உறக்கத்திற்குக் கூட இருக்கா Hygiene? – வாங்க அறிவோம்!
ஆறறிவு படைத்த மனிதர்கள் முதல் சில அறிவுகளை மட்டுமே பெற்றுள்ள உயிரினங்கள் வரை, அனைத்திற்கும் உறக்கம் தேவை. இது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.மனிதர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்க்கைக்கும், போதுமான அளவிலான உறக்கம் மிக முக்கியமானதாக உள்ளது.
இரவுநேரத்தில் போதிய அளவிலான உறக்கம் உறங்குவது மூலம், உடல் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமல்லாது, உன்னதமான நல்வாழ்க்கையும் கைவசமாகிறது. இன்று நம்மில் பெரும்பாலானோர், சரியான உறக்கம் இல்லாமல், கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். உறக்கச் சுகாதாரத்தைக் கடைபிடிப்பதன் மூலம், உறக்கநிலையை மேம்படுத்திக் கொள்ள இயலும்.
உறக்கச் சுகாதார நிகழ்வு என்பது, ஆரோக்கியமான உறக்க முறைகளை ஊக்குவிப்பது மட்டுமல்லாது, உறக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் பழக்கவழக்கங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இது உறக்கத்திற்கு உகந்த சூழ்நிலைகளை உருவாக்குகின்றன. உடலில் இயற்கையான முறையிலான உறக்கம் – விழிப்பு சுழற்சியை மேம்படுத்தும் வகையிலான நடத்தைகளுக்கு வழிவகுக்கின்றன.
உடல்நலக் குறைபாட்டைச் சரிசெய்ய, உறக்கம் மிக முக்கியமானதாக உள்ளது.உறக்க நிலையின் போது, நம் உடலின் செல்களின் திசுக்கள் வளர்ச்சி அடைகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. இதய நோய், உடல் பருமன் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளின் அபாயத்தைக் குறைக்க, உறக்கம் பேருதவி புரிகிறது.
உறக்கச் சுகாதாரம் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
- உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுகிறது.
- சிந்தனைத்திறன், நினைவாற்றல், ஆர்வம் அதிகரிக்கின்றது.
- நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடுகள் தூண்டப்பட்டு, ஒட்டுமொத்த உடல்நலம் காக்கப்படுகிறது.
- உடலின் ஆற்றல் அளவு சீராகி, நாள்முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
- மனநிலை மற்றும் உணர்ச்சிகள் மேம்படுகின்றன.
- உறக்கம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் நாள்பட்ட உடல்நலப் பாதிப்புகளின் அபாயம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
உறக்கச் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள்
உறக்கத்தை உங்கள் முன்னுரிமையாக மாற்றிக் கொள்ளுங்கள். இதன் மூலம் வாழ்க்கைமுறை, உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
உறக்க நிகழ்விற்கு உதவும் வகையிலான பகல்நேரக் குறிப்புகள் இங்கே வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
நிலைத்தன்மை
வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலையில் ஒரே நேரத்தில் கண் விழிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதன்மூலம், உங்களது உறக்கநிலையானது சீராகும். இது, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்படும் உடல் சோர்வையும் தவிர்க்கவல்லது ஆகும்.
அட்டவணை அவசியம்
உணவுமுறை, உடற்பயிற்சி உள்ளிட்ட உடல்நலத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் போதிய கவனம் செலுத்துவது போன்று, உறக்க நிலைகளுக்குப் போதிய கவனம் பராமரிக்கவும். வீட்டின் அனைத்து உறுப்பினர்களுக்கும், இந்த விசயங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
சூரிய ஒளியைப் பயன்படுத்துங்கள்
ஒளி என்பது, உடல் கடிகாரத்தைக் கட்டுப்படுத்த உதவும் இயற்கையான காரணியாகும். காலையில், சூரிய ஒளியைத் தவறாமல் உடலினுள் மேற்கொள்வது என்பது, உடலியல் கடிகாரத்தைச் சீரமைக்க உதவுகிறது. நாள் ஒன்றுக்கு, குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு, இருக்கும் இடத்தை விட்டு விலகி, சூரிய ஒளிபடும் இடத்தில் நிற்கவும்.
உடனடி உறக்கம் அவசியம்
இன்றைய உலகில், பலருக்கு இரவு உறக்கத்தில் பிரச்சினை உள்ளது. இதற்கு மதிய உறக்கமே காரணம். மதிய உறக்கம் தேவையெனில், குறுகிய நேரமாகவும், மாலை 5 மணிக்கு முன் முடித்துக்கொள்ளவும்.
தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்
உடற்பயிற்சிகள், உங்களை விரைவாக உறங்கச் செய்வதுடன், ஆழ்ந்த உறக்கத்திற்கும் காரணமாக அமைகின்றது. உடற்பயிற்சியானது, உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கவல்லக் கார்டிசோல் ஹார்மோன் சுரத்தலை ஊக்குவிக்கிறது. உறங்கச் செல்வதற்கு 3 மணிநேரங்களுக்கு முன்பாக, உடற்பயிற்சிகளை முடித்துக் கொள்வது நல்லது.
காஃபி உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும்
காஃபின் வேதிப்பொருளை உள்ளடக்கிய காஃபி, டீ, சாக்லேட், கோலா உள்ளிட்டவைகளை, உறங்கச் செல்வதற்கு 4 மணிநேரங்களுக்கு முன் நிறுத்திவிட வேண்டும். ஆல்கஹால் உள்ளிட்ட மது வகைகள், உறக்கத்தைத் தூண்டும் என்றபோதிலும், சிலமணி நேரங்களிலேயே விழிப்பை ஏற்படுத்தி விடும். இதன்காரணமாக, தொடர்ச்சியான உறக்கம் என்பது தடைபடும்.
உறக்க நிகழ்விற்கு உதவும் வகையிலான இரவுநேரக் குறிப்புகள்
கேட்ஜெட்களின் பயன்பாட்டைக் குறைத்தல்
மொபைல் போன், டேப்லெட் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களின் பயன்பாட்டை, உறங்கச் செல்வதற்கு 3 மணிநேரங்களுக்கு முன்பு நிறுத்திவிட வேண்டும். இதன் பயன்பாடு, படுக்கையறையிலும் தொடருமேயானால், அதிலிரிந்து வெளிப்படும் நீலநிற ஒளியானது, நம் உடலில் மெலடோனின் ஹார்மோன் சுரப்பைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது, உடலியல் கடிகாரம் எனப்படும் சர்காடியன் ரிதத்தின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுத்திவிடுகிறது. இதன்காரணமாக, உறக்க நிகழ்வானது பாதிக்கப்படுகின்றது.
மன அழுத்தத்தைக் குறைத்தல்
மாலை வேளை மற்றும் இரவு உறங்கச் செல்லும் நேரமே, நம் மன அழுத்தத்தைக் குறைக்கவல்லக் காலங்கள் ஆகும். இத்தகைய நேரங்களில், மனதை இலகுவாக்கும் பயிற்சிகள், தியானம், யோகா, சுவாசப் பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொண்டு, மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
மேலும் வாசிக்க : நோய்த்தடுப்பு நிகழ்வில் வாழ்க்கைமுறை முக்கியத்துவம்
உறங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குங்கள்
உறங்கச் செல்வதற்குச் சிலமணி நேரம் முன்பாக வழக்கமான நடவடிக்கைகளை நிறுத்துங்கள்.உற்சாகக் குளியல் போடுங்கள். இதன்மூலம், உடலின் வெப்பநிலைத் தணிந்து, ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும். பிடித்த புத்தகத்தை வாசியுங்கள், எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகள், உணர்ச்சி சிக்கல்களை அதிகப்படுத்தும் பேச்சுகளை, படுக்கையறையில் தவிர்க்க வேண்டும்.
அமைதியான, இருள் சூழ்ந்த இனிமையான சூழலே, நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். உறக்கம் மற்றும் உடலுறவு விசயங்களைத் தவிர்த்து வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்க வேண்டும்.
படுக்கையிலேயே நீண்டநேரம் இருக்கக் கூடாது
உறங்குவதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், படுக்கையில் இருந்து உடனடியாக எழுந்து விடுங்கள். புத்தகத்தை வாசிப்பது போன்ற அமைதியான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.
உடல் ஆரோக்கியத்திற்காக, உறக்கச் சுகாதார நடைமுறைகளை மேற்கொள்ளும்போது, நிலைத்தன்மையும், விடாமுயற்சியும் முக்கியக் காரணிகளாக விளங்குகின்றன. இந்த வழிமுறைகளைத் தவறாது பின்பற்றி, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் காப்பதுடன், இனிமையானதொரு நல்வாழ்க்கை வாழ்வோமாக…