A person sitting on the floor presents a view of their foot from underneath, with a red shade.

நீரிழிவு மேலாண்மைக்கான வாழ்க்கைமுறை மாற்றங்கள்

நீரிழிவுப் பாதிப்பு என்பது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பால் ஏற்படும் நாள்பட்ட நோய்ப்பாதிப்பு ஆகும். இந்நோய் ரத்த நாளங்கள், சிறுநீரகங்கள், இதயம் மற்றும் பிற உறுப்புகளுக்குக் கடும் சேதம் விளைவிக்கிறது.இன்சுலின் ஹார்மோன் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இந்த ஹார்மோன் சுரக்காத அல்லது போதிய அளவு சுரக்காத நிலையே நீரிழிவு நோய்க்குக் காரணமாகிறது.

சர்வதேச அளவில் 420 மில்லியனுக்கும் மேற்பட்டோர்,இந்த நீரிழிவு நோய்ப்பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்து உள்ள உலகச் சுகாதார அமைப்பு, இந்தியாவில் மட்டும் 77 மில்லியன் பேர் நீரிழிவு நோயாளிகள் உள்ளதாகவும், இதன் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டு உள்ளது.

ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை மற்றும் மன அழுத்த பாதிப்பே, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணிகளாக உள்ளன. நோயாளிகளின் தினசரி நடவடிக்கைகளைச் சீரமைப்பதன் மூலம், நீரிழிவு நோய்ப்பாதிப்பைக் கட்டுப்படுத்த இயலும். நீரிழிவு நோய்ப்பாதிப்பு குறித்து பெரும்பாலானோர் அறிந்து கொள்ளாததனால், அதன் பாதிப்பானது தீவிரமடைந்து, கடுமையான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

நீரிழிவு மேலாண்மைக்கான வழிமுறைகளைக் கடுமையாகக் கடைப்பிடிப்பதன் மூலம், நோய்ப்பாதிப்பைக் கண்காணிக்க முடிவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையையும் ஊக்குவிக்கிறது.

நீரிழிவு மேலாண்மைக்கான முதன்மையான வழிகாட்டிகள்

சரியான உணவை உட்கொள்ள வேண்டும்

நீரிழிவு நோயாளிகளின் தீவிரத்தை நிர்வகிக்க, வழக்கமாக உணவுமுறை அவசியமானதாகிறது. நீரிழிவு நோய்ப்பாதிப்பிற்கு உள்ளானவர்கள், சுகாதார வழங்குநரால் பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்குள், ரத்த சர்க்கரையின் அளவைப் பராமரிப்பது முக்கியமாகக் கருதப்படுகிறது. சர்க்கரைக் குறைவாகக் கொண்ட உணவுவகைகள்,சரியான அளவில் சோடியம் எனப்படும் உப்பு உள்ள உணவுகள், வீட்டில் சமைத்த உணவுகள், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கப் பேருதவி புரிகின்றன.

சரிவிகித உணவுமுறையைத் திட்டமிடவும்

என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், நாள் ஒன்றுக்கு எத்தனை முறைச் சாப்பிட வேண்டும் என்பதற்கான புரிதல், ஆரோக்கியமான உணவுத்திட்டத்தின் ஒருபகுதியாகக் கருதப்படுகிறது. கார்போஹைட்ரேட் சதவீதம் உள்ளிட்டவை, அடிக்கடி பயன்படுத்தப்படும் உணவுத் திட்டமிடல் நுட்பங்கள் ஆகும். நீரிழிவு நோய்ப்பாதிப்பின் தீவிரம் மற்றும் உங்களது வழக்கமான உணவுமுறைகள் உள்ளிட்டவைகளை ஆராயும் மருத்துவ நிபுணர், உங்களுக்குத் தேவையான உணவுத்திட்டத்தைப் பரிந்துரைச் செய்வார். அதில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்தும் வகையிலான உணவுவகைகள் இடம்பெறாது. சீரான உணவுத் திட்டமானது, பகல்வேளையில் உங்களை அதிக ஆற்றல் உள்ளவராகத் திகழ வைப்பதுடன், பசி உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.

கார்போஹைட்ரேட் அளவீடு

நாம் சாப்பிடும் உணவு வகைகள் மற்றும் அருந்தும் பானங்களில் உள்ள கார்போஹைட்ரேட்களின் அளவைப் பதிவு செய்யும் முறையே, கார்போஹைட்ரேட் அளவீடு என்று வரையறுக்கப்படுகிறது. உணவு வகைகள் மற்றும் பானங்களில் உள்ள கார்போஹைட்ரேட்களின் அளவைப் பொறுத்து, உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பு விகிதம் மாறுபடுகிறது. நார்ச்சத்துகள் கொண்ட முழுத்தானியங்கள், பழ வகைகள், காய்கறிகள் உள்ளிட்டவை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நிலைப்படுத்தலில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. வெள்ளை ரொட்டி, அரிசி, சர்க்கரை, தானியங்கள், பிஸ்கெட்டுகள், சாக்லேட்கள், பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவு வகைகளில், அதிகளவு கார்போஹைட்ரேட் உள்ளதால், இந்த உணவு வகைகளைக் குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.

A woman holding a spoon and fork in each hand is shown beside a plate of balanced food, viewed from the top on a white background.

தட்டு திட்டமிடல்

உணவுத் திட்டமிடலில், கார்போஹைட்ரேட் அளவீட்டைவிட தட்டு திட்டமிடல் எளிதானது.தட்டு திட்டமிடலில், உணவின் அளவுகளைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான உணவுச் சமநிலையைப் பேணலாம். உணவுத்தட்டின் பாதியைக் காய்கறிகளால் நிரப்பவும் (பச்சைப் பீன்ஸ், தக்காளி, வெள்ளரி, கீரைப் போன்றவை).மற்றொரு பாதியை, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கவும், ஒரு பகுதியில் கார்போஹைட்ரேட் மற்றும் மற்றொன்றில் புரதங்கள் கொண்ட உணவுகளை இடம்பெறச் செய்யவும். இந்த வகையான உணவுத்திட்டமிடலானது, கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும்

சந்தைகளில் கிடைக்கும் குளிர்பானங்களில், அதிகளவில் சர்க்கரை உள்ளது. இதுமட்டுமல்லாது, அவைகள் அதிகக் கலோரி கொண்டவைகளாகவும் உள்ளன. இவை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணிசமான அளவிற்கு மிக விரைவாக உயர்த்தி விடுகின்றன. உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு அல்லது அதற்கு முந்தைய நிலை இருப்பின் உடனடியாக, இந்தப் பானங்களின் பயன்பாட்டை நிறுத்திக் கொள்வது நல்லது.

சரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல்

சரியான அளவிலான உடற்பயிற்சிப் பழக்கமானது, நீரிழிவு நோய்ப்பாதிப்பைக் கட்டுப்படுத்தவல்ல முக்கிய காரணியாகச் செயல்படுகின்றன. நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது, உடலில் உள்ள தசைகள் இயங்குகின்றன. அப்போது அந்த இயக்கத்திற்கு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையானது ஆற்றல் மூலங்களாகச் செயல்படுகின்றன. தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம், உடலின் இன்சுலினும் சரியான அளவிற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவானது கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்வானது நாள்பட்ட நிகழ்வு என்பதால், நீங்கள் உடற்பயிற்சியின் தீவிரத்தைக் குறைக்கும் போது, அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. தோட்ட வேலைகள், நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வது நல்லது.

மேலும் வாசிக்க : மன ஆரோக்கியத்தில் டிஜிட்டல் கருவிகளின் பங்கு

உடல் சுறுசுறுப்பு எப்போதும் முக்கியம்

நடைப்பயிற்சி, குறுகிய கால அளவிலான உடற்பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதன் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இது நீரிழிவு நோய்ப்பாதிப்பு ஏற்படாமல் காக்க உதவுகிறது. இதன்காரணமாக, இதய நோய்ப்பாதிப்பிற்கான வாய்ப்பும் குறைகிறது.

வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள்

இரத்தத்தில் சர்க்கரையின் இருப்பை, சரியான அளவில் பராமரிப்பதில், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. புதிய வகையான உணவுமுறையை முயற்சித்துப் பார்க்கும் போதோ, வாழ்க்கைமுறையில் முக்கியமான மாற்றங்களை மேற்கொள்ளும்போதோ, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சரிபார்க்கவும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்காக நீங்கள் மேற்கொண்ட சோதனைகள் பலன் அளித்ததா என்பதைக் கண்டறிய, மருத்துவப் பரிசோதனைகள் பேருதவி புரிகின்றன.

மன அழுத்த அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்வதில், மன அழுத்தத்தின் பங்கு அளப்பரியது ஆகும். மன அழுத்த பாதிப்பால் ஏற்படும் பதட்ட உணர்வானது, சரியான மருந்தை உரிய நேரத்தில் உட்கொள்ளவிடாது, அதேபோன்று ஆரோக்கியமான உணவுமுறையை மேற்கொள்ளவோ, சரியான அளவிலான உடற்பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்காததால், நீரிழிவு மேலாண்மை என்ற அம்சமே அடிபட்டுப் போகின்றது. யோகா, சுவாசப் பயிற்சிகள், மனதுக்கு விருப்பமான பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்டவை, மன அமைதிக்கு உங்களை இட்டுச் செல்கின்றன. இதன்காரணமாக, மன அழுத்தமானது கட்டுப்படுத்தப்படுகின்றது.

புகைப்பிடித்தலுக்குக் குட்பை

நீரிழிவு நோய்ப்பாதிப்பானது, இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய்கள் நரம்பு பாதிப்பு, கால்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்டவைகளின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்கின்றது. புகையிலைப் பொருட்களின் பழக்கம், மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கமானது, நீரிழிவுப்பாதிப்பு, இதய நோய்கள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவராக இருந்தால், உடனடியாக அந்தப் பழக்கத்தைக் கைவிடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்பழக்கத்தைக் கைவிடமுடியவில்லை என்றால், அதற்கான மருத்துவரை நாடி உதவிகளைப் பெறலாம்.

மேற்குறிப்பிட்டு உள்ள வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, நீரிழிவு மேலாண்மையைத் திறம்பட கையாண்டு, நீரிழிவுப் பாதிப்பு என்ற கொடூர அரக்கனை விரட்டுவோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.