இந்தியாவில் நீரிழிவு பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள்
நீரிழிவுப் பாதிப்பு என்பது, நீடித்த வளர்சிதை மாற்ற குறைபாடு ஆகும். உடலில் போதிய அளவில் இன்சுலின் சுரக்காத நிலை, சுரப்பு இருப்பினும், ஹார்மோன் செயல்படாத நிலை அல்லது இவ்விரு காரணிகளால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமான அளவிற்கு அதிகரிக்கிறது.
சர்வதேச அளவில், நீரிழிவு பெரிய மரணக் காரணியாக உள்ளது.2019ல் 463 மில்லியன் மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டனர். 2045ல் இது 700 மில்லியனாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 70 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.அதிக நீரிழிவு நோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நீரிழிவு பாதிப்பு அதிகரிப்பதால், அதைத் தடுக்கத் தீவிர முன்னேற்பாடு நடவடிக்கைகள் தேவை.
நீரிழிவு நோய்ப் பாதிப்பின் வகைகள்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தலைப் பொறுத்து, நீரிழிவுப் பாதிப்பானது 2 வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
முதலாம் வகை நீரிழிவுப் பாதிப்பு
இந்தப் பிரிவு நோயாளிகளின் உடலின் கணையத்தில் இன்சுலின் ஹார்மோனைச் சுரக்கும் செல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இதன்காரணமாக, போதிய அளவிலான இன்சுலின் சுரக்காத நிலை உருவாகிறது. இந்த வகைப் பாதிப்பிற்கு உள்ளவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலினை, உடலில் செலுத்திக் கொண்டே இருப்பது ஒன்றே தான் இதற்குத் தீர்வாகும்.
இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு
இந்த வகைப் பாதிப்பு உள்ளவர்கள், போதிய அளவிலான இன்சுலின் சுரப்பு உள்ளபோதிலும், அதைப் பயன்படுத்தாத நிலை உள்ளது. நீரிழிவுப் பாதிப்பு உள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு, இந்த வகைப் பாதிப்பே உள்ளது.
கர்ப்பகால நீரிழிவுப் பாதிப்பு
இது பெண்களின் கர்ப்பகாலத்தில் மட்டும் ஏற்படுகின்றது. சிலருக்கு, கர்ப்ப காலத்திற்குப் பிறகு இது நீங்கி விடலாம் அல்லது இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பாக மாறக்கூடும்.
நீரிழிவுப் பாதிப்பிற்கான காரணிகள்
இந்தியாவின் நகர்ப்புற வாழ்க்கையானது, இயந்திரக்கதியுடனும், போட்டி வாழ்க்கைமுறையைத் தன்னகத்தே கொண்டு உள்ளது. அவர்களுக்குச் சிறந்த உணவுமுறை, உடல் எடை நிர்வாகம் போன்ற ஆரோக்கிய நடைமுறைகளைப் பின்பற்ற நேரமில்லை.சமூகம் சார்ந்த மன அழுத்தம் மற்றும் BMI எனப்படும் உடல் நிறைக் குறியீடு உள்ளிட்டவை, நீரிழிவுப் பாதிப்பிற்கான முக்கிய காரணிகளாக உள்ளன.
இந்தியாவில்,இனிப்புச் சுவையிலான பதார்த்தங்கள் பண்டிகைக் காலங்களில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.இனிப்புச் சுவைப் பதார்த்தங்கள் எல்லாரும் எளிதில் வாங்கக்கூடியவையாகவும், அனைவருக்கும் கிடைக்கும் அளவிலும் உள்ளன. இது நாட்டில் நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்குக் காரணமாக இருக்கிறது
கிராமப்புறப் பகுதிகளில் வாழும் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் போதிய அளவிலான மருத்துவ வசதிகள் இல்லாததால், அங்கு பலருக்கு இந்தப் பாதிப்பு இருப்பதே தெரியவில்லை. உடல் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு, அரசுகள் மக்களுக்குக் குறைந்த விலையில் தானியங்கள், பருப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிலையிலும், மக்கள் அவற்றைப் புறக்கணித்து, சத்தற்ற இனிப்பு, பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளையே விரும்புகின்றனர்.
குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்கனவே நீரிழிவுப் பாதிப்பு இருத்தல், வயது, போதுமான உடற்பயிற்சி இல்லாத நிலை, உடல் பருமன், நீரிழிவுக்கு முந்திய நிலை ஆகியவை நீரிழிவுக்கான காரணங்களாக உள்ளன.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் வகையிலான உணவுகளைத் தவிர்த்தல், தினசரி உடற்பயிற்சி செய்தல், எப்போதும் சுறுசுறுப்பாக இருத்தல், மருந்துகளைச் சரியான நேரத்திற்கு உட்கொள்ளுதல், மதுப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துதல், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கடைபிடித்தல் உள்ளிட்ட நடைமுறைகள், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதோடு மட்டுமல்லாது, நீரிழிவுப் பாதிப்பையும் வரவிடாமல் தடுக்க உதவுகின்றன.
