நோயாளிகளுக்குத் தொலைமருத்துவத்தின் நன்மைகள்
இந்தியாவின் சுகாதாரத் துறையில் புரட்சியை ஏற்படுத்தவல்லத் துறையாகப் பிரமாண்ட அளவில் உருவெடுத்துள்ளது டெலிமெடிசின் எனப்படும் தொலைமருத்துவத் துறை. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும், மலிவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய சுகாதாரச் சேவையைத் தொலைமருத்துவம் வழங்குகிறது.இதுகுறித்த விழிப்புணர்வை, மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
தொலைமருத்துவம் என்றால் என்ன?
எளிதில் அணுகமுடியாத பகுதிகளான ஊரகப் பகுதிகள், மலைக்கிராமங்கள் உள்ளிட்டவற்றில் வசிப்பவர்களுக்கு, வீடியோ கான்பரன்சிங், தொலைதூரக் கண்காணிப்பு, மொபைல் போன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மருத்துவச் சேவைகளை வழங்கும் முறையையே, தொலைமருத்துவம் என்று குறிப்பிடுகிறோம். இது நோயாளிகள், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, மருத்துவச் சேவைகளைப் பெற அனுமதிக்கிறது. இதன்மூலம், நோயாளிகள் சிகிச்சைப் பெறும் பொருட்டு, மருத்துவமனைகள் உள்ளிட்ட மையங்களுக்குச் செல்லும் போக்கைக் குறைக்கின்றது.
தொலைமருத்துவச் சேவை
நோயாளிகளுக்குத் தேவையான முதன்மைப் பராமரிப்பு ஆலோசனைகள், நிபுணர்களின் பரிந்துரைகள், மனநல ஆலோசனைகள், நாள்பட்ட நோய்கள் தொடர்பான சிகிச்சை முறைகள், தடுப்பு மற்றும் பராமரிப்பு சேவைகள் உள்ளிட்டவற்றை, தொலைமருத்துவச் சேவை வழங்கும் தளங்கள் அளித்து வருகின்றன.
நோயாளிகள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, இணையத்தின் உதவியுடன் நோயைக் கண்டறிதல், அதற்குரிய மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சை முறைகள் குறித்து, மருத்துவருடன் விவாதித்து, தேவையான மருந்துகளையும், மருத்துவத்தையும் பெற இயலும்.
மெய்நிகர்க் கலந்தாலோசனைகள்
விர்ச்சுவல் எனப்படும் மெய்நிகர்க் கலந்தாலோசனைகளின் மூலம் மருத்துவர்களின் அப்பாயிண்ட்மெண்டைப் பெற்று, வீடியோ கான்பரன்சிங் வாயிலாக, மருத்துவச் சேவைகளைப் பெறுதல்.
தொலைதூரக் கண்காணிப்பு
நோயாளிகள் அணிந்து உள்ள சாதனங்கள் அல்லது இணைக்கப்பட்டு உள்ள உபகரணங்களின் மூலம், நோயாளியின் உடலின் ரத்த அழுத்தத்தின் அளவு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இதயத்துடிப்பின் விகிதம், செயல்பாட்டு விகிதம் உள்ளிட்டவற்றை, இணைய வசதியின் மூலம் கண்காணிக்க முடியும். இதன்மூலம். சுகாதார வல்லுநர்கள், வீட்டில் இருக்கும் நோயாளியின் உடல்நிலையை, அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும்.
தரவுகள் பாதுகாப்பு
நோயாளிகளின் மருத்துவ தரவுகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்ய, தொலைமருத்துவச் சேவை வழங்கும் தளங்கள் என்கிரிப்டட் செய்யப்பட்ட தகவல்தொடர்பு சேனல்களைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில், நோயாளிகளின் மருத்துவ விவரங்கள் குறித்த தரவுகளின் பாதுகாப்பிற்காக, கடுமையான நெறிமுறைகள் அமலில் உள்ளன.
