மனநலப் பரிசோதனையின் முக்கியத்துவம் அறிவோமா?
குறிப்பிட்ட நபருக்கு மனநலக் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவ நிபுணர், சில வகைக் கேள்விகளைக் கேட்பார். அத்தகைய கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட நபர்ப் பதிலளிக்கும் நிகழ்வே, மனநலப் பரிசோதனை என்று வரையறுக்கப்படுகிறது. அவர் அளிக்கும் பதில்களின் மூலம், அவரது மனநிலை, சிந்தனை, நடத்தைகள் மற்றும் நினைவுத்திறன் உள்ளிட்ட அம்சங்களை மருத்துவர்ப் புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது.
மனநலப் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய, மனநலப் பரிசோதனைகள் உதவுகின்றன. இந்தப் பரிசோதனையின் போது, ஏதாவது குறைபாட்டிற்கான அறிகுறி தென்படும்பட்சத்தில், குறிப்பிட்ட மனநலப் பாதிப்பைக் கண்டறிய அதிகமான சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். மனநலப் பரிசோதனைகளை, உளவியல் சோதனைகள் என்றும் சிலர்க் குறிப்பிடுகின்றனர்.
அமெரிக்காவின் மக்கள்தொகையில் பெரும்பாலானோர், தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளாவதாக, அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிர்ச்சித் தகவல் வெளியிட்டு உள்ளது. மனநலப் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து, அதன் அறிகுறிகள் வேறுபடுகின்றன.
பொதுவாகக் காணப்படும் மனநலப் பாதிப்புகள் இங்கு வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
மனநிலைச் சார்ந்த பாதிப்புகள்
மனச்சோர்வு, பருவகால பாதிப்புக் குறைபாடுகள் (SAD)
கவலைத் தொடர்பான பாதிப்புகள்
இந்த பாதிப்புகள், பெரும்பாலும் குழந்தைகளிடம் காணப்படுகின்றன. பயம்
உணவுமுறைச் சார்ந்த பாதிப்புகள்
அனோரெக்சியா, புலிமியா உள்ளிட்டவை இதில் அடங்குகின்றன.
கவனக்குறைவு ஹைபர் ஆக்டிவிட்டி பாதிப்பு (ADHD)
இந்தப் பாதிப்பானது, குழந்தைப் பருவத்தில் அதிகமாகத் தென்பட்டபோதிலும், சிலருக்கு அவர்களது இளமைப் பருவத்திலும் தொடர்கிறது.
மனச்சிதைவு நோய் உள்ளிட்ட உளவியல் பாதிப்புகள்
மனநலப் பாதிப்புகள் குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து வயதினருக்கும் வரும் என்பதால், அதற்கான சிறப்பான பரிசோதனைகளும் புழக்கத்தில் உள்ளன. சில பரிசோதனைகள், பொதுவான அறிகுறிகளையும், சில பரிசோதனைகள், மேம்பட்ட அறிகுறிகளையும் அடையாளம் காட்டுவதாக உள்ளன.
வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் உடல் ஆரோக்கியத்திற்கு மனநலப் பரிசோதனைகள் உதவுகின்றன.சில மனநலப் பாதிப்புகள், உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வகையில் உள்ளன. மனநலப் பரிசோதனைகள், நோயறிதல், சிகிச்சை முறைகளை முறையாகக் கடைபிடிப்பதன் மூலம், மனநலப் பாதிப்புகளில் இருந்து முழுமையான நிவாரணம் பெற இயலும்.
மனநலப் பரிசோதனைகளை மனநலப் பாதிப்பு மதிப்பீடு, உளவியல் மதிப்பீடு, உளவியல் சோதனை உள்ளிட்ட பெயர்களைக் கொண்டும் அழைக்கப்படுகிறது.
எதற்குப் பயன்படுத்தப்படுகிறது?
ஒருவருக்கு மனநலப் பாதிப்பு இருக்கின்றதா என்பதைக் கண்டறிய உதவும் முதல் நடவடிக்கையாக, மனநலப் பரிசோதனையானது உள்ளது. இது வழக்கமான மருத்துவப் பரிசோதனையின் ஒருபகுதியாகக் கூட இருக்கலாம்.
மனநலப் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளவர்கள்
மனநலப் பாதிப்பைக் கண்டறிய கூடுதல் சோதனைகள் தேவைப்படுபவர்கள்
நோயறிதல் சோதனைக்கு முன்னதாக, உடனடியாக மனநல கவனிப்பு தேவைப்படுபவர்கள்
அளிக்கப்பட்ட சிகிச்சை முறையாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்டறிய மனநலப் பரிசோதனையானது மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் வாசிக்க : மனநல பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிவது எப்படி?
