நல்ல மற்றும் கெட்ட கொழுப்புகள் குறித்து அறிவோமா?
கொழுப்பு அல்லது கொலஸ்டிரால் என்பது ரத்தத்தில் உள்ள மெழுகுத்தன்மைக் கொண்ட பொருள் ஆகும். இது உடலின் ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதன் சமநிலை மிகவும் இன்றியமையாதது ஆகும். உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், இதயநோய், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இரண்டு வகையான லிப்போபுரதங்கள் உள்ளன.
LDL எனப்படும் குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதங்கள் மற்றும் HDL எனப்படும் உயர் அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதங்கள் ஆகும். இவை உடலில் பல்வேறு இடங்களில் உள்ள செல்களுக்கு, கொழுப்பைக் கடத்திச் செல்கின்றன. LDL கொழுப்பு கெட்ட கொழுப்பு என்றும் HDL கொழுப்பு , நல்ல கொழுப்பு என்றும் வரையறுக்கப்படுகிறது. குறிப்பிட்ட சோதனைகளின் மூலம் உடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட கொழுப்பின் இருப்பைக் கண்டறிய இயலும்.
HDL
நல்ல கொழுப்பு, இது ரத்தத்தில் கரையாது. அதற்குப் பதிலாக, லிப்போபுரதங்கள் எனப்படும் கேரியர்கள், கொழுப்பை, உடலின் செல்களுக்குக் கடத்தப்படுகின்றன. உயர் அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதங்கள், நல்ல கொழுப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகைக் கொழுப்புகள், மாரடைப்பு பாதிப்பில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
நல்ல கொழுப்பு, மாரடைப்பைச் சரிசெய்யும் என்றும், இது தமனிகளில் சேமிக்கப்பட்ட கெட்ட கொழுப்பை, மீண்டும் கல்லீரலுக்குக் கொண்டு செல்ல முடியும். இதனால், அது மாரடைப்பைத் தடுக்கும் என்று இதயநோய் நிபுணர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் நம்புகின்றனர். நல்ல கொழுப்பு, ’குப்பைச் சேகரிப்பவர்’ என்றும் அழைக்கப்படுகிறது. நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில், இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
LDL
LDL எனப்படும் கெட்ட கொழுப்பானது, குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரதமாகக் கருதப்படுகிறது. இது ரத்தத்தில் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அது தமனிகளின் உள்சுவர்களில் படிந்துவிடுகிறது. இது மற்ற பொருட்களுடன் சேர்ந்து அடைப்பை உருவாக்குகிறது. இது தமனிகளைச் சுருக்கி, ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுத்துகிறது. இந்த நிலையானது, பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இதன்காரணமாக, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
நல்ல மற்றும் கெட்ட கொழுப்பின் சரியான அளவு என்ன?
உடலின் மொத்த கொழுப்பு அளவு என்பது நல்ல மற்றும் கெட்ட கொழுப்பின் மொத்த விகிதமாகும். இது பல காரணிகளைப் பொறுத்து அமையும். அதாவது, உணவுமுறை, செயல்பாட்டு நிலை, மரபணுக்கள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
கெட்ட கொழுப்பின் அளவு 130 mg/dl என்ற அளவிற்குக் குறைவாகவும், நல்ல கொழுப்பின் அளவு 50 mg/dlக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். இதய நோய் அபாயம் உள்ளவர்களுக்கு, கெட்ட கொழுப்பின் அளவு 100 mg/dl க்கும் குறைவாக இருக்க வேண்டும். குறிப்பிடத்தக்க அளவிலான இதய நோய்ப்பாதிப்பு உள்ளவர்களுக்குக் கெட்ட கொழுப்பானது 70 mg/dlக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
கெட்ட கொழுப்பின் அளவு 130 mg/dl க்கு அதிகமாக இருந்தால், இதய நோய் ஆபத்திற்கான வாய்ப்பு அதிகம். குடும்ப வரலாறு, புகைபிடித்தல், நீரிழிவுப் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமனிகள் குறுகுதல் உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்களுக்கும், இதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்தப் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு, மருத்துவர்கள் ஸ்டாட்டின் உள்ளிட்ட மருந்துகளைப் பரிந்துரைச் செய்கின்றனர்.
மேலும் வாசிக்க : நீரிழிவுப் பாதிப்பிலான கால் புண்களால் அவதியா?
கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை எவ்வாறு அதிகரிப்பது?
சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகளே, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்வதற்கான இயற்கையான நடைமுறை ஆகும். உடற்பயிற்சி நிகழ்வானது, வளர்சிதைமாற்றத்தை மேம்படுத்துகின்றன. அதிக உடற்பயிற்சி செய்வது, உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது, டிரைகிளிசரைடுகளின் அளவையும் குறைக்கிறது. இதன்மூலம், நல்ல கொழுப்பின் அளவானது அதிகரிக்கிறது.
தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. 30 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை நடப்பதால் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். கொழுப்பு அதிகம் கொண்ட உணவு வகைகளை உட்கொள்வதைக் குறைப்பதன் மூலம், உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தடுக்க முடியும். உங்கள் தினசரி உணவுமுறையில், கொழுப்பின் அளவு 300 மில்லிகிராமிற்கும் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதுவே, உங்களுக்கு இதய நோய்ப்பாதிப்பு அபாயம் இருக்கும்பட்சத்தில், உணவில் கொழுப்பின் அளவு 200 மில்லிகிராமிற்கும் குறைவாகவே இருக்க வேண்டும். டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளைப் பகுதிப்பொருட்களாகக் கொண்ட உணவு வகைகளைத் தவிர்ப்பதன் மூலம், உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியும்.
கொழுப்பு அதிகம் கொண்ட உணவு வகைகளைக் கூடுமானவரைத் தவிர்த்து, உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்பின் அளவைக் கணிசமாகக் குறைத்து, இதய நோய்ப்பாதிப்புகளின் அபாயங்களைத் தவிர்த்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோமாக…