பரிணாம வளர்ச்சி குறித்து அறிந்து கொள்வது அவசியமானதாக மாறி உள்ளது.