மின்னணுச் சுகாதாரப் பதிவுகளின் ஒருங்கிணைப்பு
இந்த நடைமுறையானது, தரவுகள் பராமரிப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாது, நோயாளிகளின் மருத்துவ விவரங்கள் குறித்த தரவுகளை, சுகாதார நிபுணர்களுக்கு எளிதாகப் பகிரப் பேருதவி புரிகிறது.
நோயாளிகளுக்கான பிரத்யேகப் போர்ட்டல்கள்
நோயாளிகள், தங்களுக்கென்று உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேகப் போர்ட்டல்களின் மூலம், அவர்களின் மருத்துவ விவரங்கள், சோதனை முடிவுகள் உள்ளிட்டவற்றைப் பார்வையிடலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், இந்தப் போர்ட்டல்களின் வாயிலாக மருத்துவ நிபுணர்களைத் தொடர்பு கொள்ள முடியும்.
நன்மைகள்
மருத்துவ அணுகலை எளிதாக்குகிறது
இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை உள்ள நாட்டில், கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோருக்கு, மருத்துவச் சேவைகள் இன்னும் சரியான அளவில் கிடைக்காத நிலையே நிலவி வருகிறது. தொலைமருத்துவச் சேவையின் மூலம், ஊரகப்பகுதி மற்றும் மலைவாழ்க் கிராமங்களில் வசிப்பவர்களும் மருத்துவச் சேவைகளை எளிதாகப் பெற முடிகிறது. நோயாளிகள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே மருத்துவச் சேவைகளைப் பெற முடிவதால், அவர்களின் பணமும், நேரமும் அதிகளவில் மிச்சமாகிறது.
பாதுகாப்பின் தரம் மேம்படுகிறது
தொலைமருத்துவமானது, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துகிறது. நோயாளிகள், அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கண்காணிக்கவும், அவர்களுக்குத் தேவையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ளவும், அதன் முன்னேற்றத்தைக் கொண்டு, சிகிச்சை முறையில் மாற்றங்களை மேற்கொள்ளவும் உதவுகிறது. சிகிச்சைமுறைத் தொடர்பாக, நோயாளிக்கும், மருத்துவருக்குமிடையே, தவறான புரிதல்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
மருத்துவச் சேவை, அதுவும் குறைந்த விலையில்…
தொலைமருத்துவ முறையானது, நோயாளிகளை மருத்துவமனைகள் உள்ளிட்ட மையங்களுக்குச் செல்லும் வாய்ப்பைக்குறைத்து உள்ளதால், நோயாளிகளுக்கு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை நீக்கி உள்ளதால், அதிகளவிலான பணமும் ,நேரமும் மிச்சமாகின்றன.
மேலும் வாசிக்க : ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயலிகளின் நன்மைகள்
காத்திருத்தலைக் குறைக்கிறது
பாரம்பரிய மருத்துவ முறைகளில் மருத்துவர்கள் அல்லது சுகாதார நிபுணர்களைப் பார்த்துச் சிகிச்சைப் பெற, நோயாளிகள் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் வரைக்கூட காக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தொலைமருத்துவ முறையில் ,நோயாளிகள் இணைய வசதியின் உதவியுடனேயே, தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று விடுவதால், காத்திருப்பு நேரங்கள் குறைகின்றன. இதன்மூலம், நோயாளிகள் சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது.
பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துகிறது
எளிதில் அணுகும்வகையிலான சுகாதாரத்தை, மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், பெரும்பாலான மக்களை, தொற்றுநோய்கள் பாதிப்பில் இருந்து எளிதாகக் காக்க, தொலைமருத்துவ முறை உதவுகிறது. இந்த நீரிழிவுப் பாதிப்பு, இதய நோய்கள் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களை நிர்வகிக்கவும் உதவுகிறது.
தொலைமருத்துவ முறையானது, நாட்டின் சுகாதாரப் பராமரிப்பில் புதிய புரட்சியையே ஏற்படுத்தி உள்ளது. எளிமையான அணுகல்தன்மை, குறைந்த செலவு, பொது சுகாதார மேம்பாடு உள்ளிட்ட சிறப்பம்சங்களின் மூலம், நாட்டில் லட்சக்கணக்கான மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்க்கையில் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றால் அது மிகையல்ல.