உணவு ஒவ்வாமைப் பாதிப்பு என்றால் என்ன?
உடலில் அந்நியப் பொருள் நுழையும்போது, நோய் எதிர்ப்பு சக்தி ஒவ்வாமை உணர்வை ஏற்படுத்துகிறது. உணவு ஒவ்வாமை விவகாரம் என்பது, இன்றைய நிலையில் சர்வதேச அளவில் மிக அதிகமானோரைப் பாதிக்குப் பாதிப்பாக மாறிவிட்டது. நாம் உட்கொள்ளும் உணவு வகைகளை, நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியானது தவறாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப வினைபுரிந்து ஒவ்வாமைப் பிரச்சினையை ஏற்படுத்துகின்றது.
உணவு ஒவ்வாமைப் பாதிப்பு, எந்த வயதினருக்கும் ஏற்படலாம். இந்தப் பாதிப்புகள் சிலருக்கு லேசானவைகளாகவும், சிலருக்கோ கடுமையானதாகவோ இருக்கலாம். கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலையை, அனாபிலாக்சிஸ் என்று குறிப்பிடுகின்றனர். இது உயிருக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையாகவும் வரையறுக்கப்படுகிறது. இந்தியாவில், 25 சதவீதத்திற்கும் அதிகமான பெரியவர்கள் மற்றும் 20 சதவீத அளவிலான குழந்தைகள், உணவு ஒவ்வாமைப் பாதிப்பிற்கு உட்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒருவருக்கு எந்தவிதமான உணவு ஒவ்வாமைப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை அடையாளம் காண்பதே, அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்வதற்கான நிகழ்வின் முதல்படி ஆகும்.
உணவு ஒவ்வாமை நிகழ்வின் அடிப்படை
உடலின் நோய் எதிர்ப்புச் சக்திக்கும், உட்கொள்ளும் உணவில் உள்ள புரதத்திற்கும் இடையே நிகழும் அசாதாரண நிகழ்வே, உணவு ஒவ்வாமைப் பாதிப்பு ஆகும். சிலவகை உணவு ஒவ்வாமைப் பாதிப்புகளில், உணவில் உள்ள புரதச் சத்தை, உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது, அச்சுறுத்தலாகப் பாவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, ஹிஸ்டமைன் உள்ளிட்ட வேதிப்பொருட்களை, நோய் எதிர்ப்பு மண்டலமானது வெளியிடுகின்றது. இந்த வேதிப்பொருட்களே, உணவு ஒவ்வாமைப் பாதிப்பிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்த காரணமாக அமைகின்றன.
இன்றைய உலகில், பெரும்பாலானோர் உடல் உழைப்பின்றி ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுகின்றனர்.அவர்களின் குழந்தைகளும், வெளியிடங்களுக்கு விளையாடச் செல்லாமல், மொபைல் போனிலேயே நாள் முழுவதும் மூழ்கிக் கிடக்கின்றனர். இதன்காரணமாக, அவர்களுக்குப் பல்வேறு வகையான கிருமிகளின் தொற்று மற்றும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட இயலாத சூழல் உருவாகிறது. நம் உடலில் அவ்வப்போது நிகழும் கிருமிகளின் தொற்று மற்றும் தொற்றுப் பாதிப்புகளினால் தான், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படுகிறது. கிருமிகளின் தொற்றுக்கள் மற்றும் தொற்றுப் பாதிப்புகள் ஏதும் ஏற்படாதவர்களுக்கு, அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி போதிய அளவிற்கு மேம்பட்டிருக்க வாய்ப்பில்லை. இதன்காரணமாக, அவர்கள் எளிதாக உடல்நலப் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
இன்றைய தலைமுறையினருக்குப் புதிதாகக் கிருமிகளின் தொற்று மற்றும் தொற்றுப் பாதிப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், அவர்கள் உட்கொள்ளும் உணவில் உள்ள புரதத்தை, நோய் எதிர்ப்புச் சக்தியானது, உடலில் அத்துமீறி நுழைந்து உள்ள அந்நியப் பொருளாகக் கருதி அதற்கு எதிர்வினை ஆற்றுகின்றது. இதுவே, உடல் ஒவ்வாமைப் பாதிப்பாக, நமது உடலில் எதிரொலிக்கின்றது.
உணவு ஒவ்வாமைப் பாதிப்பால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள், அதற்குக் காரணமான உணவுப் பொருளைக் கண்டறிந்து, அதை முற்றிலுமாகத் தவிர்ப்பதன் மூலமாகவே, இந்தப் பாதிப்பினால் ஏற்படும் அசவுகரியத்தைத் தடுக்க முடியும்.
உணவு சகிப்பின்மை
சிலருக்கு, சில வகை உணவுப் பொருட்களைச் செரிமானம் செய்வதில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அந்தக் குறிப்பிட்ட வகை உணவுப் பொருட்களைச் செரிப்பதற்குத் தேவையான என்சைம்கள், அவர்களது உடலில் இல்லாமல் இருக்கலாம். இதன்காரணமாக, அவர்கள் அந்தக் குறிப்பிட்ட உணவு வகைகளை உட்கொள்ளும் பட்சத்தில், வயிறு உப்பிசம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாவர். இந்த நிலையை, உணவு சகிப்பின்மை என்று குறிப்பிடுகின்றோம்.
உணவு ஒவ்வாமைப் பாதிப்பின் அறிகுறிகள்
குமட்டல் உணர்வு
மூச்சு விடுதலில் சிரமம்
வயிற்றுப்போக்கு
தொடர் இருமல்
முகம், நாக்கு, தொண்டை உள்ளிட்ட பகுதிகளில் வீக்கம்
இயத்துடிப்பு அதிகரித்தல்
படை நோய்
அரிக்கும் தன்மையிலான தோலழற்சி
மூச்சுத்திணறல்
உள்ளிட்டவை, உடல் ஒவ்வாமைப் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.
வகைகள்
உணவு ஒவ்வாமைப் பாதிப்பை, இம்முனோகுளோபுலின் E சார்பு மற்றும் இம்முனோகுளோபுலின் E சார்பு அல்லாதது என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
இம்முனோகுளோபுலின் E சார்பு வகை
உணவில் உள்ள புரதத்தை நோய் எதிர்ப்பு மண்டலம் அந்நியப் பொருளாகக் கருதி, இம்முனோகுளோபுலின் E ஆன்ட்டிபாடிகளை உருவாக்குகிறது.
தொடர்ச்சியாக, இந்தப் புரதம் உள்ள உணவு வகைகளை உட்கொள்ளும் போது, இம்முனோகுளோபுலின் E ஆன்ட்டிபாடிகள், இந்தப் புரதத்தை இனங்கண்டு, ஹிஸ்டமைன் உள்ளிட்ட வேதிப்பொருட்களை வெளியேற்றுகின்றன. இந்த வேதிப் பொருட்கள், உணவு ஒவ்வாமைப் பாதிப்பிற்கான அறிகுறிகளை உருவாக்குகின்றன.
இம்முனோகுளோபுலின் E சார்பு அல்லாத வகை
இந்த வகையில், இம்முனோகுளோபுலின் E ஆன்ட்டிபாடிகளுக்குப் பதிலாக, நோய் எதிர்ப்புச் சக்தி மண்டலத்தின் T செல்கள் பங்குபெறுகின்றன. அதேபோன்று, இதில் ஹிஸ்டமைன் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இடம்பெறுவதில்லை.
பொதுவாகக் காணப்படும் உணவு ஒவ்வாமைப் பாதிப்புகள்
பல உணவு வகைகள் ஒவ்வாமைக்குக் காரணமாகினும், பொதுவான உணவு ஒவ்வாமைப் பாதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பசுவின் பால் ஏற்படுத்தும் ஒவ்வாமை
பச்சிளம் குழந்தைகளிடையே இந்தப் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது
படை, வாந்தி எடுத்தல், வயிற்றுப்போக்கு இதன் அறிகுறிகளாக உள்ளன.
இரத்த சோதனை, தோல் சோதனைகளின் மூலம் இதைக் கண்டறியலாம்.ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, வளர்ச்சியில் தடங்கல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
பசுவின் பாலை முற்றிலுமாகத் தவிர்த்து, சோயா, பாதாம், அரிசிப் பால் பயன்படுத்துவதே, இதற்குத் தீர்வு ஆகும்.
முட்டை ஏற்படுத்தும் ஒவ்வாமை
குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரிடம் இந்தப் பாதிப்பு காணப்படுகின்றன.
இரத்த சோதனைகளின் மூலம் இதைக் கண்டறியலாம்.
முட்டை மற்றும் முட்டைச் சார்ந்தப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
கொட்டைகளால் ஏற்படும் பாதிப்பு
குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரிடம் இந்தப் பாதிப்பு காணப்படுகின்றன.
இரத்த சோதனைகளின் மூலம் இதைக் கண்டறியலாம்.
பாதாம், முந்திரி, வால்நட் உள்ளிட்ட கொட்டை உணவு வகைகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
நிலக்கடலையால் ஏற்படும் பாதிப்பு
இது அனைத்து வயதினருக்கும் மிகச்சாதாரணமாக ஏற்படும் பாதிப்பு ஆகும்.
