உடற்பயிற்சிக்குப் பிந்தைய நீட்சிப் பயிற்சிகளின் அவசியம்
நீங்கள் தினமும் காலையில் பல் துலக்கிய பின் வாய் கொப்பளிப்பது போல, உடற்பயிற்சிக்குப் பின் நீட்சிப்பயிற்சி செய்வது அவசியம்.உடற்பயிற்சிகளை நிறைவேற்றுவதில், அப்பயிற்சிகளுக்குப் பிந்தைய நீட்சிப்பயிற்சிகளுக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்பதே, பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.
நீண்ட நேர உடற்பயிற்சிக்குப் பின் மீண்டும் 15 நிமிடங்கள் நீட்சிப்பயிற்சி செய்வது கடினமாக இருக்கலாம்.ஆனால், உடற்பயிற்சிகளுக்குப் பிந்தைய நீட்சிப் பயிற்சிகள், பல நன்மைகளை அளிப்பதாக உள்ளன.
நன்மைகள்
கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டபிறகு, உடல் மிகுந்த சோர்வுடன் காணப்படுவது சாதாரண நடவடிக்கைதான். நீங்கள் அதே சோர்வுடன் , நீட்சிப் பயிற்சிகளையும் சில நிமிடங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில், உங்களது உடற்பயிற்சித் திட்டமானது முழுமையடைகின்றது. உடற்பயிற்சிகளுக்குப் பிந்தைய நீட்சிப் பயிற்சிகள் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் கீழே தொகுக்கப்பட்டு உள்ளன.
காயங்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது
கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, உடலின் தசைகள் இறுக்கம் அடைகின்றன. இதன்காரணமாக, பெரிய காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, கடினமான உடற்பயிற்சிகளுக்குப் பிறகு, சில நீட்டிப்புப் பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். இதனால், தசைகள் தளர்வடையும். காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும்.
படிப்படியான தளர்வு
கடினமான உடற்பயிற்சிகளுக்குப் பிறகு, உங்கள் உடல் மிகுந்த சோர்வுநிலையில் இருக்கும். நீங்கள், உங்களது உடலை, படிப்படியாகத் தளர்வு நிலைக்குக் கொண்டு வர வேண்டும். உங்கள் மனம் மற்றும் உடல் தேவையான தளர்வைப் பெற சிறிது கால அவகாசம் அவசியமாகின்றது. உடற்பயிற்சிகளுக்குப் பிறகு, சில நீட்சிப்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், உடல் தளர்வைப் படிப்படியாக அடைய முடியும்.
லாக்டிக் அமிலத்தை நீக்குதல்
கடினமான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும்போது, உடலில் லாக்டிக் அமிலமானது சுரக்கின்றது. இந்த அமிலச் சுரப்பின் காரணமாக, தசை வலி ஏற்படுகின்றது. இந்தத் தசைவலியானது, உங்களை நாள்முழுவதும் சோர்வாக வைத்திருக்கும்.
உடற்பயிற்சிக்குப் பின் நீட்சிப்பயிற்சி செய்தால், லாக்டிக் அமிலம் குறைந்து தசைவலி தவிர்க்கப்படும்.
சிறந்த நீட்சிப் பயிற்சிகள்
நீங்கள் எந்த வகையான உடற்பயிற்சிகளைச் செய்தாலும், தொடர்ந்து நீட்சிப்பயிற்சிகளையும் மேற்கொண்டால், உடலின் ரத்த ஓட்டம் மேம்படும், தசைகளில் உண்டாகும் விறைப்புத்தன்மைக் குறைகின்றது.
ஓட்ட பயிற்சிகள்
உடற்பயிற்சிகளுக்குப் பிறகு, ஓட்டப்பயிற்சியை மேற்கொள்ளும்பட்சத்தில், அது உங்கள் உடலின் தொடை எலும்புகள், இடுப்பு நெகிழ்வுகள் உள்ளிட்டவைகளைத் தளர்வடையச் செய்கின்றன.
உடலின் கீழ்பகுதியை உயர்த்துதல்
உடற்பயிற்சிகளுக்குப் பிறகு, உடலின் கீழ்பகுதியை உயர்த்தும் வகையிலான நீட்சிப்பயிற்சிகளை மேற்கொண்டால், தொடை எலும்புகள், இடுப்பு நெகிழ்வுகளில் உள்ள சிக்கல்களைக் களைய உதவும்.
