ஹிஸ்டமைன் சகிப்பின்மை நிலை – அறிந்ததும், அறியாததும்!
ஹிஸ்டமைன் என்பது அனைத்து வகையான உயிரினங்களிலும் காணப்படும் உயிரியல் ரீதியான வேதிப்பொருள் ஆகும். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கியப் பங்களிப்பை ஏற்படுத்துகிறது. இது, உடலுக்குத் ஒவ்வாமைப் பாதிப்பை விளைவிக்கும் வெளிப்புறக் காரணிகளை உடலில் இருந்து அகற்ற உதவுகின்றன.
இது நரம்பியல் கடத்தியாகவும், வேதிப்பொருளின் தூதுவராகவும் செயல்படுகிறது. மேலும் குடலின் முக்கிய செயல்பாடுகளை மேற்கொள்கிறது. மாஸ்ட் செல்கள் இரத்த வெள்ளை அணுக்களில் ஒருவகை ஆகும். இந்தச் செல்கள், ரத்த நாளங்கள், நிணநீர் நாளங்கள், இணைப்புத் திசுக்களில் மட்டுமே காணப்படுகின்றன) மற்றும் பேசோஃபில் செல்களில், ஹிஸ்டமைன் சுரக்கப்படுகிறது.
ஹிஸ்டமைன் நுண்குழாய்களை மேலும் ஊடுருவக் கூடியதாக மாற்றுகிறது. இது வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிற புரதங்களை அதன் வழியாகச் செல்ல அனுமதிக்கிறது.
மனிதர்கள், விலங்குகள் மட்டுமல்லாது சில வகைத் தாவரங்களிலும் ஹிஸ்டமைன் உற்பத்தி செய்யப்படுகின்றன. உதாரணமாக, சில பூச்சி வகைகளில், அவைகளின் விஷத்தில் ஹிஸ்டமைனைக் கொண்டு உள்ளன.
உணவு ஒவ்வாமைப் பாதிப்பு குறித்து நாம் கேள்விப்பட்டு இருப்போம். இந்தப் பாதிப்பு வெளிப்படுதலில், ஹிஸ்டமைன்களின் பங்கு அளப்பரியது ஆகும்.
நீங்கள் சாப்பிடும் உணவு வகைகள் அல்லது அருந்தும் பானங்கள், உடலில் ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்துமாயின், அந்த இடத்தில், ஹிஸ்டமைன்கள் ஒருங்கிணைந்து, அதற்கான எதிர்வினைகளை, குடலில் ஏற்படுத்துகின்றன.
ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்தவல்ல உணவுகளை உட்கொள்ளும்போது, உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமானது, அந்தப் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, எதிர்வினைகளைத் தொடர்ச்சியாக அனுப்புகின்றன.
இந்த எதிர்வினைகள், உடலின் தோல், மூக்கு, நுரையீரல், வாய் மற்றும் ரத்தத்தில் உள்ள மாஸ்ட் செல்களுக்கு, ஹிஸ்டமைனை விடுவிப்பதற்கான சிக்னல்களாக அமைகின்றன.
மாஸ்ட் செல்களிலிருந்து, ஹிஸ்டமைன் வெளியானவுடன், அது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது. இதன்காரணமாக, பாதிப்படைந்த பகுதியில் வீக்கம் ஏற்படுகின்றது. பின்னர் உடனடியாக நோய் எதிர்ப்பு செல்கள் களமிறங்குகின்றன. அங்கு ஏற்பட்டு உள்ள குறைபாட்டை, அவைகள் சரிசெய்கின்றன. உதாரணமாக, மகரந்தத் துகள்கள் சார்ந்த ஒவ்வாமைப் பாதிப்பு இருப்பின், அது சளிச்சவ்வுப் பகுதியைப் பாதிக்கின்றன. மூக்கின் சுவர்ப்பகுதிகளில் இருந்து ஹிஸ்டமைன்கள் வெளியிடப்படுகின்றன. இந்த ஹிஸ்டமைன்கள், அதிகச் சளியை உற்பத்தி செய்கின்றன. இதன்காரணமாகவே, நமக்கு மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல் நிகழ்வு ஏற்படுகிறது.
ஹிஸ்டமைன் சகிப்பு இன்மை நிலை
ஹிஸ்டமைன் சகிப்பின்மை நிகழ்வை, என்ட்ரல் ஹிஸ்டமினோசிஸ் என்றும் குறிப்பிடுகின்றோம். இவர்கள் உணவு ஹிஸ்டமைன் உணர்திறன் கொண்டவர்களாக உள்ளனர். இந்த நிலைக் கொண்டவர்களுக்கு, உணவின் மூலம் பெறப்பட்ட ஹிஸ்டமைனை, வளர்சிதை மாற்றத்திற்கு உள்ளாக்கும் திறன் அற்றதாகக் காணப்படுவர்.
ஹிஸ்டமைன் சகிப்பு இன்மை நிலையை உறுதிப்படுத்தவும் மற்றும் அதை மருத்துவரீதியாக நிர்வகிக்க, கூடுதல் அளவிலான ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக, உயிர்தொழில்நுட்பத் தகவலுக்கான தேசிய மையம் (NCBI) குறிப்பிட்டு உள்ளது.
காரணங்கள்
ஹிஸ்டமைன் சகிப்பு இன்மை நிலையானது, இரைப்பைக் குடல் நொதியான டையமின் ஆக்சிடேஸ் (DAO) குறைபாட்டினால் ஏற்படுகிறது. இந்த நிலை உள்ளவர்களால், உணவானது சரியாகச் சிதைக்கப்படாமல் போகலாம் அல்லது. இரைப்பையால், அது முழுமையாக உறிஞ்சப்படாமல் இருக்கலாம்.
