நீங்கள் 30 வயதைக் கடந்த பெண்ணா?
பெண்கள் கருத்தரித்து, குழந்தைகளைப் பெறுதல் நிகழ்வு என்பது, மனித வாழ்க்கையின் அடிப்படை அம்சமாகக் கருதப்படுகிறது. கருவுறுதல் நிகழ்வில், வயதுக்காரணியானது முக்கியப் பங்கை வகிக்கின்றது. வயது அதிகரிக்க, அதிகரிக்கக் கருவுறுதலில் மாற்றங்கள் நிகழ்கின்றன. கருவுறுதலில் வயது, உயிரியல் காரணிகள், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் இனப்பெருக்கத் தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
பெண் கருவுறுதல்
பெண் கருவுறுதல் நிகழ்வானது, மாதவிடாய் சுழற்சி மற்றும் அண்டவிடுப்பின் செயல்முறையுடன் சிக்கலான முறையில் இணைக்கப்பட்டு உள்ளது. பெண்கள் பிறக்கும்போதே, வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான, அதாவது 2 முதல் 20 மில்லியன் முட்டைகளைத் தன்னகத்தே கொண்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை, வயது ஆக, ஆக படிப்படியாகக் குறையத் துவங்குகிறது.
30 முதல் 40 வயதைக் கடக்கும் பெண்களுக்கு, இந்த முட்டைகளின் அளவும், தரமும் மிகவும் குறைவாகவே உள்ளது. இதன்மூலம், இயற்கையாகவே கருத்தரித்தல் நிகழ்வானது, சவாலான விசயமாக மாறுகிறது. இதுமட்டுமல்லாது, கருவில், குரோமோசோம்களின் எண்ணிக்கை மற்றும் அதன் வடிவமைப்பில் அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.
முட்டைகளின் அளவு மற்றும் தரத்தில் ஏற்படும் சரிவானது, ஆரோக்கியமான கருத்தரித்தலைத் தக்கவைத்துக் கொள்வதற்கான திறனை, நேரடியாகப் பாதிக்கின்றது.
வயதுவாரியாகக் கருவுறுதல் நிகழ்வு
25 வயதிற்குக் குறைவான பெண்கள்
25 வயதிற்குக் குறைவான பெண்களுக்கு, கருத்தரித்தல் நிகழ்வு, மிக எளிதாக நிகழ அதிக வாய்ப்பு உள்ளது. அவர்களது கருப்பை இருப்பில் உள்ள முட்டைகளின் தரமும், அளவும் மேம்பட்ட நிலையிலேயே இருக்கும். இருப்பினும் அவர்களுக்குப் புகைப்பிடிக்கும் பழக்கமோ அல்லது குடிப்பழக்கமோ இருத்தல், தவறான உணவுமுறையை மேற்கொள்ளுதல், போதிய அளவிலான உடற்பயிற்சி இல்லாமை உள்ளிட்ட காரணிகளால், கருவுறுதல் நிகழ்வு பாதிக்கப்படலாம். இந்த வயதுப் பெண்களுக்கு PCOS பாதிப்பு அதிகம், இது கருவுறுதலில் சிரமங்களை ஏற்படுத்தலாம்.
25 முதல் 35 வயது வரையிலான பெண்கள்
25 முதல் 35 வயது வரையிலான பெண்கள், வளமான காலகட்டத்தில் இருப்பவர்கள் எனலாம். இந்தப் பிரிவுப் பெண்கள், தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். வாழ்க்கையில் உயர்நிலையை அடைவதற்காக, இலக்குகளை நிர்ணயித்துக் கொள்கின்றனர். இதன்காரணமாக, அவர்கள் தாய்மை அடைவதைத் தள்ளிப் போடுகின்றனர். அவர்கள் 32 வயதை எட்டும்போது, கருப்பை இருப்பில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கைக் குறையத் துவங்குகிறது. இதன்மூலம், கருவுறுதல் நிகழ்வின் விகிதமும் குறைகின்றது. இந்த வயதுப் பெண்களுக்கு முட்டைகளின் அளவு மற்றும் தரம் குறைந்தபோதிலும், இவர்களுக்கு இயற்கை முறையிலான கருத்தரிப்பு நடைபெறும் விகிதமும் அதிகமாகவே உள்ளது.
35 முதல் 40 வயது வரையிலான பெண்கள்
35 முதல் 40 வயது வரையிலான பெண்களுக்கு, கருவுறுதல் விகிதமானது மிக வேகமாகக் குறைந்து வருகிறது. அவர்களின் கருப்பை இருப்பில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை மிக விரைவாகக் குறைந்து வருகிறது. இதன்காரணமாக, இந்த வயதினருக்கு மலட்டுத்தன்மை, கர்ப்பக் காலத்தில் ஏற்படும் சிக்கல்கள், பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணுக் குறைபாடுகள் இருக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இத்தகையச் சவால்களுக்கு இடையேயும் இந்த வயதில் உள்ள பெண்களுக்கு இயற்கை முறையிலான கருத்தரிப்பு நிகழத்தான் செய்கின்றது. சிலருக்கு மட்டுமே, கருவுறுதல் எளிதாக நடைபெறுவதற்கு ஏதுவான உதவிகள் தேவைப்படுகின்றன.
40 வயதைக் கடந்தப் பெண்கள்
40 வயதைக் கடந்த பெண்களுக்குக் கருவுறுதல் விகிதம் கணிசமாகக் குறைவதால், இயற்கை முறையில் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு.இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, மரபணுக் குறைபாடுகள் அதிகளவில் இருக்க வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு அதிகளவிலான கருச்சிதைவு ஏற்படுவதற்கும், கர்ப்பக் காலத்தில் அதிகளவிலான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. 40 வயதைக் கடந்த பெண்கள், செயற்கைக் கருத்தரிப்பு முறையைத் தேர்ந்தெடுத்து, அதன்மூலம் குழந்தையைப் பெற்றெடுப்பதே சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.
கருப்பையின் செயல்பாடு
கருப்பையின் செயல்பாட்டுச் சரிவு, முட்டைகளின் தரம் மற்றும் அளவில் ஏற்படும் குறைபாடுகளே பெண் கருவுறுதலைப் பாதிக்கும் முக்கிய காரணிகள்.
சீரற்ற மாதவிடாய் சுழற்சிகள்
பெண்களின் வயது அதிகரிக்கும்போது, ஹார்மோன் மாற்றங்களால் சீரற்ற மாதவிடாய் சுழற்சிகள் உண்டாகின்றன.இதன்காரணமாக, அண்டவிடுப்பு நிகழ்வைத் துல்லியமாகக் கணிப்பது சவாலான நிகழ்வாக மாறுகிறது. இந்தச் சீரற்ற மாதவிடாய் சுழற்சியானது, இயற்கை முறையிலான கருத்தரிப்பு நடவடிக்கைகளை மேலும் சிக்கலாக்குகின்றது.
கருத்தரிக்கும் நேரம் அதிகரிப்பு
பெண்ணின் கருப்பை இருப்பில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கைக் குறையும் போது, கருத்தரிக்கக் கூடுதல் நேரம் ஆகும். 35 வயதைக் கடந்த பெண்களுக்கு, கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைகின்றன. அதேபோன்று பெண்கள் 40 வயதை அடைவதற்குள், இயற்கையிலேயே கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு, மிகவும் சொற்ப அளவிலேயே உள்ளது.
கருவுறுதலைப் பாதிக்கவல்ல மற்ற காரணிகள்
கருவுறுதல் நிகழ்வு பாதிப்பிற்கு, வயது மட்டுமல்லாது இன்னபிற காரணிகளும் காரணமாக உள்ளன.
வாழ்க்கைமுறை விருப்பங்கள்
புகைப்பிடித்தல், ஆல்கஹால் உள்ளிட்ட மதுவகைகள் பயன்பாடு, போதிய அளவிலான சத்துகள் அற்ற உணவுமுறை, உடற்பயிற்சி இல்லாதது உள்ளிட்டவை, கருவுறுதல் நிகழ்வைப் பாதிக்கின்றன்.
நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றினால், எந்த வயதிலும், இயற்கையான முறையிலேயே கருத்தரிக்க இயலும்.
சுகாதார நிலைகள்
சினைப்பை நோய்க்குறி, எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்குக் கருவுறுதல் பாதிப்பிற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சுற்றுப்புறச் சூழல் காரணிகள்
சில வகை வேதிப் பொருட்கள், மாசுபடுத்தும் பொருட்கள் உள்ளிட்டவை, கருப்பை இருப்பில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கையைக் கணிசமான அளவிற்குக் குறைக்கின்றன. இதன்காரணமாக, கருவுறுதல் நிகழ்வு பாதிப்படைகின்றது.
மேலும் வாசிக்க : முன்மாற்று மரபணுச் சோதனையின் (PGT) நன்மைகள்
ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்பு
பெண்களுக்கு என்று நன்கு வரையறுக்கப்பட்ட சர்கேடியன் ரிதம் ( Circadian rhythm) இருக்கும் நிலையில், ஆண்களுக்கும் வயது அதிகரிக்க, அதிகரிக்க, அவர்களும் சில உடல்ரீதியான மாற்றங்களை அனுபவிக்கின்றனர். பெண்களுடன் ஒப்பிடுகையில், ஆண்கள் படும் பாதிப்பு மிகக்குறைவே ஆகும். ஆண்கள் எந்த வயதிலும் தந்தையாக முடியும் என்பதை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட இயலாது. இருப்பினும், வயது அதிகரிக்க அதிகரிக்க ஆண்களிடையேயும் மரபணுக் குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது.
வயதுக் காரணியானது, கருவுறுதலை வெகுவாகப் பாதிக்கிறது. கருவுறுதல் நிகழ்வில், வயதுக்காரணியின் விளைவை முன்கூட்டியே அறிந்து கொள்வது, குழந்தைப் பெறப்போகும் தம்பதிகளுக்கு உதவிக்கரமாக அமையும். சரியான நேரத்தில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளுதல், பாதுகாப்பான நிலையில் கருவுறுதல் உள்ளிட்ட அம்சங்கள், கர்ப்பக் காலத்தில் நிகழும் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.