உடலின் மேல்பகுதியை உயர்த்துதல்
உடற்பயிற்சிக்குப் பின், உடலின் மேல்பகுதியை உயர்த்தும் வகையிலான நீட்சிப்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன்பின்னர், மணிக்கட்டு, முதுகு தசைகள் உள்ளிட்ட பகுதிகளுக்குக் கூடுதல் கவனம் அளிக்க வேண்டும். மேல் முதுகில் இருந்து, கழுத்து வரை உள்ள தசைகளை நீட்டிப்பது மிகவும் முக்கியமானது. உடல் வலிமையை மேம்படுத்தும் உடற்பயிற்சியை மேற்கொள்பவர்கள், இந்தத் தசைகளுடனான பயிற்சியைப் பெரும்பாலும் தவிர்ப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
உடற்பயிற்சி நிகழ்வின் போது, தசைகள் இறுக்கம் அடைகின்றன. இந்தத் தசை இறுக்க நிகழ்வானது, உடல் வலிமையைக் குன்றச் செய்வதாக உள்ளது. உடற்பயிற்சி மேற்கொள்வதில் காட்டும் அக்கறையை, தசைகளை வலிமைப்படுத்துவதிலும் காட்ட வேண்டியது அவசியம் ஆகும்.
ஒவ்வொரு கடினமான உடற்பயிற்சிகளுக்குப் பிறகும், உங்கள் தசைகளுக்குப் போதிய அளவிலான ஓய்வை வழங்குவது அவசியம் ஆகும். இதற்கு, உடற்பயிற்சிகளுக்குப் பிறகான நீட்சிப் பயிற்சிகள் உதவுகின்றன.
தொடை எலும்பு நீட்சிப்பயிற்சிகள்
பெரும்பாலான உடற்பயிற்சிகள், கால் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளது. உடற்பயிற்சியின் காரணமாக, தசைகள் இறுக்க நிலையை அடைந்திருக்கும். உடற்பயிற்சிகளை முடித்தபின்னர், தொடை எலும்பு நீட்சிப் பயிற்சிகளை மேற்கொள்ளும்பட்சத்தில், தசைகளை, இறுக்க உணர்வில் இருந்து விடுபட வைக்கின்றன. முதுகின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் வலியுணர்விற்கும், இந்த நீட்சிப் பயிற்சியானது தீர்வு வழங்குகிறது.
கை மற்றும் மணிக்கட்டு நீட்சிப்பயிற்சி
உடலின் சிக்கலான மூட்டு இணைப்புகளில் ஒன்றாக, மணிக்கட்டு பகுதி உள்ளது. இது உடலின் பரந்த அளவிலான இயக்கங்களுக்குக் காரணமாக அமைகின்றது. மலையேற்றப்பயிற்சி மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோருக்கு, இந்தக் கை மற்றும் மணிக்கட்டு நீட்சிப்பயிற்சி பேருதவி புரிகிறது.
பாலாசனம்
குழந்தையின் உடலமைப்பை ஒத்த இந்த யோகாப் பயிற்சியானது, தீவிர உடற்பயிற்சிகளுக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய சிறந்த நீட்சிப்பயிற்சியாக விளங்குகிறது. இந்தப் பயிற்சியானது உடல் மற்றும் மனதைச் சாந்தப்படுத்துவதோடு மட்டுமல்லாது, நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கின்றது. முதுகெலும்பு, இடுப்பு, கணுக்கால் பகுதிகளின் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறது. கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குகிறது.
பக்கவாட்டு நீட்சி
பக்கவாட்டு நீட்சிப்பயிற்சியானது, விலா எலும்புகளுக்கும், அடிவயிற்றுப் பகுதிக்கும் இடையில் இருக்கும் தசைகளை வலுவூட்ட உதவுகிறது. இதன்மூலம், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பவர்களுக்கு ஏற்படும் தசைகளின் சுருக்கங்களுக்குத் தீர்வு கிடைக்கின்றன.
முதுகெலும்பு இயக்கத்திற்கு உதவும் நீட்சி
இந்தப் பயிற்சியானது, சிறந்த செரிமானத்திற்கும் காரணமாக அமைகின்றது. இடுப்பு மற்றும் குளூட்டுகளுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது.
இடுப்பு நெகிழ்வு நீட்சி
இந்தப் பயிற்சியானது, கால் தசைகள், குளூட்டுகளில் ஏற்படும் இறுக்கங்களைப் போக்கி, தளர்வடைய உதவுகிறது.
மேலும் வாசிக்க : உடற்பயிற்சித் திட்டங்களில் ஓய்வின் முக்கியத்துவம்
குவாட் நீட்சி
இந்தப் பயிற்சியின் மூலம், கால் தசைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. காயங்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
புஜங்காசனம்
இந்த யோகாப் பயிற்சியின் மூலம், முதுகெலும்பு, தோள்பட்டை, கைகள், குளூட்டுகளுக்குத் தேவையான வலிமைக் கிடைக்கின்றது.
உடற்பயிற்சிகளுக்குப் பிந்தைய நீட்சிப் பயிற்சிகள், உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகின்றன. உடற்பயிற்சியின் போது செயல்திறனை மேம்படுத்துகின்றன. தசைகள் அவற்றின் வடிவத்தை மீண்டும் பெற உதவுகின்றன.
உடற்பயிற்சிகளுக்குப் பிந்தைய நீட்சிப் பயிற்சிகளை மேற்கொண்டு, உடல் அமைப்பை வலுப்படுத்தி ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வீராக…