நீரிழிவு பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள்
நீரிழிவுப் பாதிப்பானது, உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கவல்ல நோய்களில் முதன்மை இடத்தில் உள்ளபோதிலும், பின்வரும் நடவடிக்கைகளை அதிகக் கவனத்துடன் பின்பற்றினால், எளிதான முறையில் அதைத் தடுத்திட இயலும்.
முன்கூட்டியே கண்டறிதல்
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளின் மூலம், நீரிழிவு நோய்ப்பாதிப்பினை நாம் முன்கூட்டியே கண்டறிய முடியும். நோய்ப்பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து, உரிய சிகிச்சைகளை, சரியான நேரத்தில் மேற்கொள்வதன் மூலம் நீரிழிவுப் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
விழிப்புணர்வு மற்றும் சுகாதாரக் கல்வி
மக்களுக்கு, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருக்கும் வாழ்க்கைமுறையினால் ஏற்படும் தீமைகள், நீரிழிவுப் பாதிப்பின் அபாயங்கள், நீரிழிவு நோய்ப்பாதிப்பு மேலாண்மை உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துக்கூறி, அவர்களிடையே, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் வாசிக்க : நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த உணவுமுறைகள்
சுகாதார மேம்பாடு மற்றும் உணவுத் திட்டமிடல்
பழ வகைகள், காய்கறிகள், முழுத் தானியங்கள், பருப்பு வகைகள், கொழுப்பு குறைவாகக் கொண்ட பால் பொருட்கள், குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவு வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். சர்க்கரை அதிகம் கொண்ட உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் உள்ளிட்டவைகளின் நுகர்வைக் குறைத்துக் கொள்வதன் மூலம், நீரிழிவு நோய் மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில், வேண்டிய இலக்கை எட்ட முடியும்.
நார்ச்சத்து நிறைந்த பழங்கள், உணவு வகைகள், நல்ல கொழுப்புகள் கொண்ட உணவு வகைகள், முழுத் தானியங்கள், புரதங்கள் உள்ளிட்டவைகளைச் சம அளவில் கொண்ட உணவுமுறையானது, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
உடற்பயிற்சி பழக்கவழக்கம்
உடற்பயிற்சி நிகழ்வானது ஆரோக்கியமான உடல் எடையை நிர்வகிப்பதற்கு உதவுவது மட்டுமின்றி, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. தற்போது பெரும்பாலானோருக்கு, நீரிழிவுப் பாதிப்பு இருப்பதால், அவர்களின் HbA1c அளவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு நிறுவனங்கள், தங்களது ஊழியர்கள் பலன் அடையும் வகையில், ஏரோபிக் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை, அலுவலகங்களிலேயே கற்றுத்தரவும், செயல்படுத்தவும் முன்வந்து உள்ளன.
மன அழுத்த மேலாண்மை
அதிக மன அழுத்த நிகழ்வானது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணிசமான அளவிற்கு அதிகரிக்கச் செய்துவிடும். யோகா, தியானம், மனந்தெளிநிலை உள்ளிட்ட பயிற்சிகளின் மூலம், மன அழுத்தத்தை, சரியான முறையில் நிர்வகிக்க இயலும்.
எளிதில் அணுகக்கூடிய மருத்துவ கட்டமைப்பு
மருத்துவக் கட்டமைப்பை விரிவுபடுத்தி, மருந்துகளை மானிய விலையில் வழங்குவதன் மூலம், நோயாளிகளின் கிளைசீமிக் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீரிழிவுப் பாதிப்பு பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்கான அணுகலை இலகுவாக்க இயலும்.
ஊழியர் நலன் சார்ந்த திட்டங்கள்
முன்னணி நிறுவனங்கள், தங்களது ஊழியர்களின் நலன் சார்ந்த வகையிலான ஆரோக்கியமான உணவுமுறைகள், உடற்பயிற்சி நடவடிக்கைகள், மன அழுத்த மேலாண்மை நிகழ்வுகளை உள்ளடக்கிய வகையிலான ஆரோக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நீரிழிவுப் பாதிப்பு அற்ற நபர்களை உருவாக்க முடியும்.
நீரிழிவுப் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகளவிற்கு ஏற்படுத்தி, தடுப்பு நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொண்டு, பெரும்பாலானோரைப் பெரும்பாதிப்பிற்கு உள்ளாக்கி உள்ள நீரிழிவு எனும் அரக்கன் இல்லாத தேசத்தை உருவாக்குவோமாக…