தொலை மருத்துவ சேவைகளின் வகைகளை அறிவோமா?
மருத்துவச் சேவைகளை மேம்படுத்துவதற்கும், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், மருத்துவச் சேவைகளைக் கிடைக்கும் வண்ணம் உதவும் தொழில்நுட்பமே, டெலிமெடிசின் எனப்படும் தொலை மருத்துவம் ஆகும். துவக்கக் காலத்தில், மருத்துவ வசதிகள் இல்லாத கிராமப்புற மற்றும் மலைப்பகுதி மக்களுக்கு மருத்துவச் சேவைகள் வழங்க இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவில் 65 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள், கிராமப்பகுதிகளிலேயே வசிக்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைக் குணப்படுத்துவதற்குப் போதுமான அளவிலான மருத்துவ வசதிகள் இல்லாத நிலை அங்கு நிலவி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்களின் உதவியுடன், கிராம மற்றும் மலைப்பகுதி மக்களுக்கு மருத்துவச் சேவைகளை வழங்க தொலை மருத்துவம் உதவுகிறது.உடல்நலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, தொலை மருத்துவச் சேவையின் மூலமாக, மருத்துவ நிபுணர்களிடம் இருந்து மருத்துவச் சேவைகள் எளிதாகப் பெற முடிகின்றது. இம்முறையின் மூலம், நோயாளிகள் எளிதாக மருத்துவ நிபுணர்களை அணுக முடிவதால், இந்த நடைமுறை, மருத்துவத் துறையில் மிக வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது.
இந்தக் கட்டுரையில், தொலை மருத்துவத்தின் வகைகள் குறித்து விளக்கமாகக் காண்போம்.
தொலைதூரக் கண்காணிப்பு
தொலைதூரக் கண்காணிப்பு என்பது, தொலை மருத்துவச் சேவையின் முக்கிய வகைகளுள் ஒன்று ஆகும். இந்த முறையில், தொலைதூரத்தில் இருக்கும் நோயாளியின் முக்கிய அறிகுறிகள் மற்றும் உடல் ஆரோக்கிய நிலையை, மருத்துவர்த் தாம் இருக்கும் இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். நீரிழிவு, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இம்முறைச் சிறந்தது.நோயாளிகளின் உடல்நலத்தை ஆராய்ந்து, சிகிச்சை முறையை மாற்ற தொலைதூரக் கண்காணிப்பு மருத்துவர்களுக்கு உதவுகிறது.
விர்ச்சுவல் எனப்படும் மெய்நிகர் ஆலோசனைகள்
நோயாளிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்தே மருத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை விவரங்களைப் பெற மெய்நிகர் ஆலோசனைகள் உதவுகின்றன. மருத்துவ மையங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், உடலியக்கக் குறைபாடு உள்ளவர்கள், அதிகத் தொலைவில் உள்ளவர்கள், போதிய நேரம் இல்லாதவர்கள் உள்ளிட்டோருக்கு, இந்த முறையானது, ஆபாந்பாந்தவனாக விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையல்ல. விர்ச்சுவல் ஆலோசனை நிகழ்வானது போன் அல்லது வீடியோ கான்பரன்ன்சிங் வாயிலாகவே நடைபெறுகின்றன. இது மருத்துவ நிபுணர்களை, தொலைதூரத்தில் இருக்கும் நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள உதவுகிறது.
ஆன்லைன் முறையிலான மருந்துகள் பரிந்துரை
தொலை மருத்துவச் சேவையின் ஒரு வகையாக, ஆன்லைன் முறையிலான மருந்துகள் பரிந்துரை முறையானது உள்ளது. இது, மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை ஆன்லைன் முறையில் பெற உதவுகிறது. உடலியக்கக் குறைபாடுகள் மற்றும் நீண்ட தொலைவு காரணமாக, மருத்துவ மையங்களுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு, இந்த ஆன்லைன் முறையிலான மருந்துகள் பரிந்துரை முறையானது பேருதவி புரிகிறது. இந்த முறையானது, மருந்து விற்பனை மையத்திற்கு, டிஜிட்டல் முறையில், மருந்துகளை வழங்குகிறது. நோயாளிகள், தங்களுக்குத் தேவையான மருந்துகளை, மருந்துகடைக்கு நேரில் சென்றோ அல்லது ஹோம் டெலிவரி முறையிலோ பெற்றுக் கொள்ளலாம்
மேலும் வாசிக்க : நவீன மருத்துவமனைகளில் தொலைமருத்துவத்தின் பங்கு
டிஜிட்டல் சிகிச்சை முறைகள்
டிஜிட்டல் சிகிச்சை முறைகள், தொலை மருத்துவச் சேவையின் ஒரு வகையாகக் கருதப்படுகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அடிப்படையிலான மொபைல் செயலிகள், உடல்நலத்தைக் காக்கும் வகையிலான அணியக்கூடிய சாதனங்கள், ஆன்லைன் தளங்கள் உள்ளிட்டவை, மருத்துவச் சேவைகள் வழங்கும் நிகழ்வுகளில் பங்குபெறுகின்றன. மனச்சோர்வு, பதட்டம் உள்ளிட்ட நாள்பட்ட நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த டிஜிட்டல் அடிப்படையிலான சிகிச்சை முறைகள் அதிகம் பயன்படுகின்றன. இண்டர்நெட் வசதி இருப்பின், இந்தச் சேவையை நோயாளிகள், எந்த இடத்தில் இருந்தாலும் மிகக் குறைந்த செலவிலேயே பெற முடியும்.
தொலை மருத்துவச் சேவைகளைப் பெற விரும்புவோர், தங்களுக்கு அதில் எந்த வகைச் சேவைப் பொருத்தமாக இருக்கும் என்பதைக் கவனமுடன் தேர்ந்தெடுத்து அதைப் பின்பற்றினால், நோய்ப்பாதிப்புகளில் இருந்து விரைவாக விடுபடலாம்…