இதய நலனைக் கண்காணிக்க உதவும் கருவிகள்
சமீபகாலமாக, இதய நோய்ப் பாதிப்பு, அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகப் பாதித்து வருவதால், அதுதொடர்பான பய உணர்வு, மக்களிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையில், ஆண்டுதோறும் 17.9 மில்லியன் மக்கள், இதய நோய்ப் பாதிப்பால் மரணம் அடைவதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதய நோய்ப் பாதிப்பு உயிருக்கு ஆபத்தானது. எனவே, அடிக்கடி இதயப் பரிசோதனைகள் செய்வது அவசியம்.மருத்துவத் துறையில் ஏற்பட்டு உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, இதய நலனைக் கண்காணிக்கும் வகையிலான சோதனைகள், அணியக்கூடிய சாதனங்கள் உள்ளிட்டவை, மக்களின் பயன்பாட்டிற்கு வந்து உள்ளன.
இதய நலனைக் கண்காணிக்க உதவும் சிலவகைச் சாதனங்களை விரிவாகக் காண்போம்.
EKG monitoring
ஒருவரின் இதயத்துடிப்பின் வீதத்தைக் கண்டறிய எலெக்ட்ரோகார்டியோகிராம் சோதனைப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் வாட்ச், நம் மணிக்கட்டில் ஜாலியாக அமர்ந்தவாறே, இதயத்துடிப்பின் வீதத்தை அளவீடு செய்து வருகிறது. இந்த ஸ்மார்ட் வாட்சை, நாம் அவ்வப்போது சார்ஜ் செய்து கொண்டு உபயோகித்து வர முடியும்.
இந்தச் சார்ஜ் போடும் விவகாரத்திற்கு முடிவு கட்டும் விதமாக, சீன விஞ்ஞானிகள், கைகளில் அணியக்கூடிய வகையிலான EKG உபகரணங்களை உருவாக்கி உள்ளனர். இந்த உபகரணத்தை, நீங்கள் தனியாகச் சார்ஜ் போடத் தேவையில்லை. நீங்கள் இதை அணிந்து கொண்டு, உங்களது அன்றாட நடவடிக்கைகளை நீங்கள் செய்து கொண்டிருந்தாலே போதும். உங்களது உடல் அசைவுகளின் ஏற்படும் ஆற்றலைக் கொண்டே, இந்த உபகரணம், சார்ஜ் ஏறிவிடும்.
சோதனைப் பட்டைகள்
சோதனைப் பட்டைகள் என்பது ஏதோ புதியதொரு வரவு ஒன்றுமில்லை. ஏற்கனவே, பல ஆண்டுகளாகக் குளுகோமீட்டர்கள், சிறுநீரகச் சோதனைகள் உள்ளிட்டவைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தவைகள் தான் ஆகும்.
ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய சோதனைப் பட்டையானது, இதய நலனைக் கண்காணிப்பதில், முக்கியப்பங்கு வகிக்கின்றது. காகிதத்தால் ஆன இந்தப் பட்டைகள், ரத்த சீரத்தை அளவிட மட்டுமல்லாது, இதில் உள்ள 3 குறிப்பான்கள், இதயச் செயலிழப்பைக் கண்டறியவும் உதவுகின்றன.
மிகக் குறைந்த கால அளவிலான இந்தச் சோதனையின் முடிவுகளை, அதற்கெனப் பிரத்யேகமாக உள்ள ரீடரின் உதவியுடன், ஸ்மார்ட்போனிலேயே பெற முடியும்.
மென்மையான, கரையும் தன்மைக் கொண்ட இம்பிளாண்ட்
இதய நலன் மற்றும் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய நிலையைக் கண்காணிக்க, உடலில் சென்சார்க் கருவி பொருத்தப்படும்.ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அந்தச் சென்சார்க் கருவியை அகற்ற வேண்டியது அவசியம் ஆகும்.
மருத்துவத் துறையில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சியின் அடிப்படையில் உருவாகி உள்ள புதிய தலைமுறைக்கான இம்பிளாண்ட், இதயத்தின் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, உடலில் உள்ள லாக்டிக் அமிலத்தின் அளவு, pH அளவு, ரத்த அழுத்தத்தின் விகிதம் உள்ளிட்டவற்றையும் அளவிடுகிறது. கண்காணிப்பு நிகழ்வுகள் முடிந்தபின்னரும், இதை உடலில் இருந்து அகற்ற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இந்த வகைச் சென்சார்கள், மிகவும் மென்மையான தன்மைக் கொண்டவை. இவை உடலுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாத வகையில், கரைந்து விடும் இயல்பு கொண்டவை ஆகும்.
