உடற்பயிற்சி இலக்குகளைக் கண்காணிக்கும் செயலிகள்
உடல் ஆரோக்கியமாக வைத்திருக்கும் நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல, மிகவும் அத்தியாவசியமானதும் ஆகும். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தான், நாம் இந்தப் படிப்பினையைக் கற்றுக் கொண்டோம். சரியான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுமுறை, உடற்பயிற்சி செய்வதைத் தொடர்ந்து வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
உடற்பயிற்சியைக் கண்காணிக்கச் செயலிகள்
அவசியமா?
இன்றைய நவீன உலகில், நாம் தனிப்பட்ட அல்லது தொழில்சார்ந்த எவ்வித நடவடிக்கைகளானாலும்,பரிபூரணத்தை நாடுகிறோம்.. இந்த நிலையை அடைய கடினமாக உழைக்கும்போது, உடல்நலனைக் கவனிப்பதை மறந்துவிடுகிறோம்.உடலின் தேவைகளைப் புறக்கணிப்பதால், இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகி விடுகிறோம் என்பது அதிர்ச்சி தரும் உண்மையாகும்.
தொழில்நுட்ப வளர்ச்சியால், மனிதர்களின் வாழ்க்கை வசதிகள் பெருகியுள்ளன.மனிதனின் ஆறாவது புலனுறுப்பாக, ஸ்மார்ட்போன் மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு, மனிதர்களின் வாழ்க்கையில், மொபைல் போன்கள் இரண்டற கலந்துவிட்டன. மொபைல் போனின் பயன்பாடுகள் பல: தெரியாதவற்றைத் தெரிந்துகொள்ளவும், அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்கவும் உதவுகின்றன.
மொபைல் போன்களின் மூலமாகச் செயல்படுத்தப்படும் செயலிகளின் மூலமாக, தற்போதைய நிலையில், உடற்பயிற்சி இலக்குகளையும் கண்காணிக்க முடியும் என்று சொன்னால், நம்பமுடிகிறதா? ஆம் என்பதே அதற்கான பதில்…
உடற்பயிற்சி செயலி எவ்வாறு உதவுகின்றது?
ஒரு எளிய உடற்பயிற்சி செயலியானது, உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற வகையிலான உடற்பயிற்சி இலக்குகளை நிர்ணயித்து, அதைக் கடைப்பிடிக்கச் செய்து, அதன் முன்னேற்றத்தைக் கண்காணித்து, உடலின் செயல்திறனை அதிகரித்து, உடற்பயிற்சி இலக்குகளை அடைய உதவுகிறது.உணவின் கலோரிகள், உறக்கக் கால அளவு போன்றவற்றைக் கண்காணித்து, உடல் ஆரோக்கியத்தில் விரும்பிய முடிவுகளை அடைய உதவுகின்றன..
உடற்பயிற்சிச் செயலியானது, உங்கள் தனிப்பட்ட உடற்பயிற்சியாளர்ப் போன்று செயல்படுகிறது. சிறந்த உடற்பயிற்சி செயலியைப் பயன்படுத்தி, ஜிம்மிற்குச் செல்லும் செலவைக் குறைக்கலாம்.
உடற்பயிற்சி இலக்குகளைக் கண்காணிக்க உதவும் செயலிகள்
Charity Miles
இது ஒரு இலவசச் செயலி ஆகும். அன்றைய நாளில், நீங்கள் நடந்த காலடிகள், ஓட்டப்பயிற்சியின் போது கடந்த தொலைவு, சைக்கிளிங் உள்ளிட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் உங்கள் செயல்பாடுகளை, இந்தச் செயலியானது கண்காணிக்கிறது. இது ஒரு செயல்பாட்டிற்கு ஆகும் காலத்தையும் அளவிடுகிறது. இந்தச் செயலியில், இதயத்துடிப்பு வீதத்தை அளவிடும் அம்சமும் உள்ளதால், செயல்பாட்டின்போது, இதயத்துடிப்பில் ஏற்படும் மாறுபாட்டையும் அளவிட இயலும். இந்தச் செயலியின் முக்கியமான சிறப்பம்சம் யாதெனில், இந்தச் செயலியைப் பயன்படுத்தி, பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, உங்களுக்குப் பண வெகுமதியை அளிக்கிறது. இது உடற்பயிற்சி இலக்குகளை அடையும் நேரத்திலேயே, நிதி திரட்டவும் உதவுகின்றது.
