• Home/
  • PET CT/
  • MRI ஸ்கேன்கள் – முழுமையான தகவல்கள்
A doctor preparing CT machine for scanning.

MRI ஸ்கேன்கள் – முழுமையான தகவல்கள்

உடலின் உள் உறுப்புகளான மூளை, முதுகெலும்பு, இதயம், மூட்டு இணைப்புகள் மற்றும் மென் திசுக்கள் உள்ளிட்டவற்றின் அமைப்புகளைத் துல்லியமாகப் படம் பிடிக்கவும், இதில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான உரியச் சிகிச்சைகளை வழங்க, MRI ஸ்கேன்கள் நமக்கு உதவிபுரிகின்றன. மற்ற இமேஜிங் சோதனைகளான எக்ஸ்ரே மற்றும் CT ஸ்கேன்களைப் போன்று, MRI ஸ்கேன்களில், கதிரியக்கம் பயன்படுத்தப்படுவது இல்லை. MRI ஸ்கேன் சோதனைகளில் வலிமையான காந்தப்புலம் மற்றும் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி, உடல் உள் உறுப்புகள் மற்றும் திசுக்கள் படம் பிடிக்கப்படுகின்றன. நோய்களைக் கண்டறிய உதவும் மற்ற சோதனைகளுடன் ஒப்பிடுகையில், MRI ஸ்கேன் சோதனை, மிகத் துல்லியமான படங்களை நமக்குத் தருகிறது.

MRI ஸ்கேன் சோதனைகள் ஏன் மேற்கொள்ளப்படுகிறது?

உடலின் முக்கிய உள் உறுப்புகளான மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் முக்கிய சிக்கல்களான மூளைக்கட்டி, மல்டிபிள் ஸ்கிளீரோசிஸ், பக்கவாதம் உள்ளிட்டவற்றின் பாதிப்புகளைக் கண்டறிவதில், MRI ஸ்கேன் சோதனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆர்த்ரைட்டிஸ், குருத்தெலும்பு சேதம், சேதமடைந்த தசைநார்கள் போன்ற மூட்டு இணைப்புகளில் ஏற்படும் பாதிப்புகளையும் கண்டறிய MRI ஸ்கேன் சோதனைகள் உதவுகின்றன. முதுகெலும்பு பகுதிகளில் ஏற்படும் காயங்கள், மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தவல்ல மார்பகப் புற்றுநோய், புராஸ்டேட் புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறிய உதவுகிறது.

MRI ஸ்கேன் சோதனைச் செயல்படும் விதம்

மனித உடல் நீர் மற்றும் கொழுப்பு மூலக்கூறுகளால் ஆனது. இந்தப் பகுதிப் பொருட்களில், ஹைட்ரஜன் அணுக்கள் அதிகளவில் உள்ளன. MRI ஸ்கேனர் மேடையில் நீங்கள் படுக்க வைக்கப்பட்ட நிலையில், MRI ஸ்கேனரில் உள்ள திறன்மிகு காந்தம், உங்கள் உடலின் மீது வலிமையான காந்தப்புலத்தைப் பாய்ச்சுகிறது. இந்தக் காந்தப்புலம், உடலில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களை, ஒரே திசையில் ஒருங்கமைக்கிறது. இதன்பின்னர், ஸ்கேனரில் உள்ள காந்தம், ரேடியோ அலைகளை, அந்த அணுக்களின் மீது செலுத்துகிறது. இந்த ஆற்றலை உட்கிரகிக்கும் அணுக்கள், தங்களது இயல்பான நிலைமைக்குத் திரும்புகின்றன. அப்போது வெளியாகும் சிக்னல்கள், மின்னணு சிக்னல்களாக மாற்றப்பட்டு, கணினிக்கு அனுப்பப்படுகின்றன. கணினி, இந்தச் சிக்னல்களைப் பகுப்பாய்வு செய்து, உடல் உறுப்புகளின் விரிவான குறுக்கு வெட்டு படங்களாக மாற்றுகிறது. இந்தப் படங்கள், உறுப்புகளில் நிகழ்ந்து உள்ள அசாதாரண மாற்றங்கள் குறித்த தகவல்களை நமக்கு வழங்குகின்றது.

MRI ஸ்கேன் எடுக்கும் படங்களின் துல்லியத் தன்மையை அதிகரிக்கக் கான்டிராஸ்ட் ஏஜெண்ட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, ஸ்கேன் எடுப்பதற்கு முன்பாக, ஊசி மூலம் நோயாளியின் உடலில் செலுத்தப்பட்டு, ரத்த ஓட்டத்தில் கலக்கப்படுகிறது. இதன்மூலம், குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்டு உள்ள அசாதாரண மாற்றங்களைத் துல்லியமாகக் காண உதவுகிறது. இதன்காரணமாக, நோய்க்கண்டறிதல் இலகுவாக நடைபெறுவதோடு, தேவையான சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ள நல்வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

பயன்கள்

  • நமது உடலில் மறைந்து உள்ள பாதிப்புகளையும் கண்டறிய MRI ஸ்கேன் சோதனைப் பேருதவி புரிகிறது.
  • இதயத்தில் ஏற்படும் நோய்கள் மற்றும் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து இதயம் நலமுடன் இயங்க உதவுகிறது.
  • மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதோடு மட்டுமல்லாது, அதற்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் பலனை மதிப்பிடல்
  • முதுகெலும்பு பகுதியில் ஏற்படும் காயங்கள், மூளைக் கட்டிகள் மற்றும் நரம்பியல் சம்பந்தமான குறைபாடுகளைக் கண்டறிகிறது.
  • கருப்பை மற்றும் கல்லீரல் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிகிறது.
  • இடுப்பு வலிக்கான மூலத்தை அறிய உதவுகிறது.

A radiographer conducting CT scan on a female patient.

MRI ஸ்கேன் சோதனைகளின் வகைகள்

உடலில் உள்ள பல்வேறு பாகங்களில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறியும் பொருட்டு, MRI ஸ்கேன் சோதனைகள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.

மூளைப்பகுதி MRI ஸ்கேன் :

மூளைப் பகுதியில் நிகழும் அசாதாரண மாற்றங்களான் கட்டிகள், வீக்கம், ரத்தக்கசிவு உள்ளிட்ட பாதிப்புகள்

முதுகெலும்பு MRI ஸ்கேன் :

முதுகெலும்பு பகுதியில் ஏற்படும் காயங்கள், வட்டு குடலிறக்கம் உள்ளிட்ட பாதிப்புகளைக் கண்டறிகிறது.

தசைக்கூட்டு MRI ஸ்கேன் :

மூட்டு இணைப்புகளில் ஏற்படும் பாதிப்புகளான ஆர்த்ரைட்டிஸ், குருத்தெலும்பு சேதம் உள்ளிட்ட பாதிப்புகளை, இந்த ஸ்கேன் சோதனையின் மூலம் கண்டறியலாம்.

மார்பக MRI ஸ்கேன் சோதனை :

மார்பகப் புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிய உதவுகிறது

வயிற்றுப்பகுதி MRI ஸ்கேன் :

வயிற்றுப்பகுதியில் உள்ள உறுப்புகளான கல்லீரல், இரைப்பை, சிறுநீரகம் உள்ளிட்டவற்றில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களைக் கண்டறிய உதவுகிறது.

மேலும் வாசிக்க : இதயப் பகுதியின் MRI ஸ்கேன் – தெரிவிப்பது என்ன?

பாதுகாப்பு அம்சங்கள்

நோய்களைக் கண்டறிய உதவும் மற்ற இமேஜிங் சோதனை முறைகளை ஒப்பிட்டும் போது, MRI ஸ்கேன் சோதனையில், கதிரியக்கம் பயன்படுத்தப்படாததால், இது மிகவும் பாதுகாப்பான சோதனை முறையாக உள்ளது. பேஸ்மேக்கர், மெட்டல் பிளேட் உள்ளிட்ட உலோகம் சார்ந்த பொருட்களை உடலில் பொருத்திக் கொண்டவர்கள், இந்தச் சோதனையைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இந்தச் சோதனையில், வலிமையான காந்தப்புலம் பயன்படுத்தப்படுவதால், விரும்பத்தகாத பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

பக்கவிளைவுகள்

MRI ஸ்கேன் சோதனையில், குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்றபோதிலும், சோதனையின் போது ஏற்படும் சத்தம், சிலருக்குப் பய உணர்வை ஏற்படுத்த கூடும். ஸ்கேன் படங்களின் துல்லியத்தன்மையை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் கான்டிராஸ்ட் ஏஜெண்ட், சிலருக்கு ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்திவிடும் உள்ளிட்ட சிறு சிறு இடர்பாடுகள் இதில் இருக்கத்தான் செய்கின்றன என்பதை மறுக்க இயலாது.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.