உடற்பயிற்சியின் இடையே போதிய ஓய்வு அவசியமா?
தியானம் உள்ளிட்ட பயிற்சிகளைச் செய்வதன் மூலம் கிடைக்கும் நல்ல உணர்வானது,உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறது. தீவிர உடற்பயிற்சிகளுக்கு இடையே போதிய ஓய்வு அவசியம்.இதை ஒருநாளும் மறந்துவிட வேண்டாம். உடற்பயிற்சிகளுக்கு இடையே எடுத்துக்கொள்ளும் ஓய்வானது, உடலைப் பழைய நிலைக்குக் கொண்டுவர உதவும். நீங்கள் போதிய ஓய்வின்றி உடற்பயிற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும்பட்சத்தில், எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியாது என்பதே நிதர்சனம்.
உடற்பயிற்சியினிடையே ஓய்வின் மூலம் உடலை மீட்பது மிகவும் இன்றியமையாததாகும். உடற்பயிற்சி நாட்களுக்கு இடையே யோகா,நடைப் போன்ற மிதமான பயிற்சிகள் உடலுக்கு ஓய்வளிக்கின்றன.உதாரணமாக, நீங்கள் மராத்தான் ஓட்டப்போட்டிக்குப் பயிற்சி பெறுகிறீர்கள் என்றால், தீவிரப் பயிற்சிக்கு இடையே, யோகாப் பயிற்சியைப் பெற, அந்த ஓய்வு நாளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
செயல் மீட்பு நடவடிக்கையின் நன்மைகள்
கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டபோது, உடலின் தசைகள் மற்றும் திசுக்களுக்கு அதிகளவிலான ரத்த ஓட்டம் சென்றிருந்த நிலையில், எளிய மற்றும் மென்மையான பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், ரத்த ஓட்டமானது சீராகின்றது.
கடினமான உடற்பயிற்சிகளின் போது சேதமடைந்த தசைகளுக்கு அமினோ அமிலங்களும் ஆக்சிஜனும் கிடைப்பதால், அவை விரைவில் புத்துயிர்ப் பெறுகின்றன.
தசைகள் மற்றும் திசுக்களின் சேதத்திற்குக் காரணமான ஹைட்ரஜன் அயனிகள், லாக்டிக் அமிலம் உள்ளிட்ட கழிவுகள் உடலில் இருந்து வெளியேற உதவுகின்றன.
செயல் VS செயலற்ற மீட்பு
ஓய்வு நாட்களில், செயல் மீட்பு ரீதியாலான பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், உடல் முழுச்சோர்வு அடைவதைத் தடுக்க உதவும். இதற்கு நேர் எதிரானது செயலற்ற மீட்பு நாள் ஆகும்.ஏனெனில், இந்த நாள்களில் வெறுமனே படுக்கையில் கிடந்து மொபைல் போனில் வீடியோக்களைப் பார்ப்பதே பொழுதுபோக்காக இருக்கும். உடற்பயிற்சியின் போது போதிய ஓய்வு பெற, செயல் மீட்பு மற்றும் செயலற்ற மீட்பு ஆகிய இரண்டும் முக்கியம்.தசைகளில் காயங்கள் அல்லது புண் ஏற்பட்டால், விரைவில் குணமடைய அப்பகுதிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தேவை. மற்ற காலங்களில், சோர்வில் இருந்து விடுபட, உறக்கத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள். இந்த இரண்டு வகையான ஓய்வும், உடற்பயிற்சி பழக்கத்தின் வழக்கமான நடவடிக்கைகள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்…
செயல் மீட்பு நடவடிக்கைகள்
யோகாப் பயிற்சி
இது உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பது மட்டுமல்லாது, சரியான சுவாச நுட்பங்களையும், உடல் கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. யோகாப் பயிற்சியானது, உடைந்த மற்றும் சேதமடைந்த திசுக்களைச் சரிசெய்கின்றது. இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது.
டை சி
குறைந்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவல்லத் தற்காப்புக் கலையாக டை சி உள்ளது. இது உடலின் சமநிலையைப் பேணிக் காப்பதற்கும், உடல் விழிப்புணர்வை அதிகரிக்க உதவுகிறது. உடல் அமைதிக்கு உதவுவதோடு, நரம்பு மண்டலத்தைத் தூண்டுவனவாக உள்ளது. இத்தகைய உடற்பயிற்சிகள், மன அழுத்த பாதிப்பில் இருந்து மீட்க உதவுகிறது. வலி நிவாரண நன்மைகளையும் வழங்குகிறது.