இரைப்பை அல்லது குடல், சளி உள்ளிட்ட பாதிப்புகளைக் குணப்படுத்தும் மருந்துகளின் பக்கவிளைவினால், ஹிஸ்டமைன் சகிப்பு இன்மை நிலை உருவாகிறது. இதன்விளைவாக, டையமின் ஆக்சிடேஸ் (DAO) என்சைமின் செயல்பாடு பாதிப்படைகின்றது.
இந்தப் பாதிப்பு கொண்டவர், ஹிஸ்டமைன் உள்ள உணவை உட்கொள்ளும்போது, அது ரத்தத்தில் அதிகளவு ஹிஸ்டமைன் கொண்ட தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. உணவுமுறை மட்டுமல்லாது, பல்வேறு வகையான நோய்ப் பாதிப்புகளும், இந்த நிலைக்குக் காரணமாக உள்ளன. இந்த நிலைக்கான நோய்க்காரணிகளை மதிப்பீடு செய்வதற்கும், தனிப்பட்ட சிகிச்சை முறையினை மேற்கொள்வதற்கும், நோய்ப்பாதிப்புகள் மற்றும் குறைபாடுகளைக் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ஹிஸ்டமைன் சகிப்பின்மை நிகழ்வானது, வளர்சிதை மாற்ற நோயாக, NCBI அமைப்பால் வரையறுக்கப்பட்டு உள்ளது. செரிமானம் போதிய அளவில் இல்லாதது, அதிகப்படியான ஹிஸ்டமைன் சுரப்பை ஊக்குவிக்கின்றது. இதன்காரணமாக, பல்வேறு அறிகுறிகள் ஏற்படுகின்றன.
அறிகுறிகள்
ஒழுங்கற்ற இதயத்துடிப்பு
செரிமான பிரச்சினை
குமட்டல்
வாந்தி உணர்வு
தலைவலி
படை நோய்கள்
சைனஸ் பிரச்சினை
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி
திசுக்கள் வீக்கமடைதல்
தலைச்சுற்றல்
வயிற்றுவலி
உயர் ரத்த அழுத்தம்
மூக்குப் பகுதியில் எரிச்சல் நிலை
உணவுமுறை மூலமாக ஹிஸ்டமைன் அளவைக் கட்டுப்படுத்தல்
உணவுமுறைகளின் மூலம், ஹிஸ்டமைன் அளவைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஆல்கஹால் மற்றும் புளித்த பானங்கள்
புளித்த உணவுகள், யோகர்ட் உள்ளிட்ட பால் பொருட்கள்
உலர்ப் பழங்கள்
அவகேடோ
கீரை வகைகள்
கத்திரிக்காய்
பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள்
மட்டி மீன்கள்
இவற்றில் அதிக ஹிஸ்டமைன்கள் உள்ளதால், இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
ஹிஸ்டமைன் வெளியீட்டைத் தூண்டும் உணவுகள்
சில உணவுகள் உடலில் ஹிஸ்டமைன் வெளியீட்டைத் தூண்டுகின்றன. அவை:
வாழைப்பழம்
பீன்ஸ்
பப்பாளி
சாக்லேட்
தக்காளி’
கோதுமை
சிட்ரஸ் பழங்கள்
வேர்க்கடலை, முந்திரி, அக்ரூட் உள்ளிட்ட கொட்டைகள்
மதுப்பழக்கம்
டையமின் ஆக்சிடேஸ் நொதியின் செயல்பாட்டைத் தடுக்கும் உணவுகள்
பிளாக் டீ
ஊட்டச்சத்துப் பானங்கள்
கிரீன் டீ
பரிந்துரைக்கப்படும் உணவுகள்
ஹிஸ்டமைன் சகிப்பின்மை உள்ளவர்களுக்கு, மருத்துவர்கள் ஹிஸ்டமைன் குறைவான உணவுகளைப் பரிந்துரைக்கின்றனர்.இந்தப் பாதிப்பு கொண்டவர்கள், தங்களது உணவுமுறையில் இருந்து சில உணவுவகைகளை நீக்குவதற்கு முன்பாக, மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.
ஹிஸ்டமைன் குறைவாக உள்ள உணவுவகைகள்
முட்டைகள்
இறைச்சி மற்றும் மீன்
வைட்டமின் சி இல்லாத பழங்கள்
தேங்காய் பால் மற்றும் பாதாம் பால்
புத்தம்புதிய காய்கறிகள்
ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்கள்
மேலும் வாசிக்க : உணவுத்திட்டமிடல் செயலிகளின் பயன்பாடுகள்
மருத்துவ சிகிச்சை முறைகள்
உணவுமுறையில் மேற்கொள்ளும் மாற்றங்களைத் தவிர்த்து, ஹிஸ்டமைன் சகிப்பின்மை நிலைக்கு, வேறு நிலையான சிகிச்சை முறைகள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இருப்பினும், பின்வரும் அணுகுமுறைகள் உங்களுக்குக் கைகொடுக்கும்.
ஆன்டி ஹிஸ்டமைன்களை எடுத்துக் கொள்ளுதல்
டையமின் ஆக்சிடேஸ் என்சைம் சபளிமென்ட்கள்
கார்டிகோ ஸ்டீராய்டுகள்
பல உணவுகளில் அதிக ஹிஸ்டமைன் உள்ளது. உடலால் இதைச் சரியாகச் சிதைக்க முடியாததால், பல அறிகுறிகள் தோன்றுகின்றன.உணவுமுறைகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், ஆன்டி ஹிஸ்டமைன்களை எடுத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், இதன் பாதிப்பைக் கட்டுப்படுத்த இயலும்.
ஹிஸ்டமைன் சகிப்பின்மை நிலைக்குக் காரணமான உணவு வகைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…