PET/CT ஸ்கேன் – சாதகங்களும், பாதகங்களும்…
நமது உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் செல்களில் நிகழும் பாதிப்புகள் உள்ளிட்ட நிகழ்வுகளை முன்கூட்டியே கண்டறிய உதவும் முறையே, PET/CT ஸ்கேன் சோதனை முறை ஆகும். PET/CT ஸ்கேன் என்பது ஒரே இயந்திரத்தின் மூலம் எடுக்கப்படும் இரண்டு விதமான படங்களை ஒரு செயல்முறையின் மூலம் ஒருங்கிணைக்கும் நிகழ்வு ஆகும்.
பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ( PET) ஸ்கேன்
இது நியூக்ளியர் இமேஜிங் தொழில்நுட்பம் ஆகும். இந்தச் சோதனை முறையில், அணுக்கதிரியக்க டிரேசர்கள், நோயாளியின் உடலில் உட்செலுத்தப்படுகின்றன. அவை, உடலில் உள்ள செல்களால் உறிஞ்சப்படுகின்றன. எந்த இடத்தில், இந்த ரேடியோடிரேசர் அதிகமாக உறிஞ்சப்பட்டு உள்ளது என்பதை ஸ்கேன் முடிவுகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். ரேடியோடிரேசர் அதிகமாக இருக்கும் செல்கள், புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளானவை ஆகும்.
உடலின் முழுப்பகுதிகளிலும் இரத்த ஓட்டம் மற்றும் பிராண வாயுவின் பரிமாற்றம் சீராக நடைபெறுகிறதா என்பதைக் கண்டறியவும், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தின் விகிதம் உள்ளிட்ட அத்தியாவசிய செயல்பாடுகளையும், இந்த PET ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.
CAT ஸ்கேன் சோதனையில் கண்டறியப்படாத புற்றுநோய் பாதிப்புகளையும், PET ஸ்கேன் சோதனை முறையின் மூலம் கண்டறிய முடியும்.
கம்ப்யூட்டட் டோமோகிராபி (CT) ஸ்கேன்
எக்ஸ்ரே கதிர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்தச் சோதனையில், உடல் உறுப்புகள் பல்வேறு கோணங்களில் படம்பிடிக்கப்படுகிறது. இந்தப் படங்கள், கணினியின் உதவியிடன் முப்பரிமாண மற்றும் குறுக்கு வெட்டுத் தோற்ற படங்களாக மாற்றி அமைக்கப்படுகிறது. எக்ஸ்ரே படங்களூடன் ஒப்பிடும் போது, CT ஸ்கேன் படங்கள், மிகத் துல்லிய தகவல்களைத் தருபவைகளாக உள்ளன. புற்றுநோய் கட்டிகளின் அளவு, வடிவம், அதன் இருப்பிடம் உள்ளிட்டவற்றைக் கண்டறிவதோடு மட்டுமல்லாது,அந்தக் கட்டிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் இரத்த நாளங்கள் குறித்த தகவல்களையும் வழங்குகின்றது.
ஒருங்கிணைந்த PET/CT ஸ்கேன் சோதனை முறையானது, செல்கள், உடலின் உட்புற கட்டமைப்புகள், உடல் திசுக்கள் மற்றும் உறுப்புகளின் பணிகள் குறித்த தகவல்களை, அதை ஒரு படத்தில் இருந்தே அறிய வழிவகைச் செய்கிறது.
PET/CT ஸ்கேன் சோதனை முறையைப் பொறுத்தவரை, பாதகங்களைவிட சாதகமான அம்சங்களே மிக அதிகம் ஆகும்.
PET/CT ஸ்கேன் சோதனை முறையின் சாதகங்கள்
நோய் கண்டறிதலில் இரட்டிப்பு தெளிவு
PET ஸ்கேன் மற்றும் CT ஸ்கேன்,முறையே வெவ்வேறு அம்சங்களை உணர்த்துவதாக உள்ளன. இவ்விரு சோதனைகளும் இணையும்பட்சத்தில், நோய்க் கண்டறிதல் நிகழ்வில், இரட்டிப்பு தெளிவைக் காண இயலும். PET ஸ்கேன், உடலில் செயல்பாடுகள் அதிகரித்து இருக்கும் பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது. CT ஸ்கேன், உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களை, முழுமையான படம் எடுக்க உதவுகிறது. மருத்துவர், இந்த இரண்டு ஸ்கேன் படங்களையும் ஆய்வு செய்து, புற்றுநோய் பாதிப்பின் தன்மைக் குறித்து முழுமையாக ஆராய்வதோடு மட்டுமல்லாது, அதற்கான சரியான சிகிச்சை முறைகள் குறித்து முடிவு செய்ய அவருக்கு உதவும்.
இது வலி அற்ற சோதனை முறை ஆகும். PET/CT ஸ்கேன் முறையில் எடுக்கப்படும் ஒரு ஸ்கேனிலேயே, நோயாளி உடலின் உடற்கூறியல் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளைத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
இந்த ஸ்கேன் சோதனையை, 30 நிமிடங்களுக்குள் முடித்து விடலாம்.
இந்தச் சோதனையில், ரேடியோடிரேசர்ப் பொருளை, உடலினுள் உட்செலுத்தி சிறிது நேரம் மட்டுமே ஓய்வில் இருக்க வேண்டும். அதன்பின் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. இந்த ஸ்கேன் சோதனை, மிகவும் எளிமையானது ஆகும். PET/CT ஸ்கேன் சோதனைச் செய்துக் கொண்ட உடனேயே, நாம் நம் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
பாதகங்கள்
கர்ப்பிணிகளுக்கான பாதிப்பு
PET/CT ஸ்கேன் சோதனை முறையில், அணுக்கதிரியக்க ரேடியோடிரேசர்ப் பயன்பாடு இருப்பதால். இந்தச் சோதனையைக் கருவுற்ற பெண்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், இந்த ஸ்கேன் சோதனையை மேற்கொண்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அணுக்கதிரியக்கத்தின் தாக்கம்
உடலினுள் குறைவான அளவிலேயே அணுக்கதிரியக்கமானது உட்செலுத்தப்படும் போதிலும், அது எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விவாதத்திற்கு, இன்னுமும் பதில் கிடைக்கவில்லை. கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், நிச்சயம் இந்தச் சோதனையைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் வாசிக்க : இந்தியர்களிடையே காணப்படும் ஃலைப்ஸ்டைல் நோய்கள்
நீரிழிவு நோயாளிகளுக்கான முன்னெச்சரிக்கைகள்
நீரிழிவு நோயாளிகள், PET/CT ஸ்கேன் சோதனையைச் செய்துக் கொள்வதற்கு முன், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும். உடலினுள் உட்செலுத்தப்படும் அணுக்கதிரியக்கப் பொருள், உடலில் உள்ள குளுக்கோஸ் உடன் இணைந்து, ஏதாவதொரு பாதிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், மிகக் கவனம் அவசியம்.
நீரிழிவு நோயாளிகள், PET/CT ஸ்கேன் சோதனையைச் செய்து கொள்வதற்கு முன்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சரிபார்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாது, குளுக்கோஸ் சீரம் ரத்த சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
PET/CT ஸ்கேன் சோதனை முறையில், பாதகங்களைவிட சாதகங்களே அதிகம் உள்ளதால், இது அனைவராலும் விரும்பக்கூடிய சோதனையாக உள்ளது.