ஸ்மார்ட் ஸ்டெண்ட்கள்
இதய நோய்ப் பாதிப்பு நோயாளிகளுக்கு, அவர்களின் இதயத்தில் ஸ்டெண்ட் கருவி வைக்கப்படுகிறது. இந்தக் கருவியானது, ரத்த குழாயில் ஏற்பட்ட அடைபை நீக்கி, சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
பாரம்பரிய ஸ்டெண்ட் முறையில் சில குளறுபடிகள் உள்ளன. இது ஸ்மார்ட் ஸ்டெண்ட் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.
ஸ்மார்ட் ஸ்டெண்ட்கள், இதய நோய்ப்பாதிப்பிலிருந்து ஒருவரை மிக விரைவாக மீட்டெடுக்க உதவுகிறது.
பயோ மார்க்கர்கள்
இரத்த சோதனையானது, குறிப்பிட்ட நபரின் அனைத்துத் தகவல்களையும் ஒருங்கே அளிப்பதாக உள்ளது.இத்தகைய ரத்த சோதனையில், பயோ மார்க்கர்களைப் பயன்படுத்தும்போது, இதயப் பாதிப்பிற்குப் பிறகு, மூளையில் ஏற்படும் நிகழ்வுகள் கண்காணிக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக, எலியிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இதயப் பாதிப்பிற்குப் பிறகு, மூளையில் ஏற்பட்ட மாற்றங்கள், ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் செல்களில் கண்டறியப்பட்டதாக, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இதயத்துடிப்பில் ஒழுங்கற்ற தன்மை
இதயத்துடிப்பு மிக வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இருந்தால், அந்த நபர்ச் செயலற்ற நிலைக்குச் செல்ல வாய்ப்புண்டு. ஸ்மார்ட் வாட்ச் அணிந்திருந்தால், அது இதயத்துடிப்பின் ஒழுங்கற்ற விகிதத்தைப் பதிவு செய்யும். மேலும், அது அணிந்திருப்பவரை எச்சரித்து, தகுந்த சிகிச்சைப் பெற வலியுறுத்தும்.
இரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு கண்காணிப்பு
மருத்துவப் பரிசோதனைகளை, குறித்த நேரத்தில் மேற்கொள்ளும் பழக்கம் வெகுசிலருக்கு மட்டுமே உள்ளது. பெரும்பாலானோர், நோய்ப் பாதிப்பு வந்தப்பிறகே, மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிலை உள்ளது. இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு ஆகியவற்றை அடிக்கடி கண்காணிப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை (ஹைபர்டென்சன்) முன்கூட்டியே கண்டறிய முடியும்.அதுதொடர்பான சிகிச்சைகள் உடனடியாக மேற்கொள்ளப்படுவதால், விரைவில் நிவாரணம் அடைய முடிகிறது.
கையில் அணியும் சாதனம் மூலம் தமனி குறுநடுக்கம், வேகமான இதயத்துடிப்பு, வெண்ட்ரிக்கிள் குறுநடுக்கம் போன்ற பாதிப்புகளைக் கண்காணிக்கலாம்.இந்தச் சாதனத்தில் பதிவாகும் தகவல்கள், நேரடியாக மருத்துவருக்கு அனுப்பப்பட்டு, உரியச் சிகிச்சைக் குறித்த நேரத்தில் மேற்கொள்ள வழிவகுக்கிறது.
தமனி மற்றும் வெண்ட்ரிக்கிள் குறுநடுக்கம் போன்ற ஆபத்தான அறிகுறிகள் தோன்றும்போது, கையில் அணியும் சாதனம் நம்மை எச்சரிக்கிறது.இதன்மூலம், உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, நமது உயிர்த் தக்கநேரத்தில் காக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க : நீரிழிவுப் பாதிப்பை நிர்வகிக்க உதவும் கருவிகள்
உடற்பயிற்சியைக் கண்காணித்தல்
கையில் அணியும் சாதனம் மூலம் நாம் போதுமான உடற்பயிற்சி செய்கிறோமா என்பதைக் கண்காணிக்க முடியும்.உடல்நல மேம்பாட்டிற்காக, ஒரு இலக்கு நிர்ணயித்து அதற்கேற்ப நாம் செயல்படும் பட்சத்தில், அதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள், நினைவூட்டல்கள் உள்ளிட்டவைகளை அது நமக்கு வழங்குகிறது.
இன்றைய நவீன உலகில், இந்த அணியக்கூடிய சாதனங்களின் பயன்பாடு, இளைய தலைமுறையினரிடையே, அதிகமாகக் காணப்படுகிறது. உடல்நலம் சார்ந்தக் கட்டுப்பாட்டை, மக்கள் தங்கள் கைகளுள் வைத்து உள்ளதால், அதுகுறித்து அவர்கள் அதிகம் கவலைப்பட வேண்டிய நிலைத் தற்போது இல்லை. மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோயாளிகளுக்கு இந்தச் சாதனங்கள் அதிகப் பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றன.இத்தகையச் சாதனங்கள், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாது, உடல்நல மேம்பாட்டிற்கும் முக்கியக் காரணமாக அமைகின்றது.