அறிகுறிகள்
ஒவ்வொரு மனநலப் பாதிப்பிற்கும், ஒவ்வொரு விதமான அறிகுறிகள் காணப்படுகின்றன.
மனநலப் பாதிப்புகளுக்கான பொதுவான அறிகுறிகள்
- உணவு மற்றும் உறக்கம் – குறைந்த அளவு அல்லது அதிக அளவில் இருப்பது
- வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து விலகி இருத்தல், தனிமையை நாடுதல்
- உடலுக்குத் தேவையான ஆற்றல் இல்லாததால், விரைவில் சோர்ந்து போதல்
- எதிலும் விருப்பமின்மை
- வழக்கத்தைவிட அதிகமாகப் புகைப்பிடித்தல், மது வகைகளை அருந்துதல்
- வழக்கத்திற்கு மாறாக அதிகக் குழப்பம், ஞாபகசக்தி குறைதல், அதீதக் கோபம், கவலை
- அடிக்கடி மனநிலைப் பிறழ்வதால், உறவுகளிடையே பிரச்சினைகள்
- எப்போதும் மரணம், தற்கொலை எண்ணங்கள் ஏற்படுதல்
குழந்தைகளிடையே காணப்படும் அறிகுறிகள்
அடிக்கடி கோபப்படுதல் மற்றும் நடத்தைகளில் மாற்றம்
அடிக்கடி தலைவலி மற்றும் வயிற்றுவலி உணர்வு
கல்வி நடவடிக்கைகளில் சிரமம்
ஏதாவது தவறு ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் ஒரே செயலை அடிக்கடி செய்தல்
தற்கொலை, பயம், கவலைக் குறித்து அதிகம் பேசுதல்
பரிசோதனையின் போது என்ன நடக்கும்?
மனநலப் பரிசோதனையின்போது,உங்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகள் தொடர்பான கேள்விகளுக்கு நீங்கள் உரிய பதிலை அளிக்க வேண்டும். கேள்விகள் மனநிலை, உறக்க விகிதம், பசி உணர்வு உள்ளிட்டவைகள் தொடர்பானதாக இருக்கும். நீங்கள் அளிக்கும் பதில்கள் முழுமையானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் மருத்துவ நிபுணரால், உங்களுக்கு எவ்விதப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை அறிய உதவும்.
மனநலப் பாதிப்பைக் கண்டறிய எவ்வித நோயறிதல் சோதனையும் பயன்பாட்டில் இல்லை. இருந்தப்போதிலும், இப்பாதிப்பைக் கண்டறிய ரத்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. தைராய்டு பாதிப்பு அல்லது எலக்ட்ரோலைட் சமநிலையற்ற தன்மையானது, சில வகை மனநலப் பாதிப்புகளுக்குக் காரணமாக அமைவதால், ரத்த சோதனை அவசியமாகிறது.
இரத்த சோதனையானது, வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடைமுறைத் தான். எடுத்த ரத்த மாதிரியை ஆய்விற்கு உட்படுத்தும்போது, அதில் மூளை அல்லது நரம்பு பகுதிகளில் ஏதாவது பாதிப்பு இருப்பது தெரியவரும்பட்சத்தில், நரம்பியல் சோதனைகள் அல்லது மூளைப் பகுதியை ஸ்கேன் எடுத்துப் பார்ப்பது நல்லது.
பரிசோதனையின் முடிவுகள் தெரிவிப்பது என்ன?
மனநலப் பரிசோதனையின் முடிவில், உங்களுக்கு மனநலப் பாதிப்பிற்கான அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் அது என்ன வகையான பாதிப்பு, அதன் தீவிரம் எத்தகையது என்பதைக் கண்டறிய வேண்டும். மருத்துவ நிபுணர், அடுத்து என்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஆராய்வார். இத்தகைய அறிகுறிகளால், உடல்நலத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படின், அதைக் கண்டறியும் சோதனைகளை மேற்கொள்வார். பின் சிகிச்சை முறைகள் உடனடியாகத் துவங்கப்பட்டு, அதிலிருந்து விரைவில் மீள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சரியான நேரத்தில் மனநலப் பரிசோதனைகளை மேற்கொண்டு,அந்தப் பாதிப்பில் இருந்து விரைவில் விடுபட்டு, ஆரோக்கியமான நல்வாழ்வு வாழ்வோமாக…