உடல்நலப் பரிசோதனைக்குத் தயாராவது இவ்வளவு சுலபமா?
வயது அதிகரிக்கும்போது உடல் செயல்பாடுகள் குறையும். இதனால், வருடாந்திர முழு உடல் பரிசோதனையின் முக்கியத்துவம் புரியும்.இந்தப் பரிசோதனைகள், உடலில் ஏற்பட்டு உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இதுமட்டுமல்லாது, விரைவில் ஏற்படப் போகும் நோய்ப் பாதிப்புகளையும் முன்கூட்டியே அறிய உதவுகின்றன.
புற்றுநோய் உள்ளிட்ட நோய்ப்பாதிப்புகளை, அதற்குரிய பரிசோதனைகளின் மூலம் முன்கூட்டியே கண்டறிய இயலும். இதன்மூலம் சரியான அளவிலான சிகிச்சையை முன்கூட்டியே துவங்குவதன் மூலம் நோய்ப்பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இயலும். முதல்முறை முழு உடல் பரிசோதனைச் செய்பவர்கள் பெரும்பாலும் குழப்பமடைகின்றனர்.அவர்களுக்குப் பயன்படும்விதமாக, இந்தக் கட்டுரையானது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சில முக்கியக் குறிப்புகள்
முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதற்கு முதல்நாள் இரவு, போதிய அளவிலான உறக்கத்தை மேற்கொள்வது அவசியமாகும். போதுமான உறக்கமின்மை ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, உடல் வெப்பநிலை ஆகியவற்றை அதிகரிக்கும்.இதன்விளைவாக, பரிசோதனை முடிவுகளில், துல்லியமற்ற தரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பரிசோதனைக்கு முதல்நாள் இரவு, இலகுவான உணவைச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்கும், பரிசோதனைக்கும் இடையே 8 மணிநேர இடைவெளி இருப்பது மிகவும் நல்லது. தைராய்டு தொடர்பான சோதனைகளை மேற்கொள்பவர்கள், சோதனைக்கு முன்னதாக, மருத்துவர்ப் பரிந்துரைத்தவாறு உணவு சாப்பிடாமல் இருப்பதன் மூலம் சோதனையின் துல்லிய முடிவுகளைப் பெற இயலும். வயிறு முழுக்கச் சாப்பிட்ட நிலையில்,, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இந்தத் தருணத்தில், பரிசோதனைச் செய்யும்போது, தவறான முடிவுகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன. முழு உடல் பரிசோதனைக்கு நாள் குறித்த உடனே, அதிக உப்பு மற்றும் அதிகக் கொழுப்பு கொண்ட உணவு வகைகளின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது.
முழு உடல் பரிசோதனைக்கு முன்னதாக, ஆல்கஹால் உள்ளிட்ட மதுப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும். சோதனைகளுக்கு முன்னதாக, காலையில் கார்பனேட்டட் பானங்களைத் தவிர்ப்பது நல்லது. போதிய அளவிலான நீர் அருந்துவதன் மூலம், உடலின் நீரேற்ற அளவைப் பராமரிக்க இயலும்.
எளிமையான, இலகுரக உடைகளை, பரிசோதனையின் போது உடுத்திக் கொள்வது நல்லது. இதய நோய் தொடர்பான பரிசோதனை எனில், டிரெட்மில் சோதனை இடம்பெறும். பின்னர் இதனைத்தொடர்ந்து X-ray மற்றும் ஸ்கேன் சோதனைகள் நடைபெறும். இந்தத் தருணத்தில் கடினமான ஆடைகள் அணிந்து இருந்தால், அது உங்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது, மருத்துவர்களுக்கும் பெரும் இடையூறாக அமையும்.
உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் உடல்நலப் பாதிப்புகள் குறித்த விவரங்களை, பரிசோதனைக்கு முன்னதாகவே, மருத்துவரிடம் தெரிவிப்பது நல்லது. இதன்மூலம், பரிசோதனையில் தேவையான மாற்றங்களை, அவரால் மேற்கொள்ள முடியும்.
மேலும் வாசிக்க : மருந்து உட்கொள்ளலை எளிதாக்குகிறதா செயலிகள்?
நீங்கள் உடல்நலப்பாதிப்பிற்காக, மருந்து மாத்திரைகள் உட்கொள்பவராக இருப்பின், பரிசோதனைக்கு முதல் நாள், அந்த மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. உதாரணமாக, தைராய்டு பாதிப்பிற்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், முழு உடல் பரிசோதனைக்கு, 3 நாட்களுக்கு முன்னதாகவே, அம்மருந்துகளைச் சாப்பிடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் அம்மருந்துகளில் உள்ள பீட்டா பிளாக்கர்கள், சோதனை முடிவுகளில் மாற்றத்தை உண்டாக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சில தருணங்களில், ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரியைச் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்துவர். இதில் வரும் முடிவுகளைக் கொண்டு, மருத்துவர் எத்தனை நாள்களுக்கு முன்னதாக, மருந்து மாத்திரைகள் உட்கொள்வதை நிறுத்த வேண்டும் என்ற ஆலோசனையை வழங்குவார்.
உடல் பரிசோதனை நாளில், கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. கடினமான உடற்பயிற்சிகள் இதயத்துடிப்பை அதிகரித்து, உடலில் பொட்டாசியத்தின் அளவைக் குறைக்கின்றன.அந்த நிலையில், நாம் முழு உடல் பரிசோதனையை மேற்கொள்ளும்போது, பெரும்பாலும் தவறான முடிவுகளே வர அதிக வாய்ப்புகள் உள்ளன.
பெண்களுக்கான பிரத்யேகக் குறிப்புகள்
மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய உதவும் மேமோகிராம் சோதனையை மேற்கொள்ள உள்ள பெண்கள், சோதனைக்கு முந்தைய நாளில், பவுடர்கள், கிரீம்கள், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்டவற்றை, கை மற்றும் மார்பகப் பகுதிகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இப்பொருட்கள் சோதனை முடிவுகளில் பெரும் மாற்றங்களை உண்டாக்கக்கூடும்.
மாதவிடாய் சுழற்சி நிறைவுற்று ஒருவாரக் காலத்திற்குள்ளாக, முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. மாதிரிகளில் ரத்தம் இருக்கக்கூடும் என்பதால், மருத்துவரிடம் மாதவிடாய் சுழற்சியைத் தெரிவித்து, அவரது பரிந்துரையின்படி பரிசோதனையை மேற்கொள்ளவும்.
பெண் கருவுற்றிருக்கும் பட்சத்தில், அதுகுறித்த தகவலை, மருத்துவர்,லேப் டெக்னீசியனிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில், X-ray உள்ளிட்ட சோதனைகள் தவிர்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.
முழு உடல் பரிசோதனையை, பெரும்பாலும் காலைநேரத்திலேயே முடித்துவிடுவது நல்லது ஆகும். ஏனெனில், இரவில் நன்றாக உறங்கிப் புத்துணர்வுடன் இருப்பீர்கள். இரவு சாப்பிட்ட உணவும் முழுமையாகச் செரிமானம் அடைந்திருக்கும் என்பதால், உடல்நலப் பரிசோதனையின் முடிவுகள் மிகவும் துல்லியமாக இருக்கும்.
உடல்நலப் பரிசோதனையை மேற்கொள்ளத் திட்டமிட்டு இருப்பவர்கள், மேற்கொண்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, நோய்ப்பாதிப்புகள் இருப்பின் உரிய சிகிச்சை முறைகளை மேற்கொண்டு, அந்த இன்னல்களிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான நல்வாழ்வு வாழ்வீராக…