மேலும் வாசிக்க : உடற்பயிற்சிகள் – உங்களைப் பற்றிச் சொல்வது என்ன?
Healthifyme
இது ஊட்டச்சத்துக் கண்காணிப்பைத் திறம்பட மேற்கொள்ளும் செயலி ஆகும். இது நாள்முழுவதுமான உணவு உட்கொள்ளலைச் சமப்படுத்துகின்றது. இந்தச் செயலியானது உடற்பயிற்சிகளின் இலக்குகளை மட்டுமல்லாது, உடல்நலம் சார்ந்த காரணிகளையும் ( நீர் அருந்தும் அளவு…) உள்ளிட்டவைகளையும் கண்காணிக்கிறது. இந்தச் செயலியானது, உடல் எடை நிர்வாகத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது, இதயத்துடிப்பில் ஏற்படும் விகிதத்தையும் அளவிடுகிறது. நீர் அருந்துதல், உணவு உட்கொள்ளல் குறித்த நினைவூட்டல்களை, இந்தச் செயலி மேற்கொள்கிறது.
Headspace
ஆரோக்கியமான நல்வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக, மன ஆரோக்கியமானது விளங்கி வருகிறது. ஆனால், இன்றைய அவசரகதியிலான உலகில், அமைதியான, தெளிவான, மன அழுத்தம் இல்லாத மனநிலை அமைவது என்பது மிகவும் சவாலான விசயமே ஆகும். மன அழுத்த பாதிப்பில் இருந்து விடுபட்டு, தனிப்பட்ட வாழ்க்கைமுறை – பணிச்சூழலுக்கு இடையே சமநிலையை உருவாக்கவே, நாம் அனைவரும் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறோம்.
Headspace செயலியானது, தியானம் மற்றும் நினைவாற்றல் நுட்பங்கள் அடிப்படையிலான செயலி ஆகும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல், நன்றாக உறங்கும் வழிமுறைகள் உள்ளிட்டவைகளை, இந்தச் செயலியானது தன்னகத்தே கொண்டுள்ளது. 3 முதல் 30 நிமிடங்கள் கால அளவிலான தியான அம்ர்வுகளை இது உள்ளடக்கி உள்ளது. மனப்பதட்டம் மற்றும் பய உணர்வுகளிலிருந்து வெளியே வரும் பொருட்டு, இந்தச் செயலியில் SOS அம்சமும் இடம்பெற்று உள்ளது. உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நடைமுறைகளைக் கண்காணிக்க உதவும் வகையிலான ஆலோசனைகள் நிறைந்த அனிமேசன் நூலகம், இந்தச் செயலியில் இடம்பெற்று உள்ளது.
உடற்பயிற்சிகளில் போதிய கவனம், உறக்க நிகழ்வில் மேம்பாடு
செயல்பாட்டின் கால அளவு மற்றும் அதில் ஏற்படும் முன்னேற்றம் உள்ளிட்டவைகளைக் கண்டறிய உதவுகிறது.
நாள்முழுவதும் மனமகிழ்ச்சியுடன் திகழச் செய்கிறது.
மன அமைதியை விரைவில் பெற ஏதுவாக 2 முதல் 3 நிமிடங்கள் கால அளவிலான தியான முறைகளும் உள்ளன.
உள்ளிட்ட நன்மைகள் இந்த Headspace செயலியின் மூலம் சாத்தியமாகின்றது.
உடற்பயிற்சி இலக்குகளைக் கண்காணிக்க உதவும் இந்தச் செயலிகளின் உதவியால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, நல்வாழ்க்கை வாழ்வோமாக….