நீரிழிவுப் பாதிப்பிலான கால் புண்களால் அவதியா?
உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கிறது. இந்தியாவில் 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட நீரிழிவு பாதிப்பு நோயாளிகள், கால் புண்களுடன் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பாதிப்பை, ஆரம்ப நிலையிலேயே கண்டறியும்பட்சத்தில், அதனை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்றபோதிலும், தாமதமான குணமடைதல் நிகழ்வானது, பெரும்பாலானவர்களை, கடும் அச்சத்திற்கு உள்ளாக்கி விடுகிறது. இந்தப் பாதிப்பிற்குச் சரியான நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கப்படாவிடில், ஊனமுற்ற நிலையை உருவாக்குவதோடு, உயிருக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
நீரிழிவுப் பாதிப்பிலான கால் புண்கள்
காலின் அடிப்பகுதியில் திறந்த வகையிலான புண்கள் மற்றும் காயங்களே, நீரிழிவுப் பாதிப்பிலான கால்புண்களாக வரையறுக்கப்படுகிறது. சிவப்பு, சிறிய, வட்ட பள்ளங்களாகத் தோன்றும். தடித்த தோலால் சூழப்பட்டு உள்ளன. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீண்டகாலமாக அதிகரிக்கும்போது, இந்த நிலை, பொதுவாக ஏற்படுகிறது. இது கால்களில் உள்ள ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளைச் சேதப்படுத்துகின்றன. இதன்காரணமாக, கால் புண்கள் உருவாகும் வாய்ப்புகள் ஆபத்து அதிகம்.
கால் புண்களின் இருப்பிடம், அளவு மற்றும் உடலில் பாதிக்கப்பட்ட பகுதி உள்ளிட்டவைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அவை நிலைகளைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன.
சாதாரண கால்
சரியான மற்றும் பொருத்தமான காலணிகளைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு, மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசித்து, பயனுள்ள கால் பராமரிப்பு திட்டத்தைத் தொடங்கவும்.
கால்கள் ஆபத்தில் இருக்கும்போது
நீரிழிவுப் பாதிப்பு காரணமாக, ரத்த ஓட்டம் தடைபடுதல் மற்றும் நரம்பு சேதம் ஏற்பட்டதற்கான காரணத்தை, மருத்துவர்ப் பரிசோதனையின் மூலம் கண்டறிவார். இது கால் புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
காலில் புண்கள் ஏற்படுதல்
இந்த நிலையில், சக்கர நாற்காலிகள் அல்லது காற்றுப்பைகளின் பயன்பாட்டின் மூலம், கால்களில் அழுத்தத்தைக் குறைப்பது முக்கியம் ஆகும். இதன்மூலம், தொற்றுநோய்ப் பாதிப்பானது தடுக்கப்படுகிறது.
காலில் நோய்த்தொற்று
திறந்த புண்களில், பாக்டீரியா அல்லது பூஞ்சைத் தொற்று இருக்கும்பட்சத்தில், மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட வேண்டும். இதற்கு மருந்து அல்லது அறுவைச் சிகிச்சைத் தேவைப்படுகிறது.
கால்கள் அழுகல்
இந்த நிலையில், ரத்த ஓட்டம் குறைதல் அல்லது செயல் இழப்பு காரணமாக, கால் இறத்தல் நிகழ்வை எட்டும். இது மருத்துவமனையில் அனுமதி, படுக்கையில் அனுமதி, சில நேரங்களில் அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது.
கால் துண்டிப்பு
இந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளைத் தடுக்க, தொற்றுநோய்ப் பாதிப்பால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக, கால் துண்டிக்கப்பட வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.
நீரிழிவுப் பாதிப்பிலான கால் புண்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்
இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது தமனிகளைக் குறுக்குகிறது. இதனால் ரத்த ஓட்டமும், ஆக்சிஜன் பரிமாற்றமும் பாதிக்கப்படுகிறது.
நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளில் பெரும்பாலானோர், புற தமனி நோய்ப்பாதிப்பு உள்ளது. இந்த நோய்பாதிப்பானது, கால்கள் மற்றும் பாதங்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை மட்டுப்படுத்துகிறது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லாமல், ஏற்ற, இறக்கத்துடன் இருக்கும் நிலையானது, நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளுக்கு, நரம்புச் சேதப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது அவர்களுக்குக் கால் வலி உணர்வினை உருவாக்குகிறது.
இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு கணிசமாகக் குறைவதன் காரணமாக, எளிதாக நோய்த்தொற்றுப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
நீரிழிவுப் பாதிப்பிலான கால் புண்களின் அறிகுறிகள்
கடுமையான வலி உணர்வு அல்லது உணர்வின்மை
தோலில் நிறமாற்றம் ஏற்படுதல்
இரத்தம் கசிதல்
சகிக்கமுடியாத அளவிலான கெட்ட மணம்
வீக்கம் அல்லது அழற்சி
சாத்தியமான சிகிச்சைமுறைகள்
மருத்துவர் மேற்கொண்ட நோயறிதல் நிகழ்வின் அடிப்படையில், பின்வருவனவற்றில் உங்களுக்குச் சாத்தியமான சிகிச்சை முறைப் பரிந்துரைக்கப்படும்.
மருந்துகள்
நீரிழிவுப் பாதிப்பிலான கால்ப் புண்களைக் குணப்படுத்த மருத்துவ வல்லுநர்கள், ஆன்டிபயாடிக்குகள் மற்றும் ஆன்டி – கிளாட்டிங் மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர். சிகிச்சையை மேலும் மேம்படுத்தும் பொருட்டு, சில களிம்புகளும் பயன்படுத்தப்படுகின்றன.
அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் உபகரணம்
சிறப்புக் காலணி அல்லது முழங்கால் கட்டு போடுவதன் மூலம், குறிப்பிட்ட பகுதியில் அழுத்தம் மற்றும் எரிச்சல் கட்டுப்படுத்தப்படும். இதன்மூலம், குணப்படுத்தும் செயல்முறையானது துரிதமடையும்.
சிதைவு
இந்த சிகிச்சைமுறையில், நீரிழிவுப் பாதிப்பிலான கால் புண்களால் பாதிக்கப்பட்ட அல்லது இறந்த தோல் பகுதிகள், அதற்குரிய கருவியைப் பயன்படுத்தி, சுத்தம் செய்யப்படும். பின்னர் அந்த இடம், கிருமிநாசினியால் கழுவப்பட்டு, சுத்தம் செய்யப்படும்.
தசைநார் நீட்சி சிகிச்சை
நீரிழிவுப் பாதிப்பிலான கால் புண்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், விரைவாகக் குணமடைந்து, சாதாரணமாக நடக்க உதவும் வகையில், அறுவைச் சிகிச்சை நிபுணர், அகில்லெஸ் தசைநார்ப்பகுதியை நீட்சி நிகழ்விற்கு உட்படுத்துவார்.
அதெரெக்டோமி
மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், கேதார்டிக் நுழைப்பதன் மூலம், அடைபட்ட தமனியானது அகற்றப்படுகிறது.
மேலும் வாசிக்க : நீரிழிவுப் பாதிப்பிலான கால் வலியால் அவதியா?
நீரிழிவுப் பாதிப்பிற்கான கால் புண்களைத் தடுக்கும் வழிமுறைகள்
பின்வரும் தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீரிழிவு கால் புண்களிலிருந்து விரைவாக நிவாரணம் பெறலாம்.
உங்கள் கால்களில் காயங்கள் அல்லது வீக்கங்கள் தென்படும்பட்சத்தில், உடனடியாக, கால்களில் உள்ள தோலைப் பரிசோதனைச் செய்யவும்.
நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துக் காணப்படும்பட்சத்தில், வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்க்கவும்.
சரியான அளவு கொண்ட, பொருத்தமான காலணிகளை மட்டுமே பயன்படுத்தவும். சீரற்ற காலணிகள், கால்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது, கால் புண்கள் ஏற்படவும் காரணமாக அமைகிறது. நன்கு காற்றோட்டம் இருக்கும் வகையிலான காலணிகளையே தேர்வு செய்யவும்.
நார்ச்சத்து, புரதம், குறைந்த அளவிலான நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய சீரான உணவுமுறையானது, கால் புண்கள் ஏற்படுவதில் இருந்து நம்மைக் காக்கும்.
நீரிழிவு நோய்ப்பாதிப்பின் கடுமையான சிக்கல்களில் முதன்மையானதாக, கால் புண்கள் உள்ளன. சரியான கவனிப்பு இன்றி, உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படாவிட்டால், அது நீங்கள் உங்கள் கால்களை இழப்பதற்கான சூழலை உருவாக்கி விடும். பாதிப்பை, அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதனால் மட்டுமே, உரிய நிவாரணம் சாத்தியம்.
சரியான நேரத்தில் உரிய சிகிச்சைப் பெற்று, நீரிழிவு கால் புண்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்வோமாக…