குழந்தைகளிடையே காணப்படும் நடத்தைக் குறைபாடுகள்
குழந்தைகள் என்றாலே, குறும்பு, எதிர்ப்பு, மனக்கிளர்ச்சி உணர்வுகளை அதிகம் கொண்டு இருப்பர். இது சாதாரண நிகழ்வுதான். இந்த நிலையில், சில குழந்தைகள், வயதுக்கு மீறிய, அசாதாரணமான நடத்தைகளை வெளிப்படுத்துகின்றனர். குழந்தைகளிடையே பல வகையான நடத்தைப் பாதிப்புகள் காணப்படுகின்றன. இவற்றில் சீர்குலைக்கும் வகையிலான நடத்தைப் பாதிப்புகள் (ODD), நடத்தைப் பாதிப்புகள் (CD), கவனக்குறைவு மிகைச் செயல்பாடு பாதிப்பு (ADHD) ஆகியவை அடங்கும்.
இந்த நடத்தைப் பாதிப்புகள், சவாலான நோயறிதல் நுட்பங்கள் மற்றும் அதிக கால அளவு உள்ளிட்ட பொதுவான அறிகுறிகளைத் தன்னகத்தே கொண்டு உள்ளன. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு, ஒரே நேரத்தில் இரண்டு பாதிப்புகள் கூட இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உணர்ச்சிகள், மனநிலைப் பாதிப்புகள், குடும்பங்களில் நிகழும் சிரமங்கள் உள்ளிட்டவை, இந்தக் குறைபாட்டின் அறிகுறிகளை மேலும் தீவிரமாக்குகின்றன.
சீர்குலைக்கும் வகையிலான நடத்தைப் பாதிப்புகள் (ODD)
இந்தப் பாதிப்பு கொண்ட குழந்தைகள் எப்போதும் எரிச்சல் உணர்வுடனோ அல்லது கோபமான மனநிலையிலோ உள்ளனர். எப்போதும் ஆக்ரோஷத் தன்மையுடனும், மற்றவர்களிடம் வாக்குவாதம் செய்பவர்களாகவோ இருப்பர். 12 வயதிற்கு உட்பட்ட 10 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு, இந்தப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதால், இந்தப் பாதிப்பு, தற்போது பொதுவான நிகழ்வாக மாறிவிட்டது. பெண்கள் 2 : 1 என்ற விகிதத்தில், இந்தப் பாதிப்பால் பாதிக்கப்படுகின்றனர்.
அறிகுறிகள்
ஒரு குழந்தையின் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில், அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையை வெளிப்படுத்துவது என்பது சாதாரண நிகழ்வே ஆகும். அதனை உன்னிப்பாகக் கவனித்து வருவதன் மூலம், அறிகுறிகளை முன்கூட்டியே கணித்து, பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம்.
எரிச்சலான மனநிலை மற்றும் கோப உணர்வு
எதனையும் எதிர்க்கும் மனப்பாங்கு
மன்னிக்க மனம் இல்லாமல் பழிவாங்கும் நிகழ்வு
அடிக்கடி சண்டைப் போடுதல்
வேண்டும் என்றே மற்றவர்களை எரிச்சலூட்டுதல்
யோசிக்காமல் கடுஞ்சொற்களைப் பேசுதல்
உள்ளிட்டவை, இதன் அறிகுறிகள் ஆகும்.
நன்னடத்தைக் குறைபாடு (CD)
சமூக நடைமுறைகளை உடைக்கும் வகையிலான நடத்தை முறையை, இந்த நன்னடத்தைக் குறைபாடு விளக்குகிறது. வீடு, பள்ளி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அமைப்புகளில், தவறான நடத்தைமுறை, மீண்டும், மீண்டும் அரங்கேறுகிறது. அவை, குடும்ப அமைப்பில், வெளிப்படையான குறைபாடுகளையே ஏற்படுத்துகின்றன. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 5 சதவீதத்தினர், நன்னடத்தைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், சமூகத்தில், கெட்ட குழந்தைகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். இந்தக் குறைபாடானது, 4 : 1 என்ற விகிதத்தில், ஆண் குழந்தைகளிடையே பொதுவானதாக உள்ளது.
அறிகுறிகள்
விதிகளை மீறும் மனப்பான்மை
தொடர்ந்து பொய் பேசுதல்,
சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுதல்
அதீதச் சோம்பல்
பெரியவர்களுக்குக் கீழ்படியாத நிலை
கடுஞ்சொற்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை, இதன் அறிகுறிகள் ஆகும்.
கவனக்குறைவு மிகைசெயல்பாடு குறைபாடு (ADHD)
இது மனக்கிளர்ச்சி மற்றும் விரைந்து செயல்படும் தன்மையால் ஏற்படும் மூளைக் குறைபாடு ஆகும்.சிறு குழந்தைகளில் 2 முதல் 5 சதவீதத்தினர், இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். சிறுவர்களுக்கு இந்தக் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக, ஆராய்ச்சிகளில் தெரியவந்து உள்ளன. நன்னடத்தைக் குறைபாடு பாதிப்புக்குள்ளான 3 குழந்தைகளில், ஒருவருக்கு, இந்த ADHD பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
அறிகுறிகள்
அதிகக் கவனக்குறைவு
அதீதச் செயல்பாடு
இயல்பாகவே மனக்கிளர்ச்சி நிலை
விதிமுறைகளைப் பின்பற்ற இயலாத நிலை
எதிலும் போதிய கவனம் செலுத்த இயலாத நிலை உள்ளிட்டவை, இதன் அறிகுறிகள் ஆகும்.
மேலும் வாசிக்க : வைட்டமின் மற்றும் மினரல்கள் பற்றாக்குறை அறிகுறிகள்
நடத்தைக் குறைபாடு பாதிப்புகள் சிக்கலானவை மற்றும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையது ஆகும். உதாரணமாக, நன்னடத்தைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தை, விரும்பத்தகாத நடத்தைகளை வெளிப்படுத்தும் அதேநேரத்தில், கவனக்குறைவு மிகைச் செயல்பாடு பாதிப்பு, பதட்டம், மனச்சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளையும் கொண்டு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
குழந்தை நல மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், குழந்தை மனநல மருத்துவர் உள்ளிட்டோர் மேற்கொள்ளும் பிரத்யேகச் சேவைகளின் மூலம், இந்த நடத்தைக் குறைபாடுகளைக் கண்டறிகின்றனர்.
பெற்றோர், குழந்தை மற்றும் ஆசிரியர்களுடன் ஆழமான நேர்காணல்கள், நடத்தைச் சரிபார்ப்பு பட்டியல்கள் மற்றும் கேள்வித்தாள்களைப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்தும் உணர்ச்சிப் பாதிப்புகள், உடல் அல்லது குடும்பச் சூழல் காரணமாக ஏற்படும் அழுத்தங்களைக் கண்டறிவது அவசியம்.
நோய்வாய்ப்பட்ட பெற்றோர் அல்லது மற்ற குழந்தைகளால் கொடுமைப்படுத்தப்படுவது உள்ளிட்ட நிகழ்வுகள், குழந்தைகளின் வழக்கமான நடத்தைகளில் திடீர்ப் பாதிப்பினை உருவாக்குவதற்குக் காரணமாக அமையலாம்.இத்தகைய காரணிகள் குறித்த புரிதல் இருக்கவேண்டியது அவசியமாகும்.
குழந்தைகளை, நடத்தைக் குறைபாடுகளில் இருந்து உரிய சிகிச்சைமுறைகளை அளித்து அவர்களை முழுமையாகக் காத்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவோமாக..