A woman speaks to her doctor through video conferencing on a laptop.

நவீன மருத்துவமனைகளில் தொலைமருத்துவத்தின் பங்கு

மருத்துவத்துறையில் மிக வேகமாக வளர்ந்துவரும் நுட்பமாகத் தொலைமருத்துவம் விளங்கி வருகிறது. டெலிமெடிசின் எனப்படும் தொலைமருத்துவ முறையானது, நோயாளிகளுக்குப் பராமரிப்பு வழங்கும் முறையை மறுவரையறைச் செய்ய மருத்துவமனைகளுக்கு உதவுகின்றன. தொலைமருத்துவ முறையானது, பல்வேறு நன்மைகளை அளித்து வரும் நிலையில், சவால்களும் இதில் உள்ளன. பெரும்பாலான நவீன மருத்துவமனைகளில், தொலைமருத்துவ வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொலைமருத்துவ முறையின் நன்மைகள்

மேம்பட்ட அணுகல்முறை

நோயாளிகள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே மருத்துவச் சேவைகளைப் பெற, தொலைமருத்துவம் உதவுகிறது. கிராமப்பகுதிகள், மருத்துவச் சேவை வளர்ச்சி அடையாத மலைக்கிராமங்களில் உள்ள மக்களும், மருத்துவச் சேவையினை, இதன்மூலம் பெற முடியும்.

வசதிகள்

நோயாளிகள் இனி வழக்கமான வேலைகளை விட்டு, மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசோதனைகளை மேற்கொள்ளத் தேவையில்லை.நோயாளிகளின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படாததினால், மருத்துவமுறை மீது நோயாளிகளுக்கு ஒரு இணைபிரியாத உறவு ஏற்படுகிறது. தான் இருக்கும் இடத்திலேயே மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் கிடைத்துவிடுவதால், நோயாளியின் இணக்கம் மேம்படுகிறது.

குறையும் செலவினம்

தொலைமருத்துவமுறையானது, மருத்துவச் சேவைகளின் உள்கட்டமைப்பின் தேவைகளைக் குறைக்கின்றன. நோயாளிகளை, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவையைக் குறைப்பதனால், போக்குவரத்து செலவு எரிபொருள் செலவு உள்ளிட்ட செலவினங்களும், காலவிரயமும் தடுக்கப்படுகின்றன.

மேம்பட்ட தொடர்ப் பராமரிப்பு

நோயாளிகளுக்கான பராமரிப்பு சேவையை, சுகாதார நிறுவனங்கள் தொடர்ந்து வழங்க, தொலைமருத்துவ முறையானது உதவுகிறது. இந்த முறையின் மூலம், நோயாளிகள், மருத்துவ நிபுணர்களுடன் எளிதாகக் கலந்துரையாட முடிகிறது. நோயாளிகளின் மருத்துவ வரலாறு, சிகிச்சை முறைகள் உள்ளிட்டவைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவது மட்டுமல்லாது, அவை உரிய நேரத்தில் புதுப்பிக்கப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது.

சரியான நேரத்தில் விரைவான அணுகல்

அவசரச் சிகிச்சை அல்லது சிறப்பு வகையான சிகிச்சை நிகழ்வுகளில், நோயாளிக்குத் தேவையான சிகிச்சை முறைகளை விரைந்து மேற்கொள்ளும் பொருட்டு, சிகிச்சை நிபுணர் மற்றும் உதவி நிபுணர்களுக்கு இடையே விரைவான அணுகலைச் சாத்தியமாக்குகிறது. இதன்மூலம், நோயறிதல் மற்றும் சிகிச்சை நிகழ்வுகளில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படுகிறது.

A sick young girl wearing a mask is talking to a doctor via video conference.

தொலைநிலை முறையிலான கண்காணிப்பு

நாள்பட்ட நோய்ப்பாதிப்புகளைக் கொண்ட நோயாளிகளுக்கு, தொலைமருத்துவ முறையானது, தொலைநிலை முறையிலான கண்காணிப்புத் திறன்களைச் செயல்படுத்துகிறது. ஸ்மார்ட்போன்கள், அணியக்கூடிய வகையிலான சாதனங்கள் உள்ளிட்டவை, உடல்நலம் சார்ந்த முக்கியத் தரவுகளை, மருத்துவ நிபுணர்களுக்கு உடனுக்குடன் வழங்குகின்றன. இதன்மூலம், உரிய சிகிச்சையானது தக்க நேரத்தில் மேற்கொள்ள வழிவகைச் செய்கிறது.