இரத்த சோதனைகளின் மூலம் இதைக் கண்டறியலாம்.
நிலக்கடலை மற்றும் நிலக்கடலைச் சார்ந்த உணவு வகைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இந்தப் பாதிப்பு உள்ளவர்கள், அவசரச் சிகிச்சைக்காக எஃபிநெப்ரின் பயன்படுத்தலாம்.
மீன்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமை
அனைத்து வயதினருக்கும் ஏற்படுகின்றது
இரத்த சோதனைகளின் மூலம் இதைக் கண்டறியலாம்.
எந்த வகை மீன்களால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை அற்ந்து, அந்தக் குறிப்பிட்ட மீன் வகைகளைத் தவிர்ப்பது நல்லது.
சோயாவால் ஏற்படும் ஒவ்வாமை
சிறு குழந்தைகளிடம் அதிகமாகக் காணப்படுகிறது
சோயா, சோயா பால், சோயா பொருட்கள் உள்ளிட்டவைகளைத் தவிர்த்தல் நலம்
இரத்த சோதனை, தோல் சோதனைகளின் மூலம் இதைக் கண்டறியலாம்.
ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, வளர்ச்சியில் தடங்கல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
கோதுமையினால் ஏற்படும் ஒவ்வாமை
அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது
கோதுமை மற்றும் கோதுமைச் சார்ந்தப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
இரத்த சோதனை, தோல் சோதனைகளின் மூலம் இதைக் கண்டறியலாம்.
ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, வளர்ச்சியில் தடங்கல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
பழங்கள், காய்கறிகளால் ஏற்படும் பாதிப்பு
சரியாகச் சுத்தம் செய்யப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள மகரந்தத் துகள்கள் செரிமானப் பிரச்சினை மற்றும் ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஆப்பிள், செர்ரி, கிவி போன்ற பழங்களும், கேரட், செலரி போன்ற காய்கறிகளும் இப்பாதிப்பிற்கு முக்கிய காரணங்களாகும்.
விதைகளால் ஏற்படும் பாதிப்பு
எள், சூரியகாந்தி விதைகள், சியா விதைகள் உள்ளிட்டவை, உணவு ஒவ்வாமைப் பாதிப்பிற்கு முக்கியப்பங்கு வகிக்கின்றன.
மசாலாப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு
இலவங்கப் பட்டை, கடுகு உள்ளிட்ட மசாலாப் பொருட்களின் அதீதப் பயன்பாடு, சிலருக்கு மூக்கு எரிச்சல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்த கூடும்.
மேலும் வாசிக்க : தனிப்பட்ட ஊட்டச்சத்துப் பயிற்சிமுறையில் AIயின் எதிர்காலம்!
கண்டறியும் முறைகள்
உணவு ஒவ்வாமை வாழ்க்கைமுறையைக் கடுமையாகப் பாதிக்கும். சுகாதார நிபுணர்கள் இதனைப் பல்வேறு முறைகளில் கண்டறிகின்றனர். சில பொதுவான வழிமுறைகள் இங்கே தொகுக்கப்பட்டு உள்ளன.
உணவுமுறை
உங்களது உணவுமுறையில் ஏதேனும் மாறுபாடு உள்ளதா என்பதை, ஊட்டச்சத்து நிபுணருடன் கலந்துரையாடி, அதில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளவும்.
தோலில் மேற்கொள்ளப்படும் சோதனை
இது ஒப்பீட்டளவில் வலி இல்லாத சோதனை ஆகும். இதன் முடிவுகள் வேகமாகக் கிடைப்பதனால்,பெரும்பாலானோர், இதைப் பரிந்துரைக்கின்றனர்.
வாய்வழி முறையிலான உணவுச் சவால்கள்
உணவு ஒவ்வாமைப் பாதிப்பைத், துல்லியமாகக் கண்டறிய இந்த முறையானது உதவுகிறது.
இரத்த பரிசோதனைகள்
உணவு ஒவ்வாமைப் பாதிப்புகளுக்கு எதிரான குறிப்பிட்ட ஆண்ட்டிபாடிகளின் அளவை நிர்ணயிக்க, ரத்த பரிசோதனைகள் உதவுகின்றன. ஆனால், இதன்மூலம், உணவு ஒவ்வாமைப் பாதிப்பைத் தன்னிச்சையாகக் கண்டறிய முடியாது.
உணவு ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளைக் கவனமாகத் தவிர்த்து, உணவுமுறையில் போதிய ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்து, அலர்ஜி எனப்படும் அரக்கனை ஓரங்கட்டுவோமாக…..