12 வாரக் கால அளவிலான டை சி பயிற்சியை மேற்கொண்ட 72 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், கீல்வாத பாதிப்பு உள்ளவர்களுக்கு வலி மற்றும் விறைப்பு உணர்வு கணிசமாகக் குறைந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. டை சி, சிறந்த உடல் மற்றும் மனம் சார்ந்த பயிற்சியாக விளங்குகிறது.
மேலும் வாசிக்க : தசைகளின் வலிமையை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்
இலகுரகப் பயிற்சிகள்
நீங்கள் வழக்கமாக மேற்கொள்ளும் கடினமான பயிற்சிகளைக் காட்டிலும் 30 சதவீத அளவிற்கு இலகுவான பயிற்சிகள், ரத்த ஓட்டத்தைத் தூண்டுவது மட்டுமல்லாது, திசுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை விரைவாக வழங்க உதவுகின்றன.
இடுப்பு வலிமையை மேம்படுத்தும் பயிற்சிகள்
உங்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு, இடுப்பு மற்றும் உடல் மையப்பகுதியானது, தேவையான அசைவுகளுக்கு ஏற்ற ஆற்றலை வழங்குகிறது. சாதாரண நாட்களிலேயே, அடிவயிறு, இடுப்பு நெகிழ்வுகள், இடுப்பு சேர்க்கைகள், உள்ளிட்டவைகளை வலிமைப்படுத்திக் கொள்ளும்பட்சத்தில், நீங்கள் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, அது உங்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
ஊர்ந்து செல்லும் பயிற்சி
ஊர்ந்து செல்லும் பயிற்சியானது, முழுமையான உடல் வலிமை, சகிப்புத்தன்மை, கவனம், சிறந்த தோரணை உள்ளிட்டவற்றை உருவாக்குகிறது. இப்பயிற்சியின் போது, மூட்டுகளுக்குத் தேவையான இடைவெளி கிடைப்பதினால், இதயம், நுரையீரல் தசைகளுக்கு வலிமைக் கிடைக்கிறது. உங்களைச் சோர்வு நிலையில் இருந்து விடுபட வைத்து, புத்துணர்ச்சி அடைய வைக்கிறது.
சுய மயோபேஸியல் பயிற்சி
தசைகள் மற்றும் எலும்பைச் சுற்றி அமைந்து உள்ள இணைப்புத் திசுக்களை மசாஜ் செய்வதற்கான பயிற்சி இதுவாகும். இது கடினமான உடற்பயிற்சியை மேற்கொள்வதால் ஏற்படும் தசை வேதனையைக் குறைக்க உதவுவதாக, மருத்துவ இதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நீச்சல் பயிற்சி
குறைந்த தாக்க அளவிலான உடற்பயிற்சி பிரியர்களுக்கு, நீச்சல் பயிற்சி சரியான தேர்வு ஆகும். இது, உங்கள் மூட்டு இணைப்புகளைத் தளர்வடையச் செய்கிறது, உடலுக்குத் தேவையான நீட்சியை வழங்குகிறது. நீர் அழுத்தமானது, இதயம் மற்றும் தசைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
சீரான அளவிலான நடைப்பயிற்சி அல்லது ஓட்ட பயிற்சி
சீரான அளவிலான நடைப்பயிற்சி அல்லது ஓட்ட பயிற்சியானது இதயத்துடிப்பை மேம்படுத்துகிறது. இதயச் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது. நடை அல்லது ஓட்ட பயிற்சியை, தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
சீரான அளவிலான சைக்கிளிங் பயிற்சி
சீரான வேகத்தில் சைக்கிளிங் பயிற்சியை மேற்கொள்ளும்பட்சத்தில், அது மூட்டு இணைப்புகளுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தாமல், இதய நலனை ஊக்குவிக்கிறது. உடலின் கீழ்பகுதிக்குத் தேவையான சுழற்சியை மேம்படுத்துகிறது.
நடைப்பயணம்
வெளியிடங்களில் மிதமான வேகத்தில் நடைப்பயணம் மேற்கொள்வதன் மூலம், உடலின் பல்வேறு தசைகளின் செயல்பாடுகள் சீரடைகின்றன. குளூட்டுகள், உடலின் மையப் பகுதி மற்றும் கணுக்கால்கள் போதிய அளவிலான வலிமைப் பெறுகின்றன.
ரோலர்பிளேடிங்
இரத்த ஓட்ட சுழற்சியை மேம்படுத்துகிறது, இதய நலனுக்கு உதவுகிறது. உடலில் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
உடற்பயிற்சி இடையிலான ஓய்வு நாட்களில், மேற்குறிப்பிட்ட பயிற்சிகளைக் கவனமாகப் பின்பற்றி, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வீராக…