சவால்கள்

தொழில்நுட்ப தடங்கல்கள்

தொழில்நுட்ப வளர்ச்சியானது, தொலைமருத்துவ சேவையை, பெரும்பாலான மருத்துவமனைகளில் சாத்தியமாக்கி உள்ளது என்றபோதிலும், அது சிலவிதமான தடங்கல்களையும் உருவாக்கி உள்ளது. அதிவேக இணைய வசதி, ஸ்மார்ட்போன்கள், கணினிகள் பயன்படுத்தும் வகையிலான டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி இல்லாத பகுதிகள், இன்னும் நம் நாட்டில் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள். தொலைமருத்துவ சேவை வசதி, அனைவரையும் சென்றடைந்திட, இந்த டிஜிட்டல் இடைவெளியைச் சரிசெய்வது முக்கியம் ஆகும்.

தரவுகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு

தொலைமருத்துவ முறையானது, நோயாளிகளின் உடல் ஆரோக்கியம் சார்ந்த தரவுகளின் அடிப்படையில் இயங்குகிறது. இந்த உடல்நலம் சார்ந்த தனிப்பட்ட தரவுகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது சவாலான நிகழ்வாக உள்ளது. இதில் ஏதேனும் தவறுகள் ஏற்படின் அது சட்ட மற்றும் நெறிமுறைச் சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.

நோயறிதல் எல்லைகள்

சில வகை மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை நடைமுறைகளுக்கு, துல்லியமான நோயறிதல் முறைக்கு, நோயாளி நேரில் வரவேண்டி உள்ளது. இத்தகைய நடைமுறைகளில், தொலைமருத்துவ முறையானது தோல்வியைத் தழுவுகிறது.

நோயாளி – நிபுணர்க்கு இடையேயான உறவு

நோயாளிக்கும், மருத்துவ நிபுணருக்கும் இடையே நம்பிக்கையையும், நல்லுறவையும் ஏற்படுத்துவது என்பது தொலைமருத்துவ முறையில் சவாலான நிகழ்வாக உள்ளது. குறிப்பிட்ட தருணங்களில், நோயாளி நேரில் இல்லாதது, இருவருக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்த கூடும்.

முறைகேடு அபாயங்கள்

தொலைமருத்துவ முறையில், தனித்துவமான பொறுப்பு அடிப்படையிலான சிக்கல்கள் மற்றும் முறைகேடு அபாயங்கள் உள்ளன. இவைகளிடம் இருந்து நோயாளிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களைப் பாதுகாக்கும் வகையிலான சட்டரீதியிலான கட்டமைப்புகள் மற்றும் தெளிவான வழிகாட்டுதல்கள் அவசியம் ஆகும்.

சவால்களைச் சமாளிக்கும் திறன்

நவீன மருத்துவமனைகளில், தொலைமருத்துவ சேவைகள் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள மருத்துவ நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோரின் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது.

மேலும் வாசிக்க : மொபைல் செயலிகளுக்கான ஒழுங்குமுறைப் பரிசீலனைகள்

உள்கட்டமைப்பிற்கான முதலீடு

தொலைமருத்துவ முறையானது, அனைவரும் அணுகக்கூடியதாக மாற வேண்டும் எனில், அரசாங்கங்கள் மற்றும் மருத்துவச் சேவை நிறுவனங்கள், பிராட்பேண்ட் உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தெளிவான வரைமுறை

தொலைமருத்துவச் சேவையின் விதிமுறைகள் உள்ளிட்டவைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையினதாக, கொள்கை வகுப்பாளர்கள் எளிமையாக்குவது அவசியமாகும்.

உரிய பயிற்சிகள்

மருத்துவ சேவை வழங்குநர்களுக்கு, தொலைமருத்துவம் தொடர்பான விர்ச்சுவல் எனப்படும் மெய்நிகர்த் தொடர்பு, தொலைமருத்துவ சேவைகளுக்கான கருவிகளின் செயல்பாடு குறித்த பயிற்சிகள் அவசியம் தேவைப்படுகின்றன.

தொலைமருத்துவ முறையின் சவால்களைத் தக்கமுறையில் நிவர்த்தி செய்து, இம்மருத்துவ சேவையினை, எல்லாத்தரப்பு மக்களுக்கும் கிடைக்கும்படி செய்து, அனைவரையும் ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ வைப்போமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.